வயர் இல்லாமல் ஹலோ!
விண்வெளியில் தகவல்தொடர்பு சாதனங்கள் மிகமிக அத்தியாவசியம். பூமியைவிட்டு பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், நம் கிரகத்துடன் இணைப்பிலேயே இருக்கவேண்டியது முக்கியம். பார்ப்பதற்கு விண்கலம் மிகப்பெரியதாக இருந்தாலும், வீரர்கள் பணிபுரியும் இடம் மிகக்குறைவு. அதிலும் முக்கால் பங்கு கணினிகளும் பிற விஞ்ஞான சாதனங்களும் அடைத்துக்கொண்டிருக்கும். அன்றைய தகவல்தொடர்புக் கருவிகள் மிகப்பெரியவை; தலைக்கு மேல் ஏகப்பட்ட வயர்களும் குப்பிகளும் நிறைந்திருக்கும்; சில சமயத்தில் தொடர்பும் அறுந்துபோகும். இச்சமயத்தில்தான், கனமற்ற தகவல்தொடர்பு சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களின் ஆய்வை வரவேற்பதாக, அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமான நிறுவனம் அறிக்கை விடுத்தது. அழைப்பை ஏற்று, நிறுவனத்தின் விமானியான கோர்ட்னி க்ரஹாம் (Courtney Graham), நண்பர் கீத் லார்கினுடன் (Keith Larkin) 1961இல் ஆராய்ச்சியில் இறங்கினார். காதுகேளாதோர் கருவியை ஆதாரமாகக் கொண்டு, இருவரும் MS-50 என்னும் ஹெட்போன்களைத் தயாரித்தனர். பிளான்டிரானிக்ஸ் (Plantronics) என்னும் நிறுவனத்தையும் தொடங்கினர். பிளான்டிரானிக்ஸ் நிறுவனம் வயர்களை நீக்கி, காதில் மட்டும் பொருத்திக்கொள்ளக்கூடிய இயர்போன்ஸ் (ear-phones) தயாரித்தனர். அதுவிண்வெளி வீரர்களுக்காக. இன்று நீங்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தும் ஹெட்போன்கள் இங்கிருந்து பிறந்ததுதான். - குறிஞ்சி