உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: திப்புவின் கோடைக்கால அரண்மனை

மைசூர் மன்னராக இருந்தவர் திப்பு சுல்தான். கோடைக் காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், குளிர் பகுதியாக இருந்த பெங்களூருவில் ஓர் அரண்மனையை கட்டி அங்கே வசித்து வந்துள்ளார். பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் அந்த அரண்மனை உள்ளது. கி.பி. 1781க்கும் 1791க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், இது கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள், திப்புவின் தந்தையான ஹைதர் அலி காலத்தில் தொடங்கி, திப்புவின் காலத்தில் முடிவுக்கு வந்து, பின்னர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.தரை தளம், மேல் தளம் ஆகிய இரண்டு அடுக்குகளைக் கொண்ட சிறிய அளவிலாள அரண்மனை இது. அரண்மனையின் முன்புறம் பிரமாண்ட தேக்கு மரத் தூண்கள் உள்ளன. அரண்மனை முழுக்கவும் நூற்றுக்கணக்கான தேக்கு மரத் தூண்கள் உள்ளன. கீழே நான்கு அறைகளும், மேலே நான்கு அறைகளும் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் விளக்கு வைக்கும் மாடங்கள் உள்ளன. அவை வேலைப்பாடுகள் நிறைந்தவையாக அமைக்கப்பட்டுள்ளன. சுவர்களின் கூரைப் பகுதியில் (மோட்டு வளை) ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை காலவெள்ளத்தில் கரைந்து போய், மங்கலாகக் காட்சி அளிக்கின்றன. திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய இரண்டு சிறிய ரக ராக்கெட்டுகளும் கீழ் உள்ள அறை ஒன்றில் உள்ளன. திப்பு வட்ட வடிவிலான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிம்மாசனத்தில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆங்கிலேயர்களுடான நான்காம் மைசூர் போரில், திப்பு கொல்லப்பட்டப் பிறகு, அந்தச் சிம்மாசனம் பிரித்து எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.பால்கனி போன்ற அமைப்பு, மாடியின் இரு புறங்களிலும் உள்ளன. அங்கிருந்துதான் திப்பு சுல்தான் பார்வையாளர்களுக்குக் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. நடுவில் பெரிய ஹால் போன்ற பகுதி உள்ளது. அதுதான் தர்பார் மண்டபமாகத் திகழ்ந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த அரண்மனை. தொல்லியல் பொருட்களை புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1750இல் பிறந்த திப்பு, மே 4, 1799இல் ஆங்கிலேயர்களால், போரில் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !