மலர்களே மலர்களே (6) - பூச்சிக்கு பூ எப்படி காட்சியாகும்...?
நமக்கு மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் பூ, தேனீக்கு எந்த நிறத்தில் காட்சி தரும்? நமது விழித்திரையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று வகையான நிறத்தைப் பிரித்து அறியும், உணர்வு செல்கள் உள்ளன. பூவிலிருந்து வெளிப்படும் பல்வேறு நிற ஒளிகள், இந்த மூன்று நிற உணர்விகள் மீது செலுத்தும் வீச்சின் கலவையை, பல்வேறு நிற சாயல்களாக நாம் உணர்கிறோம். எடுத்துக்காட்டாக, மூன்று பங்கு சிவப்பு, நான்கு பங்கு பச்சை மற்றும் ஐந்து பங்கு நீலம் என்ற அளவில் நிறங்களைக் கலந்தால், தெளிந்த வானத்தின் வான் நீலம் என்ற நிறம் நமக்கு காட்சிதரும். அதாவது மஞ்சள் பூ வெறும் மஞ்சள் நிற ஒளியை மட்டும் தரவில்லை. பல்வேறு அலை நீள ஒளிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றின் கலவையே நமது மூளை 'மஞ்சள்' என உணர்கிறது. கண்கள்தான் காட்சிப் புலனின் கருவி; மனிதக் கண்களும் பூச்சியின் கண்களும் ஒரே அமைப்பை கொண்டவை அல்ல. எனவே, நமக்குத் தென்படும் அதே காட்சி, பூச்சியின் கண்களுக்குப் புலப்படாது.பூச்சிகளுக்கு கூட்டுக் கண்கள் என்பதை நாம் அறிவோம். ஆயிரம் ஆயிரம் கண்களைப் போல தோற்றம் தரும் ஒவ்வொரு கண் கூறிலும், விழி லென்ஸ் உள்ளது. அதன் விழித்திரைக்குப் பதிலாக, ஒளியை உணரும் தன்மையுள்ள செல்கள் ஒவ்வொரு கண் கூறின் முனையில் உள்ளன. மூன்று அடிப்படை நிறங்களை உணரும் உணர்வி செல்கள், மனிதக் கண்களில் இருக்கின்றன. ஆனால், பல பூச்சிகளுக்கு இரண்டே இரண்டு அடிப்படை நிறங்களை உணரும் தன்மையே உள்ளது. ஒரு நிறமி உணர்வி, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தை (550 நானோ மீட்டர்) உணரும் தன்மை படைத்தது. மற்றது நீலம் மற்றும் புறஊதா கதிர்களை (480 நானோ மீட்டர்) உணரும் தன்மை படைத்தது. நிறக்குருடு உடைய மனிதர்களைப் போலவே, இந்தப் பூச்சிகளுக்கு பல நிறங்களை அறிய முடியாது. எடுத்துக்காட்டாக, 500 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட நீலப்பச்சை நிறமும், 450 நானோமீட்டர் 550 நானோமீட்டர் ஆகிய இரண்டு ஒளியின் கலவையும் அந்த பூச்சிக்கு ஒன்றுபோலவே தென்படும். ஆனால், தேனீ போன்ற சில பூச்சிகளின் கண்களில், புறஊதா நிறம் நீல நிறம் மற்றும் பச்சை நிறத்தை உணரும் மூன்று நிறமி உணர்விகள் உள்ளன. தேனீக்களின் கூட்டுக்கண்களில் உள்ள ஒவ்வொரு கண்கூறிலும், எட்டு ஒளி உணரும் நரம்பு செல்கள் உள்ளன. இவற்றில், நான்கு கண் கூறுகள், 544 நானோமீட்டர் அலைநீளத்தில் அமையும் மஞ்சள் -பச்சை நிறத்தை உணரும் திறன் கொண்டவை. இரண்டு நரம்பு செல்கள் 436 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட நீல நிறத்தையும், எஞ்சிய இரண்டு கண் கூறுகள் 344 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட புறஊதா நிறத்தையும் உணரும் தன்மை கொண்டவை.அதாவது ஒரு புறத்தில் மனிதனால் உணரமுடியாத புற ஊதா நிறத்தை தேனீக்கள் உணரும் என்றபோதிலும், அவற்றால் சிவப்பு நிறத்தை உணரமுடியாது. எனவே, நாம் காணும் அதே நிறங்களை தேனீ காணாது. நமக்கு மஞ்சள் நிறமாகக் காட்சி தரும் பூவிதழ், தேனீக்கு 'மஞ்சள்' நிறத்தில் காட்சி தராது. தேனீயால் உணரக்கூடிய நிறங்களின் கலவையாகக் காட்சி தரும். எடுத்துகாட்டாக, மனிதனுக்கு வெள்ளை நிறத்தில் தெரியும் பூ, புறஊதா நிறத்தை காணும் ஆற்றல் படைத்த தேனீக்கு நீலம் கலந்த பச்சை நிறமாகத் தெரியும். சிவப்பாகக் காட்சி தரும் செம்பருத்தி, தேனீயின் கண்களில் அரசல் புரசலாக நீல நிறத்தில் காட்சி தரும்.