விழு....விழுது
ஆல மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடியதுண்டா? தலைகீழாய்ப் பிடித்துத் தொங்கியதுண்டா? அதன் விழுதில் பல் துலக்கியதுண்டா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த மரத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...வேறு எந்த மரத்திற்கும் இல்லாத இயல்பு ஆல மரத்திற்கு உண்டு. இதில் மட்டும் கிளைகளில் வேர் இருப்பது போலவே விழுதுகள் தொங்கும்! ஆல மரம் படர்ந்து பெரிதாக வளரச் கூடியது. அதன் கிளைகளோ வலுவற்றவை. அப்படிப் படரும் கிளைகள் உடைந்துவிடாமல் இருக்க, இயற்கை அளித்த கொடைதான் விழுது. காற்றில் உடைந்து விழாமலும், மழையில் சரிந்து விடாமலும் இருக்க விழுதுகள் உதவுகின்றன. தரையில் ஊன்றிய விழுதுகள் காலப்போக்கில் மரமாகவே மாறிவிடுகின்றன.இது, இந்தியாவின் தேசிய மரமும் கூட. தமிழ்நாட்டில் அடையாறில் உள்ள ஆலமரம், உலகில் உள்ள பழமையான மரங்களில் ஒன்று. இந்த ஆலமரத்தடியில்தான் சுதந்திரத்திற்கு முன் அன்னிபெசன்ட் அம்மையார் பொது மக்களிடம் உரை நிகழ்த்தினார். அந்தச் சொற்பொழிவைக் கேட்டவர்களில் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும் ஒருவர்.சரி விழுதுக்கு ஏன் அப்பெயர் வந்தது தெரியுமா? அது மேலிருந்து கீழ்நோக்கி 'விழு'வதால் விழுதானது.