வௌ்ளை நிறத்தில் வெடிக்கும் பழம்!
'மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும்பச்சை நிறத்தில் காய் காய்க்கும்வெள்ளை நிறத்தில் பழம் வெடிக்கும். அது எது?'ஓ.கே... ஓகே... எல்லாரும் 'பருத்தி'ன்னு கத்துறது கேட்குது. ஆல் பாஸ்.இப்போது, அந்தத் தெரிந்த பருத்தியைப் பற்றி, தெரியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.பருத்தியின் ஆங்கிலப் பெயர் காட்டன் (cotton) என்பது எல்லோருக்கும் தெரியும். காட்டன் என்கிற பெயர், Qutun என்ற அரபிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதற்கு நாகரிகம் (Fancy) என்பது பொருள். பருத்தியானது செடியிலும் காய்க்கும். மரத்திலும் காய்க்கும்! உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பருத்தியைப் பயிர் செய்கின்றன. உலகின் மொத்த பருத்தி உற்பத்தியில் 80 சதவிகிதம் சீனா, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரேசில், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கிறது.அதிக அளவில் பருத்தி ஆடைகளைத் தயாரிப்பது சீனா. காகிதங்களைக்கூட ஆரம்பத்தில் பருத்தி இழைகளை வைத்துத்தான் சீனர்கள் தயாரித்தனர். பருத்தியிலிருந்து விதவிதமான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா, ரூபாய் நோட்டுக்களை தயாரிக்கப் பருத்தியைப் பயன்படுத்துகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பல்பு கண்டுபிடிக்க,பருத்தி இழையைப் பயன்படுத்தினார்.காந்திஜி 1920ல் இருந்து தன் கடைசிக் காலம் வரை பருத்தியால் ஆன கதர் ஆடைகளையே அணிந்தார். ஆங்கில அரசாங்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திலேயே பருத்தியை முன்னிறுத்தினார்.இந்தக் கோடைக் காலத்தில் உங்கள் ஆடை விருப்பம் என்ன? பருத்தியா, செயற்கை இழைத் துணிகளா?