உள்ளூர் செய்திகள்

மரபியலின் தந்தை

கிரிகர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு பாதிரியார். இவரது காலம் 1822 - 1884. தனது குடியிருப்பில் ஆயிரக் கணக்கில் பட்டாணிச் செடிகளை வளர்த்தார். அவற்றில் வெவ்வேறு பண்புகளைக் கொண்ட செடிகள் இருந்தன. ஊதா நிறத்தில் பூக்கும் செடிகள் ஒரு வகை. வெள்ளை நிறத்தில் பூக்கும் செடிகள் இன்னொரு வகை. ஊதா நிறத்தில் பூக்கும் செடிகளில் சுய மகரந்தச் சேர்க்கை நடந்தபோது உற்பத்தி ஆன விதைகள், ஊதா நிறத்தில் பூக்கும் செடிகளையே உற்பத்தி செய்தன. மெண்டல், வெள்ளை நிறப் பூச்செடியின் மகரந்தத்தை ஒற்றி எடுத்து, ஊதாப் பூச்செடியின் சூலக முகட்டில் வைத்து அயல் மகரந்தச் சேர்க்கை நடத்திப் பார்த்தார். இந்த விதைகளில் இருந்து முளைத்த செடிகள் அனைத்திலும் ஊதா நிறப் பூக்களே பூத்தன. இந்தச் செடிகளை இரண்டாம் தலைமுறைச் செடிகள் என்று கொள்வோம்.அடுத்து இந்த இரண்டாம் தலைமுறை ஊதாப் பூச்செடிகளில் சுய மகரந்தச் சேர்க்கை நடத்தினார். இதன் விதைகள் முளைத்தபோது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. நான்கில் ஒரு பங்கு செடிகளில் வெள்ளை மலர்கள் பூத்தன. இரண்டாம் தலைமுறையில் தோன்றாத வெள்ளைப் பூச்செடி மூன்றாம் தலைமுறையில் எப்படித் தோன்றியது? வெள்ளை நிறத்தில் பூப்பதற்கு உரிய ஏதோ ஒரு காரணி, இரண்டாம் தலைமுறைச் செடிகள் சிலவற்றில் இருந்திருக்கிறது. ஆனால் அந்தக் காரணிக்குரிய பண்பு இரண்டாம் தலைமுறையில் வெளிப்படவில்லை; ஆனால், அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு இருக்கிறது என்று மெண்டல் நிறுவினார். பூக்களின் வண்ணத்தைத் தவிர பிற பண்புகளையும் வைத்து சோதனை நடத்தினார். எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான முடிவுகள்தான் கிடைத்தன. இன்று மெண்டல் 'மரபியலின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். ஆனால், அவரது கண்டுபிடிப்புக்கு அவரது வாழ்நாளில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.ஆஸ்வால்ட் அவெரி (Oswald Avery) என்ற விஞ்ஞானி, பரம்பரைப் பண்புகளுக்கான காரணிகள், 'டி.என்.ஏ'யில் இருக்கிறது என்று 1944ல் கண்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !