பெற்றோர் - ஆசிரியர் உறவு எப்படி அமைய வேண்டும்?
மாணவர்களின் கல்வியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள். மாணவர்களை கல்வியில் சிறக்கச் செய்வதும், நற்பண்புகளை கற்றுக்கொடுத்து வளர்ப்பதும் இவர்களின் ஒத்துழைப்புடன்தான் நடக்கும். பெற்றோர் - ஆசிரியர் உறவு எப்படி அமைய வேண்டும் என்ற தலைப்பை முன்வைத்து, சென்னை, வெட்டுவாங்கேணி, ஜி.டி.ஏ. வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். பெற்றோர் - ஆசிரியர் உறவு எப்படி அமைய வேண்டும், இதுபற்றி மாணவர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.ஸ்ரீ.பூமகள், 10ம் வகுப்புமாணவர்களின் நல்ல பண்புகளை ஆசிரியரும், பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர் இருவருமே மாணவர்கள் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது. ஒவ்வொரு பாடத்தை எடுக்கும் ஆசிரியர்களைப் பற்றியும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டாலும் பெற்றோர்கள் சில நேரங்களில் கலந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். மாணவர் நலனைக் கருத்தில்கொண்டு, பெற்றோர் - ஆசிரியர் தங்கள் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.க.ச.தனுஸ்ரீ, 9ம் வகுப்புமாணவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது பெற்றோர் - ஆசிரியர் உறவு. மற்றவர்களால் மாணவர்களைப் பாராட்டவும், கருத்துச் சொல்லவும் மட்டும்தான் முடியும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள உறவுதான் உண்மையில் மாணவர்களாகிய எங்களை பண்புள்ளவர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் ஆக்கும். பெற்றோர் - ஆசிரியர் உறவைப் பலப்படுத்த பள்ளிகள் அக்கறை செலுத்த வேண்டும். பல பள்ளிகள் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தாமல் இருக்கின்றன. பெற்றோர் - ஆசிரியர் உறவு சிறந்த முறையில் அமைய, ஆலோசனைக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.பா.அனாமிகா, 9ம் வகுப்புபெற்றோர்கள், ஆசிரியர்களைப் பெரும்பாலும் குறை சொல்கிறார்கள். மாணவரிடம் இருக்கும் தனித்திறமையை அறிந்து, ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். வெளிப்படையான கருத்துகளை விருப்பு வெறுப்பற்று பெற்றோர் - ஆசிரியர் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருப்பதால், மாணவர்களின் நலன்தான் பாதிக்கப்படும். அவர்கள் இருவரின் உறவு வலுவாக இருந்தால் மட்டுமே, நன்மை பயக்கும்.ர.ஹரிஹரன், 10ம் வகுப்புபெற்றோர் - ஆசிரியர் உறவு சிறப்பாக அமைய, மாணவர்களின் ஒத்துழைப்புதான் முக்கியமானது. அன்றாடம் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், பழகும் தன்மை போன்றவற்றைத் தெரிவித்தால்தான், அவர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கும்போது அதைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள எளிதாக இருக்கும். பெற்றோர் - ஆசிரியர் உறவு நன்கு இருக்க வேண்டுமானால், அவர்களுக்கிடையில் சந்திப்புகள் மாதம் ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும்.ஸ்ரீ.ஸ்ரீராம், 9ம் வகுப்புபெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் அடிக்கடி நடக்க வேண்டும். மாணவர்களைப் பற்றிய குறைகளைப் பற்றி மட்டுமே பேசாமல், அவர்களின் நிறைகளையும், ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனையும் பெற்றோர்கள் பாராட்ட வேண்டும். மாணவர்கள் பள்ளியில், வீட்டில் செயல்படும் நல்ல விஷயங்கள், பண்புகள் பற்றியும் பேச வேண்டும். அலுவல் ரீதியான பேச்சாக இல்லாமல், மாணவர்களின் திறன்களை ஊக்குவித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல் என்பது குறித்து, பெற்றோர் - ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டால், அவர்களது உறவு உன்னதமாக இருக்கும்.பா.ஸ்ரீவிஷ்ணு, 9ம் வகுப்புபள்ளியை, ஆசிரியர்களை பெற்றோர் குறை சொல்வது, மாணவர்களை, பெற்றோர்களை ஆசிரியர்கள் குறை சொல்வது என்பதாகத்தான் பெற்றோர், ஆசிரியர் உறவு இருக்கிறது. பெற்றோர், ஆசிரியர் இருவரும் தங்கள் ஒரே நோக்கமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெற்றோர் - ஆசிரியர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதன் மூலம், அவர்களது உறவைப் பலப்படுத்தலாம். இது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.