உள்ளூர் செய்திகள்

அணுவைப் பிளந்தவர்!

எர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு1871 - 1937பிரைட்வாட்டர், நியூசிலாந்து.அப்போது அவருக்கு வயது பத்து. கையில் கிடைத்த அறிவியல் புத்தகத்தில் இருந்த ஆய்வுகளை வேகவேகமாகச் செய்துகாட்டி, குடும்பத்தினரைப் பிரமிக்க வைத்தார். அப்படித்தான் ஒரு பொம்மை பீரங்கியை விளையாட்டுத்தனமாகச் செய்து, அது பெரும் சத்தத்துடன் வெடித்ததைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அதே உற்சாகத்துடன், அதன் வேகத்தையும் சத்தத்தையும் எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். இத்தகைய விடாமுயற்சியும் சிந்திக்கும் திறனும்தான் ரூதர்ஃபோர்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தன.விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பண்ணை வேலைகளில் பெற்றோருக்கு உதவியாக இருந்ததுடன் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அறிவியலை அணுஅணுவாக நேசித்ததாலேயே அவரால் 23 வயதுக்குள் மூன்று பட்டங்கள் பெறமுடிந்தது. அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை கிடைத்ததால், விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சனின் மாணவரானார்.அங்கே ஆராய்ச்சி மாணவராக இருந்து, யுரேனியம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்கும் கருவியை உருவாக்கினார். அந்தக் கதிர்வீச்சைக் கண்காணித்து ஆல்பா, பீட்டா, காமா எனப் பெயரிட்டார். இவரது ஆராய்ச்சிகளைப் பார்த்த கனடா பல்கலைக்கழகம் இயற்பியல் பேராசிரியர் பணிக்கு அழைத்தது. ஆராய்ச்சியைத் தொடர்ந்தவாறே பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். கதிரியக்கத்தின் எரியாற்றல் குறித்து ஆராய்ந்து, அணு ஆற்றல் என்ற முக்கியமான கோட்பாட்டை உருவாக்கினார். இது புவியியல், தொல்பொருளியல், வானியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் பயன்படுகிறது. 1919ஆம் ஆண்டு அணுவைப் பிளக்க முடியும் என்று இவர் நிரூபித்த உண்மைதான், பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. அவர் கண்டுபிடித்த அணுசக்தியை அழிவுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதுதான் அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.சிறப்புகள்1908: கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.1914: முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களின் இருப்பிடத்தை சோனார் மூலம் கண்டறிவது தொடர்பான ஆய்வுக்காக இங்கிலாந்து அரசு 'சர்' பட்டம் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !