மலர்களே மலர்களே 22 - பூவிற்குள் முட்டையிடும் பூச்சி
'ஸ்டாரி சாம்பியன்' (Starry Campion) என்பது புதர்த்தழை குறுஞ்செடி வகை பூக்கும் தாவர இனம். இதன் தாவரவியல் பெயர் 'சிலேன் ஸ்டேல்லாடா' (Silene Stellata). 'பிளம்பேஜினேசியே' (Plumbaginaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பெரும்பாலான தாவரங்களைப் போல இதன் பூக்களில் ஆணகமும் பெண்ணகமும் ஒருங்கே இருக்கும். அதாவது ஒவ்வொரு பூவும் ஆணக மகரந்தத்தைத் தரவல்லது; பெண்ணக உறுப்பு மகரந்தத்தைப் பெற்று காய்க்கும் தன்மை உடையது. உலகில் உள்ள தாவரங்களில் சுமார் எண்பது சதவிகிதம் இவ்வாறான இருபால் தன்மையை ஒன்றாகக் கொண்ட தாவரங்கள்தான். நவீன மரபணு வரிசை முறையில் ஆய்வு செய்து, எந்தத் தாவரத்தின் மகரந்தம் சேர்ந்து குறிப்பிட்ட பூவில் சூல் கருகட்டல் ஏற்பட்டு, காய் கனி விதை ஏற்பட்டுள்ளன என அறியலாம். மேரிலாந்து பல்கலைகழகத்தில் தாவரவியல் ஆய்வு செய்யும் 'ஜோன்னன் ஷௌ' (Juannan Zhow), தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்படும் இந்தக் காட்டுச் செடியைக் குறித்து ஆய்வு நடத்தினார். இந்தச் செடிகளில் உருவான சுமார் 2,400 விதைகளை மரபணு ஆய்வு செய்து எந்தத் தாவரத்திலிருந்து மகரந்தம் வந்து சேர்ந்துள்ளது எனக் கண்டுபிடித்தார். அந்தத் தோட்டத்தில் வளர்க்கப்படும் வெறும் 227 தாவரங்களிலிருந்து மட்டுமே மகரந்தம் இந்த விதைகளை உருவாக்கியுள்ளது எனக் கண்டார். மகரந்தந்தை அளிக்கும் 'தந்தை' தாவரங்களுக்கும் அதனைப் பெற்று காய் கனி உருவாக்கி விதைகளைத் தயாரிக்கும் தாய்த் தாவரத்துக்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தார். பூக்களின் புல்லிகைகளில், ஆண், பெண் உறுப்புகளில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் பூவின் இதழ்களில் தெளிவாகத் தெரிந்தது வேறுபாடு. தந்தை தாவரங்கள் எல்லாம் நீளமான ஆனால் குறுகிய பூவிதழ்களைக் கொண்டிருந்தன. அதே போல விதை உருவாக்கிய தாய் தாவரப் பூக்கள் எல்லாம் அகலமான ஆனால் குட்டையான பூவிதழ்களைக் கொண்டிருந்தன எனக் கண்டுபிடித்தார். இந்தத் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூந்துகள் சேர்ப்பிகள் பல்வண்ணப் புள்ளிகள் வாய்ந்த 'நோக்யூய்டே' (Noctuidae) குடும்பத்தைச் சார்ந்த ஒருவகை விட்டில் பூச்சி. இந்த விட்டில் பூச்சிக்கும் இந்தத் தாவரத்துக்கும் வினோத உறவு உண்டு. ஒரு பூவிலிருந்து அடுத்த பூவிற்கு மகரந்தத்தை எடுத்து செல்லும் பணியைச் செய்ய ஏனைய வண்டுகள், தேனீகள் போல வெறும் தேனையும் மகரந்தத்தையும் உணவாகப் பெற்றுக்கொள்ளவதில்லை இந்த விட்டில் பூச்சிகள். தேனைப் பருகும்போது கூடவே தனது ஓரிரண்டு முட்டைகளைச் சூல் பைக்குள் விட்டுச் செல்கிறது இந்தப் பூச்சி. இந்த முட்டைகள் பொரிந்து வெளியே வரும்போது அவை அந்தச் சூல் பைக்குள் இருக்கும் விதைகளை உண்கின்றன. கம்பளிப் பூச்சி வளர்ந்து வெளியே வந்து அந்தத் தாவரத்தின் பூ மற்றும் இதர பாகங்களை அரித்து உண்கின்றன. இதற்கு மாறாக மகரந்தத்தை மட்டுமே தந்து தான் கருகட்டல் செய்யாத பூவில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தப் பூச்சி வந்து முட்டை இடலாம். ஒவ்வொரு முறை பூச்சி வந்து போகும்போதும் அந்த மலரின் மகரந்தத்தைப் பல்வேறு பூக்களில் சென்று சேர்க்கிறது. அந்தத் தாவர வம்சம் அதன்வழியாக நிலைபெறுகிறது.