மலர்களே மலர்களே 14 - பூப்பூவா பூத்திருக்கு!
பூமியில் மட்டுமல்ல, விண்வெளியிலும் பூ பூத்துள்ளது! சோவியத் யூனியன் 1982ல் விண்வெளிக்கு ஏவிய விண்கலம் சல்யூட் -7ல் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த 'அரபிடோபஸிஸ்' (Arabidopsis) எனும் தாவரத்தை நாற்பது நாட்கள் வளர்த்து அதில் பூ பூப்பதையும், விதை உருவாவதையும் ஆராய்ச்சி செய்தனர். அதுதான் விண்வெளியில் பூத்த முதல் பூ! சராசரி 40 நாட்கள் மட்டுமே வாழக்கூடிய இந்தத் தாவரம் விண்வெளியில் வளர்ந்து மலர்ந்து விதைகூட உருவாக்கியது. விண்வெளியில் எடையற்ற சூழலில் தாவரம் வளருமா, மலர் மலருமா, விதை உருவாகுமா என்பதே இந்த ஆய்வின் நோக்கமாக அமைந்திருந்தது. இவ்வாறு ஆய்வுகள் வெறும் வேடிக்கைகாகச் செய்யப்படவில்லை. உள்ளபடியே தாவரம் எப்படி வளர்கிறது என்பதை அறியவே இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. சூரிய காந்திச் செடி துளிர்த்து வளரும்போது, அதன் தலைப் பகுதி பெண்டுலம் போல தலையசைத்து வளரும். ஆயிரம் நொடியில் இரண்டு முதல் நான்கு தடவைதான் தலையாட்டும் என்பதால் நீண்ட நேரம் உற்றுக் கவனித்தால் மட்டுமே இந்தத் தாவரத்தின் சலனம் புலப்படும். வேரை மண்ணில் திருகி துளைத்து வளரும்போது அந்தத் தாவரம் சாய்ந்து சரிந்து விடாமல் வளர்கிறது என்பதை 1880ல் சார்லஸ் டார்வின் உற்றுநோக்கிக் கண்டு வியந்தார். எப்படி இந்தச் செடி தலையை ஆட்டி ஆட்டி வளர்கிறது என்று யோசித்த அவர், எப்படி இந்த செயல்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்க முடியவில்லை. தாவரத்தின் இலைகள் மேல் நோக்கியும் வேர் கீழ் நோக்கியும் வளரும். ஆனால் தாவரம் 'மேல்' 'கீழ்' என்பதை எப்படி உணர்கிறது? விதையைச் சுற்றி எல்லாப் பக்கமும் மண் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விதை எப்படி மேல் பக்கம் எது கீழ் பக்கம் எது என பகுத்து சரியாக வேரை கீழ் நோக்கியும் துளிர் முளையை மேல்நோக்கியும் வளரச் செய்கிறது? ஒருவேளை தாவரத்தில் ஈர்ப்பு விசையை உணரும் தன்மை இருக்குமோ? ஒளியா, ஈர்ப்பு விசையா எது தாவரத்தில் 'மேல்' 'கீழ்' என்ற உணர்வைத் தூண்டுகிறது. இதனைச் சோதனை செய்து பார்க்க விண்வெளியைவிட வேறு சிறந்த இடம் எது? விண்வெளியில்தான் எடை கிடையாதே. எனவே புவிஈர்ப்பு விசை கொண்டு மேல் கீழ் அறிய முடியாது. விண்வெளியில் விதையை முளைக்கச் செய்து தாவரத்தை வளர்த்துப் பார்த்தால் இதற்கு விடை தெரியும் அல்லவா? விண்வெளியில் எடை இல்லை என்பதால் ஈர்ப்பு விசை உருவாக்கும் மேல் கீழ் என்ற வித்தியாசம் இயல்பில் இருக்காது. கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடத்தில் 1983ல் சூரியகாந்தி விதைகளை எடுத்துச் சென்று விண்வெளியில் மண்ணில் நட்டு சோதனை செய்து பார்த்தனர். அந்தச் சோதனையில் எடையற்ற நிலையிலும் விதை சரியாக ஒளிக்கு எதிரான திசையில் வேரையும் ஒளியை நோக்கி முளையையும் செலுத்தியது கண்டு வியந்தனர். எனவே ஈர்ப்பு விசை இல்லாத சமயத்திலும் விதை சரியாக முளைவிடும் எனக் கண்டனர்.