உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில், 31 சதவீதம் மேய்ச்சல் நிலம் என்னும் புல்வெளிப் பகுதிகளை இழந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி, 'யுனைடெட் நேஷன்ஸ் கன்வென்ஷன் டு காம்பட் டிசர்டிஃபிகேஷன்' (United Nations Convention to Combat Desertification - UNCCD) என்கிற சர்வதேச அமைப்புக்கு அளித்த அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2005 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த புல்வெளிகளின் பரப்பளவு 1.8 கோடி ஹெக்டேரிலிருந்து 1.23 கோடி ஹெக்டேர் அளவுக்குக் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரில் இருக்கும் புல்வெளிப் பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புல்வெளி நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இப்படி மேய்ச்சல் நிலங்கள் மிகப்பெரிய அழிவைச் சந்திப்பதற்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விஷயங்கள் காரணங்களாக இருக்கின்றன. கால்நடைகளால் தேவைக்கு அதிகமாக மேயப்படுவது, காடுகளின் அழிப்பு ஆகியவை மேய்ச்சல் நிலங்கள் மெல்ல அழிந்து போவதற்கு நேரடியான காரணங்கள்.ஆக்கிரமிப்பு காரணமாக, புல்வெளி நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படுவது, மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவை மறைமுகமான காரணங்கள். இந்த வகை நிலங்களைத் தவிர சில காட்டு நிலப்பகுதிகள், குளம், ஆறு போன்ற பொதுவான பகுதிகளும் கடந்த பத்து ஆண்டுகளில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் உணவு, தண்ணீர், கால்நடைகளுக்கான தீவனம், விறகு போன்ற தினசரி வாழ்க்கைக்கான தேவைகளை, பொதுவான நிலங்களிலிருந்தே பெற்று வருகிறார்கள். இப்படி மக்களின் வாழ்வாதாரத்துக்குத் துணை நிற்கும் பொதுவான நிலங்களின் அளவும் 9.5 கோடி ஹெக்டேர் என்கிற அளவில் இருந்து 7.3 கோடி ஹெக்டேர் அளவுக்குக் குறைந்துவிட்டது. விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கம் போன்றவை ஆக்கிரமிப்பு காரணமாகவும் புல்வெளி நிலங்கள் அழிந்து வருகின்றன.- சு.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !