உள்ளூர் செய்திகள்

இருட்டும் எனக்கு பிடிக்கும்! (10)

அடுத்த விநாடி டிரைவர் அதல பாதாளத்தில் விழுந்திருப்பார். அவரைத் தொட்டு, பாறையில் நின்றிருந்த கண்ணனும் வழுக்கியிருப்பான். அப்போதுதான் அது நடந்தது…!தலை குப்புற விழ ஆரம்பித்த டிரைவரை ஒரு கை வலுவாகப் பற்றியது. வானத்தில் இருந்து வந்த கை!ஆமாம்… 'சட சட சட…' என்கிற இரைச்சலோடு பிரமாண்டமான காற்றாடியைத் தலைக்கு மேலே சுழற்றியபடி ஒரு ஹெலிகாப்டர் அந்தரத்தில் வந்து நின்றது.அதில் இருந்து 'சரசர' என்று ஒரு நூல் ஏணி விரிந்து விழுந்தது. அதில் வனத் துறை கமாண்டோ ஒருவர் தொங்கினார். நூல் ஏணியில் இருந்து, தலைகீழாகத் தொங்கியவர், டிரைவரை இரும்புப் பிடி பிடித்தார்.எல்லோரும் கண்கள் விரியப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஒருவருக்கும் பேச்சு எழவில்லை. ஹெலிகாப்டரின் காற்றாடி சுழன்றபடி இருந்தது. அதன் காற்று, கீழே இருந்த மரங்களை அசைத்தது. ஒரு ராட்சஸத் தட்டான்பூச்சி அந்தரத்தில் நிற்பது போல் ஹெலிகாப்டர் வானத்தில் நின்றது.கமாண்டோ, டிரைவரைப் பிடித்தபடி அப்படியே காற்றில் எழும்பினார். அதே நேரத்தில் நூலேணியும் மேலே போயிற்று. ஹெலி, ஆகாயத்தில் உயர்ந்தது. நூலேணி ஹெலிகாப்டருக்குள் போயிற்று…டிரைவரைக் காப்பாத்தியாச்சு!அடர்ந்த கானகம். அதனுள்ளே எதிர்பாராத ஓர் அழகு. வனத்துறையின் விருந்தினர் மாளிகை. இயற்கை அழகைக் கொஞ்சமும் தொந்தரவு செய்யாமல் வடிவமைக்கப்பட்ட அந்த மாளிகையின் கூடத்தில் சிறுவர் கூட்டம் உட்கார்ந்திருந்தது. நடுநாயகமாக, வனத்துறை உயர் அதிகாரி ரத்தினசாமி.காட்டுக்குள் வழிதவறிப் போன சின்னப் பசங்களை, நேரம் கடத்தாமல் வந்து மீட்ட குழுவின் தலைவர். ஆனால், அந்த பந்தாவே ரத்தினசாமியிடம் தெரியவில்லை.புன்னகையோடு அந்தச் சின்னப் பசங்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். “காடுங்கிறது என்னன்னு ஓரளவு புரிஞ்சிட்டிருப்பீங்க. அது பயப்பட வேண்டிய விஷயமே இல்லை. உண்மையில, நாடு நல்லா இருக்கணும்னா, காடு நல்லா இருக்கணும். மழைக்குக் காரணமான மரங்கள், உயிர் சுழற்சிக்கு உதவுற உயிரினங்கள்… சொல்லிக்கிட்டே போகலாம்…” என்று பேசிக்கொண்டு போனவர், ஓரமாக நின்றுகொண்டு இருந்த வனவாசியைப் பார்த்தார்.“என்ன பெரியவரே, ஏன் அங்கே நின்னுட்டீங்க? இந்த சேர்ல உக்காருங்க” என்றார்.வனவாசி உட்கார்ந்தார். கூச்சத்தோடு சிரித்தார்“பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், இவர் ஜோவுக்கும் ஷீலுவுக்கும் ஹெல்ப் பண்ணினாருன்னுதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உண்மையில் காடு காடாவே இருக்குறதுல இவங்களோடதுதான் பெரும் பங்கு. இவங்க எல்லாம் காட்டை நேசிக்கிறவங்க. தங்களோட தேவைகளுக்குத் தவிர, வனத்தோட ஒரு பொருளையும் அநாவசியமாச் சொந்தம் ஆக்கிக்க நினைக்க மாட்டாங்க. தேவை இல்லாம ஒரு மரத்தை வெளி ஆளுங்க யாராவது வெட்டிட்டாங்கன்னா, தங்களோட குடும்பத்துல ஒருத்தருக்குக் கெடுதி வந்துட்டதாவே நினைப்பாங்க…” சிறுவர்கள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். எல்லோர் கையிலும் விதவிதமான தின்பண்டங்கள், பானங்கள். முகத்திலோ சந்தோஷமும் ஆர்வமும் நிறைந்திருந்தன. “தெரியாத இடத்துல ஆபத்துல மாட்டிக்கிட்டா, பயப்படாம, பதற்றப்படாம இருக்குறதுதான் முதல் நடவடிக்கை. அதுல நீங்க எல்லாருமே பர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டீங்க” என்று வெடிச் சிரிப்பு சிரித்தார் ரத்தினசாமி.பயணியர் மாளிகையின் வாயிலில், வனத்துறையின் வேன் நின்றது. அதன் இன்ஜின் மெல்லிய சத்தத்தோடு உறுமிக்கொண்டு இருந்தது. அதை ஒட்டி, ஜோ அப்பாவும் கண்ணன் அப்பாவும் வந்த கார். வாகனங்களைச் சுற்றி, எல்லோரும் கூடி இருந்தார்கள். மாளிகையின் சுற்றுச் சுவர் ஓரமாக, வனவாசி நின்றிருந்தார். அவர் பக்கத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது அவருடைய குரங்கு.கண்ணனின் அப்பாவைப் பார்த்து ரத்தினசாமி பேசினார், “ஐ ஹாவ் டு தேங்க் யூ…” என்றார்.ஜோவின் அப்பா இடைமறித்து, “என்ன சார் இது, நன்றி சொல்ல வேண்டியவங்க நாங்க” என்றார். ரத்தினசாமி சிரித்தார். “அப்பிடி இல்லை… இத்தனை குழந்தைங்க… யாராச்சும் ஒருத்தருக்கு ஏதாச்சும் ஆயிருந்தா…? மொத்த டிபார்ட்மென்ட்டும் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கும். குழந்தைங்க மிஸ்ஸிங்னு தெரிய வந்த உடனே கொஞ்சமும் லேட் பண்ணாம எங்களை கான்டாக்ட் பண்ணினீங்க. இது மாதிரியான சமயங்கள்ல எவ்வளவு சீக்கிரமா ரெஸ்க்யூ ஆபரேஷன்ல இறங்குறோமோ அவ்வளவு நல்லது. உங்க ஒத்துழைப்புதான் எங்க வேலையை ஈஸி ஆக்கிச்சு. அதனாலதான் உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம எங்களால செயல்பட முடிஞ்சுது” என்றார்.அதை ஒப்புக்கொள்வது போல கண்ணன் அப்பா தலை அசைத்தார்.“ஆனா எனக்கு ஒரு குறை இருக்கு” என்றான் கண்ணன்.எல்லாரும் திரும்பி, அவனைப் பார்த்தார்கள். அவன் சிரித்தபடி, “மறக்க முடியாத இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கு. இதை எல்லாம் செல்பீ எடுக்க முடியாமப் போச்சேன்னுதான் கவலையா இருக்கு” என்றான். “ஏம்ப்பா? அதான் கொஞ்ச நேரமா நாங்க எடுத்துட்டு இருக்கோமே…” என்றார் கண்ணன் அப்பா.“நீங்க எடுத்தா போட்டோ. நாங்களா எடுத்தாத்தான் செல்பீ” என்று ராகினி சிரித்துக்கொண்டே சொன்னாள். “அதான், டிராவலர்ஸ் பங்களா கிடைச்சதுமே, ஸ்நாக்ஸைக் கூடத் திரும்பிப் பார்க்காம, மொபைல் பேட்டரியை சார்ஜ் பண்ண ப்ளக் பாயின்ட் தேடினீங்களே” என்று சிரித்தார் ரத்தினசாமி. வெடிச் சிரிப்பு. “பேட்டரிக்கு சார்ஜ் போட்டுட்டுத்தான் எங்களுக்கு சார்ஜ் போடுவோம்” என்றாள் ராகினி.அவளுடைய மொக்கையைக் கேட்டதும் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஜோ மட்டும் சிரிக்கவில்லை.“என்ன ஜோ, மறுபடி 'உம்' மோடுக்குப் போயிட்டியா?” என்று கலாய்த்தான் குமார்.“இல்லை” என்ற ஜோ, சுற்றுமுற்றும் பார்த்தான். இருட்டுக்குள் வரைந்து வைத்த ஓர் ஓவியம் போலக் காட்சி கொடுத்தது பயணியர் மாளிகை.மெல்லிய குளிர், அடர்ந்த தாவரக் கூட்டத்தின் மேலாக அசைந்துகொண்டு இருந்தது.சில்வண்டுகளின் சேர்ந்திசை ஆரம்பம் ஆகியிருந்தது. நட்சத்திரங்களின் மர்ம ஒளி துலங்கும் மெல்லிய இருள்.“இந்த இருட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தத் தடவை இது புது இடம். இப்போ இந்த மலைக் காடு எனக்குப் பழகிடுச்சு. நான் மறுபடியும் இங்க வருவேன்…” என்றான்.“மறுபடியுமா? இங்கேயா? ராத்திரியிலயா?” கேள்விகளை அடுக்கினான் ரவி. வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தவர்கள் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் பயமே இல்லை.காரும் வேனும் நகர்ந்தன. காடு விலகி, பின்னால் போக ஆரம்பித்தது. சிறுவர்கள், டாட்டா காட்டுவது போல் கைகளை அசைத்துக்கொண்டு போனார்கள்.காருக்குள் மெல்லிய இசை பரவியது.மனித குலம் முழுமைக்கும்அமுதூட்டும் அருவிகளே போய் வருகிறோம்உயிர்மூச்சைத் தவழவிடும்உயர்ந்த மன மரங்களே விடைபெறுகிறோம்பூமி என்னும் அம்மாவின்பொலிவுகள் அனைத்தையும்புதிதாக வைத்திருக்கும் வனமே, எங்கள் மனமே,சென்று வருகிறோம் சென்று வருகிறோம்…(முடிந்தது)ரமேஷ் வைத்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !