உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை... அதுதானே வாழ்க்கை!

ஜேசன் கேஸ் (Jason Gaes)ஆறு வயதுச் சிறுவன் ஜேசனுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது, அவனுடைய ஆசிரியர் ஒருவர் புற்றுநோய் தொடர்பான கதைப் புத்தகத்தை அவனுக்கு வாசிக்கக் கொடுத்தார். அக்கதையின் முடிவில் அந்த நோயாளி இறந்துபோவதாக எழுதப்பட்டிருந்தது. இது ஜேசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, தானே ஒரு புத்தகத்தை எழுதுவது என்று முடிவு செய்தான். முதலில் அவனுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து, தனக்குத் தோன்றும் எண்ணங்களை ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொண்டான். பின்னர் அதைத் திரும்பக் கேட்டபடி கதைபோல் எழுதத் தொடங்கினான். அதற்கான படங்களை அவனது சகோதரர்களே வரைந்தனர். முழுமையடைந்த அந்தக் கதையை வாசித்த அவனது அம்மா நெகிழ்ந்துபோனார். தொடர் சிகிச்சையின் பலனாக ஜேசன் புற்றுநோயில் இருந்து மீண்டுவிட, அதைக் கொண்டாடும் வகையில் அவனது பெற்றோர் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தனர். விருந்திற்கான அழைப்பிதழோடு அவனது கதையையும் சேர்த்து அச்சிட்டு அவனது பெற்றோர் வழங்கினர். அது ஒரு பதிப்பாளரை அடைய, அவர் அக்கதையைப் பதிப்பிக்க முன்வந்தார். முதலில் அதற்குச் சம்மதிக்காத ஜேசனின் குடும்பத்தினர் பிறகு ஒப்புக்கொண்டனர். 1987-ஆம் ஆண்டு 'My Book for Kids with Cansur' என்ற பெயரில் அப்புத்தகம் வெளிவந்தது.புற்றுநோய் பாதித்த பல குழந்தைகளுக்கு அது ஒரு வழிகாட்டியாக, நம்பிக்கை தரும் புத்தகமாக மாறியது. ஒரு சிறுவன் தனக்கு நேர்ந்த சம்பவங்களை, அவை குறித்த தனது கருத்துகளைக் கூடுதல், குறைவு ஏதுமில்லாமல் அவனுடைய பார்வையிலேயே எழுதியிருந்ததால், இப்புத்தகம் வாசிப்பவர்களின் மனத்தைக் கவர்ந்தது. மேலும் ஜேசனின் புத்தகத்தை மையமாக வைத்து, 'You Don't Have to Die' என்ற ஆவணப்படம் வெளியானது (1988). இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. புற்றுநோய் சிகிச்சையின் பின்விளைவுகளோடு கடந்த 33 ஆண்டுகளாகப் போராடிவரும் ஜேசன், தனது படைப்பின் வழியே இன்றும்கூடப் பலருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய நபராக மாறியிருக்கிறார்.ஜி.சரண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !