அறிவுக்கு விருந்து, பட்டம்!
நாசா செல்லும் சென்னை மாணவர்கள்!* தனக்கென பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்துடன், சமூக ஊடகத்தில் பிரபலமாக விளங்கும், கேரளத்தின் பூரம் திருவிழாவில் தவறாமல் கலந்துகொள்ளும், 55 வயது தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் என்பது யார்?* மே 18, 1974ல் வெற்றிகரமாக நடந்த இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனைக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களுக்குப் பதில் தெரியுமா? அப்படியென்றால், நீங்கள் நிச்சயம், தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சென்னையில் நடத்திய 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி வினா போட்டியில் முழு மதிப்பெண்களை அள்ளியிருப்பீர்கள்!ஆம், 152 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ தங்கங்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதில் சொல்லி அசத்தினார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள்.காலை முதலே சென்னை கலைவாணர் அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பேருந்துகளிலும் வேன்களிலும் கார்களிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் வந்து குழுமிக்கொண்டே இருந்தார்கள்.சரியாக 9 மணிக்குத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் 'பதில் சொல், அமெரிக்கா செல்' போட்டி தொடங்கியது. முதல் சுற்றில் கேட்கப்பட்ட 20 கேள்விகளில், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகளும் அடக்கம். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், எட்டு அணிகள் தேர்வு பெற்று மேடையேறின.இறுதிச் சுற்றுப் போட்டியில் முதலில் 'வாய்ப்புகள் மூன்று' என்ற சுற்று தொடங்கியது. அணிகள் பெரிய அளவில் மதிப்பெண்கள் சேர்க்கவில்லை. இரண்டாவது சுற்று, 'குறுக்கெழுத்து' சுற்று. பல அணிகள் விடைகளைச் சரியாகச் சொல்லி, மதிப்பெண்களைப் பெற்றார்கள். மூன்றாவது 'வெற்றியை உறுதி செய்' என்னும் 10, 20, 30 மதிப்பெண்களுக்கான கேள்விகள் நிறைந்த சுற்று. இதிலும் ஒருசில அணிகள் மட்டுமே பதில் தெரிவித்தன.அப்புறம் ஆரம்பித்தது, பட்டம் இதழில் இருந்து மட்டுமே தொகுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட, 'பட்டம்...வேகம்...விவேகம்' சுற்று. ஆரம்பத்தில் இருந்தே செம்பாக்கம், சீயோன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான மூ.ப. தனுஷ்ரியும், ர. பெரில் சயனாவுக்கு பட்டையைக் கிளப்பினர். இது ஒரு 'பஸ்ஸர்' சுற்று. கேள்விகளைக் கேட்டு முடிக்கும் முன்னரே, சரியான விடைகளைச் சொல்லி, மதிப்பெண்களை குவித்தனர் இந்த மாணவர்கள். ஒரு கட்டத்தில், வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த ஷ்ரவணதீபனுக்கே சந்தேகம் வந்துவிட்டது. உண்மையில், மற்ற 'பஸ்ஸர்'கள் வேலை செய்யவில்லையோ என்று கேட்டு, அவை அனைத்தையும் மீண்டும் அழுத்திப் பார்த்துச் சோதிக்கச் செய்தார். அவை அனைத்தும் சரியாகவே வேலை செய்தன. ஆனால், சீயோன் பள்ளி மாணவர்களின் அறிவு வேகத்துக்கு முன்னால், 'பஸ்ஸர்' வேகம் தோற்றுப் போனது!!சொல்லவே வேண்டாம், இந்த அணி தான், அதிக மதிப்பெண்களைக் குவித்து, அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு மையமான 'நாசா'வுக்குச் செல்வதற்குத் தேர்வான சென்னை மணடல அணி.இரண்டம் இடத்தை, தூய மாற்கு பதின்முறை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பா. பழனிகுமரனும்க.நிகில்குமாரும் பெற்றனர். பி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அ.தினேஷ்குமாரும் சு.விஷாலும் மூன்றாம் பரிசைத் தட்டிச் சென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் மடிக்கணினிகள், பரிசுக் கூப்பன்கள், கைக்கடிகாரங்கள் போன்ற பரிசுகளை வழங்கி பெருமைப்படுத்தினர், விண்வெளி விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரையும், தமிழ்மொழி, பண்பாட்டுத் துறை அமைச்சருமான கே.பாண்டியராஜனும். இருவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. “பட்டம் இதழை இன்னும் சிறப்பாக மேம்படுத்த நானும் ஒரு காரணமாக இருப்பேன். தேசிய அளவில் உள்ள விஞ்ஞான் பிரசார் போன்ற நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்வேன். மாணவர்களுக்குப் புதிது புதிதாக கற்றல் நடைபெற வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்.” என்று வாழ்த்துரையில் தெரிவித்தார் மயில்சாமி அண்ணாதுரை.“மனத்தை விசாலமாக்கக்கூடிய, இதயத்தை விரிவடையவைக்கக்கூடிய அற்புத விஷயங்களைப் 'பட்டம்' இதழ் தாங்கி நிற்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள், தோல்வி எனும் 'வெகுமதி'யைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். நீங்கள் இந்த வினாடி-வினா நிகழ்ச்சியில் பெற்ற அனுபவம் முக்கியமானது. அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருப்பீர்கள். அது உங்களை மேம்படுத்தும்.” என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார் அமைச்சர் கே.பாண்டியராஜன்.முன்னதாக, பட்டம் இதழை வாங்கிக் கொடுத்து, ஊக்கப்படுத்தும் பள்ளிகளின் தாளாளர்களுக்கும் முதல்வர்களுக்கும் 'தங்கத் தாமரை' விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறை ஆணையரான சிஜி தாமஸ் வைத்யன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.“சென்ற முறை நூலிழையில் முதல் இடத்தை இழந்தோம். அதனால் இம்முறை பட்டம் இதழ்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்துவிட்டு வந்தோம். இதோ 'நாசா'வுக்குப் பறக்கப் போகிறோம். பட்டம் இதழ் அறிவுக்கு விருந்து என்பதை நாங்கள் அனுபவப்பூர்மாக உணர்ந்துகொண்டோம்.” என்று மகிழ்ச்சி பொங்க பேசினார்கள் முதல் பரிசு பெற்ற மாணவர்களான மூ.ப. தனுஷ்ரியும், ர.பெரில் சயனாவும்.- ஆர்.வெங்கடேஷ்