உள்ளூர் செய்திகள்

தோல்வி பக்குவப்படுத்தும்!

வெற்றிகளை மட்டுமே இன்றைய மாணவர்களுக்கு நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். அதனால்தான் தோல்வி என்றதுமே துவண்டு விடுகின்றனர். வாழ்வில் இரண்டுமே உண்டு என்பதை உணரவும் வேண்டுமல்லவா? 'சமீபத்தில் நீங்கள் அடைந்த தோல்வி என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்டிருந்தோம். சென்னை, மடிப்பாக்கம், சாய்ராம் வித்யாலயா மாணவர்களைச் சந்தித்தோம். அவர்களது கருத்துகள் இதோ: ச.திவ்யதர்ஷிணி, 7ஆம் வகுப்புஎனக்கு பூப்பந்து பிடிக்கும். என் அப்பா, ஒரு கோச்சிங் வகுப்பில் சேர்த்துவிட்டாங்க. சேர்ந்த ரெண்டாவது நாள் அங்கே ஒரு போட்டி வச்சாங்க. ஐஞ்சாவது படிக்கும் ஒரு சின்னப்பொண்ணுகூட போட்டின்னு சொன்னாங்க. சின்னப்பொண்ணு தானேன்னு நினைச்சுட்டேன். எனக்குத் தோல்விதான் கிடைச்சது. ரொம்ப வருத்தமாயிடுச்சு. வீட்டிலையும் ஸ்கூல் நண்பர்களும் வெற்றியும் தோல்வியும் சகஜம்னு ஆறுதல் சொன்னாங்க. நல்லா பயிற்சி எடுத்து, அடுத்த முறை நிச்சயம் வெற்றிபெறுவேன்.ஆ.அபர்ணா, 7ஆம் வகுப்புபள்ளி இடைத்தேர்வில் கணக்கில் 100 மார்க் வாங்கவேண்டும்னு கடுமையாகப் படிச்சு எழுதினேன். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்ணில் பாதிதான் கிடைச்சது. இந்தத் தோல்விக்காக நிறைய அழுதேன். டீச்சர் என்னோட கேள்வித்தாளையும் பதிலையும் வச்சு, சரி பார்க்கச் சொன்னாங்க. அப்படிச் செஞ்சபோது, நான் செய்த தவறுகள் எனக்குப் புரிஞ்சது. அடுத்தமுறை 100 மார்க் எடுப்பதுதான் இப்போதைய லட்சியம்.க.கேசிகா, 11ஆம் வகுப்புஎனக்கு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. 10ஆம் வகுப்பில் 93 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தேன். நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேரப் போனபோது, லேட்டாக வந்ததாகச் சொல்லி சேர்க்கவில்லை. இந்தத் தோல்வி, என் தன்னம்பிக்கையைக் காலி செஞ்சுடுச்சு. பயிற்சிக்குப் போற மத்த மாணவர்களும் அங்கே சொல்லிக்கொடுப்பதை பகிர்ந்து கொள்வதில்லை. வீட்டில் ஆதரவாக இருக்காங்க. இன்டர்நெட்டுல கிடைக்கும் நீட் பாடங்களைக் கொண்டு, இப்போது பயிற்சி எடுத்துவருகிறேன். நீட்டா நானான்னு பார்த்துடுவேன்.ச. தருண், 11ஆம் வகுப்புகாமர்ஸ் எடுத்திருக்கேன். நினைச்ச மாதிரி பாடங்கள் சுலபமாக இல்லை. சமீபத்துல நடந்த தேர்வுலகூட சரியா எழுதவில்லை. யாரும் என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கலை. எல்லோரும் திட்டுறாங்க. அப்போ தான் தோணிச்சு. நம்ம படிப்பு, நாம தான் சரியா படிக்கணும்னு. நண்பர்கள் உதவியோடு இப்போ கவனமாகப் படிச்சுக்கிட்டு இருக்கேன்.வ. தருண்லோகேஷ், 11ஆம் வகுப்பு9ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒரு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டேன். படிக்கவும் எழுதவும் தெரிஞ்சதால நானே பயிற்சி எடுத்திருந்தேன். எப்படியும் முதல் பரிசு வாங்குவேன்னு நம்பினேன். ஆனா, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. அதீத தன்னம்பிக்கை கூடாதுன்னு அன்று தெரிந்துகொண்டேன். இன்றுவரை அதை படிப்பினையாக வைத்துக்கொண்டு செயலாற்றுகிறேன்.மு. அனிருத், 11ஆம் வகுப்புசின்ன வயசில் இருந்தே, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் கண்காட்சியில் பங்குபெறுவேன். பரிசு பெறுவேன். இந்த ஆண்டு கலந்துகொண்டவற்றில், இதுவரை தோல்விதான் கிடைச்சிருக்கு. ரொம்ப வருத்தமாக இருந்துச்சு. என் அம்மா எனக்குத் துணையாக இருக்காங்க. தோல்விகள் பக்குவப்படுத்தும், தோல்வியைக்கண்டு சுருங்கிடாதேன்னு சொல்லிக் கொடுத்தாங்க. நம்பிக்கையோடு, அடுத்த கண்காட்சியில் கலந்துகொள்ள இப்போதே தயாராகி வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !