விண்வெளியில் தங்க சொகுசு ஹோட்டல்!
விண்வெளியில், பொதுமக்கள் தங்குவதற்கு சொகுசு ஹோட்டல் ஒன்றைக் கட்டப்போவதாக ஓரியன் ஸ்பேன் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், 'ஸ்பேஸ் 2.0' என்ற பெயரில் விண்வெளி தொடர்பான மாநாடு நடந்தது. அதில், பங்கேற்ற ஓரியன் ஸ்பேன் நிறுவனம், விண்வெளியில் ஹோட்டல் திட்டத்தை அறிவித்துள்ளது. 'வரும் 2021க்குள் விண்வெளியில் ஹோட்டல் கட்டி முடிக்கப்படும். 2022ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்' என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் 'அரோரா ஸ்டேஷன்' ஹோட்டல் அமையவுள்ளது. அங்கு தங்கும் வாடிக்கையாளர்களுடன், 2 ஹோட்டல் நிர்வாகிகள் தங்கியிருப்பர். பொதுமக்கள் விண்வெளிக்குச் சென்று தங்குவதற்கு, மூன்று மாதம் சிறப்புப் பயிற்சி கட்டாயம். 90 நிமிடங்களுக்கு ஒருமுறை ஹோட்டல் பூமியைச் சுற்றிவருவதால், ஒரு நாளைக்கு, 16 சூரிய உதயத்தையும், 16 சூரிய அஸ்தமனத்தையும் ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் காணமுடியும். 24 மணி நேர இணையவசதியும், அங்கேயே வளர்க்கப்பட்ட உணவுப் பயிர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.இவற்றையெல்லாம் விட முக்கியமாக, விண்வெளிக்குப் போய்வர எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி எழலாம். 12 நாட்கள் தங்குவதற்கு, 61 கோடி ரூபாய் செலவாகும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் வீதம் செலவாகும். தற்போது பிற விண்வெளி சுற்றுலா நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான தொகைதான்! விண்வெளி அனுபவத்தை அடைய அரோரா ஸ்டேஷன் ஹோட்டலில் தங்க விரும்புபவர்கள், 51 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்.