உள்ளூர் செய்திகள்

தப்பாய் எழுதினால் தலையில் குட்டு!

'கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே'இந்த வரிகளை எழுதியது யார் தெரியுமா? அவ்வைப் பாட்டியாக இருக்குமோ? ம்ஹூம்...கம்பர்? கபிலர்? ம்ஹூம்...இதை எழுதியவர் ஒரு மன்னன்! பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியன்தான் அந்த மன்னர். கி.பி.1564 முதல் கி.பி.1604 வரை நாற்பது வருடங்கள் ஆட்சி செய்தவர். இந்த ராஜாவுக்கு வடமொழியும் நன்கு தெரியும். மன்னர் என்றால் எப்போதும் எதிரி நாட்டோடு சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா, என்ன? நல்ல புத்தகங்கள் கூட எழுதலாம் என்பதற்கு இந்த ராஜா ஒரு எடுத்துக்காட்டு. அப்படி என்ன புத்தகங்கள் எழுதினார் இந்த ராஜா? கூர்ம புராணம், காசிக்காண்டம் போன்ற பல வடமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். நீதிநெறிப் பாடல்கள் அடங்கிய 'வெற்றி வேற்கை' என்கிற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலுக்கு நறுந்தொகை என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் உள்ள வரிகள்தான் 'கற்கை நன்றே…'. இவரைப் பற்றி ஒரு விசித்திரமான கதை இன்றும் உலவுகிறது. புலவர்கள் பாடும் செய்யுளில் ஏதேனும் தவறு இருந்துவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் தலையில் குட்டி அனுப்பிவிடுவார் இவர். அதே புலவர், மறுபடி வந்து பிழையின்றி செய்யுள் பாடினால் பரிசு தந்து உற்சாகப்படுத்துவார்! நிறைய செல்வங்கள் வைத்திருந்த மன்னர்களுக்கு நிறையப் பெயர்களும் இருக்கும். இவருக்கும் அப்படித்தான். மாறன், குணசேகர வழுதி, அழகன், குலசேகர பாண்டியன் போன்ற பல சிறப்புப் பெயர்கள் அதிவீர ராம பாண்டியனுக்கு இருந்தது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் குலசேகரமுடையார் கோயிலை எழுப்பியவரும் இவர்தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !