இருட்டு எனக்குப் பிடிக்கும்! (3)
கதை இதுவரை: சிறுவர் கூட்டம் மலைப் பிரதேசத்துக்குச் சுற்றுலா செல்கிறது. ஜோவும் அவன் தங்கை ஷீலுவும் கூட்டத்தைப் பிரிந்து காட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள்.மீதம் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது மண் சரிவு ஏற்படுகிறது. அவர்களின் கார் நகர முடியவில்லை. ஜோவும் ஷீலுவும் காணாமல் போனதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறார்கள். காட்டுக்குள், ஜோவின் மீது ஒரு குரங்கு பாய்கிறது.இனி....“ஜோ… விலகு. அந்தக் குரங்குக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு போல… ஹெல்ப்… ஹெல்ப்…” என்று ஷீலு கத்தினாள். குரங்கின் பிடியில் இருந்து ஜோ, தன் கால்களை வேகமாக உதறினான்.மின்னல் வேகத்தில் ஒரு மரக் கிளையைக் கையில் எடுத்திருந்தாள் ஷீலு. தரையில் கிடந்த குரங்கு, விறுவிறு என்று ஜோவின் மீது ஏறியது. 'கிர்ர்ர்… கிர்ர்ர்' என்று சத்தம் எழுப்பியது. வாயைப் பெரிதாகத் திறந்தது. ஜோவின் கையைக் கடித்தது. ஷீலு, குரங்கை அடிக்க மரக் கிளையை ஓங்கினாள். 'வேண்டாம்' என்று சைகை காட்டியபடி ஜோ சிரித்தான். “ஷீலு, குரங்கு கடிச்சா, சிரிப்பேனா? இது, என் கையைச் சும்மாக் கவ்வி இருக்கு…” ஷீலுவின் முகத்திலும் புன்னகை. “ஆமா, இதோட இடுப்புல பாரேன்… அண்ணாக் கயிறு!” அது யாரோ வளர்க்கும் குரங்கு!இந்த நேரத்தில், குரங்கு ஜோவின் கையை விட்டிருந்தது. அவனை விட்டு விலகி, நான்கு அடி தூரம் போனது. ஜோவையே பார்த்தது. ஜோ, அதன் அருகில் போனான். அது இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய் நின்றது. “ஜோ… அது உன்னை எங்கேயோ கூப்பிடுது போல…” என்றாள் ஷீலு.ஜோவும் ஷீலுவும் குரங்கைப் பின் தொடர்ந்து போனார்கள். மரங்களில் தொற்றியும், திடீரெனத் தரையில் குதித்தும், மறுபடி கிளைகளை எட்டிப் பிடித்தும் காட்டுக்குள் முன்னேறியது குரங்கு.அதன் வேகத்துக்கு நடப்பது ஜோவுக்கும் ஷீலுவுக்கும் கஷ்டமாக இருந்தது. “மழை நின்னது நல்லதாப் போச்சு. இல்லேன்னா இவ்வளவு வேகத்திலே கூடப் போக முடியாது” என்றபடியே இருட்டுக்குள் முன்னேறினான் ஜோ.“உனக்குக் பயமே இல்லையா, ஜோ?” என்றாள் ஷீலு.“நீ துணையா வர்றியே…” என்றான் ஜோ. ஷீலு, புன்னகைத்தாள். ஜோவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.சிறு பள்ளங்கள். வழுக்கும் மேடுகள். காட்டுச் செடிகளின் முள் உரசல். சிள் வண்டுகளின் ரீங்காரச் சத்தம்… தாவித் தாவிப் போய்க்கொண்டு இருந்தது குரங்கு. ஓர் இடத்தில் நின்றது. 'ள்கீள்… ஷ்கீஷ்…' என்று விநோதக் குரல் எழுப்பியது.“ஷீலு, நில்லு…” என்றான் ஜோ. “இந்த இருட்டு எவ்வளவு வித்தியாசமா இருக்கு பாத்தியா? நம்ம ஊர்ல இருட்டு வேற மாதிரி இருக்கும்…” “மழை நின்னு கொஞ்ச நேரம் ஆச்சு இல்லையா? காத்து அடிச்ச வேகத்துல மேகம் எல்லாம் கலைஞ்சு போச்சு. வானத்துல நெறைய நட்சத்திரம் தெரியுது. அதோட ஒளியாலதான் நமக்குக் கண்ணு தெரியுது” என்றாள் ஷீலு. அப்போது, குரங்கு எங்கேயோ பாய்ந்தது. “ஏய்… அங்கே ஒரு பள்ளம் இருக்கு…” என்றாள் ஷீலு. அதற்குள் அந்தப் பள்ளத்தை நெருங்கிவிட்டிருந்தான் ஜோ. ஜோவைத் தாண்டிக்கொண்டு முன்னேறியது குரங்கு. பள்ளத்தில் விழுந்து கிடந்த பெரிய மரக்கிளையைப் பிடித்து இழுத்தது. கிளை விலகவில்லை. ஜோ தன் முழு பலத்தையும் உபயோகித்து அந்தக் கிளையை அசைத்தான். “ஷீலு, நீயும் ஒரு கை பிடியேன்… பார்த்து வா, வழுக்குது” என்றான். ஜோ, கீழே இருந்து மரக்கிளையைத் தள்ள, ஷீலு மேல் புறமாக அதை இழுத்தாள். அண்ணன், தங்கை இருவரின் முயற்சியில் மரக் கிளை அசைந்து கொடுத்தது.அதன் கீழே உருண்டையான கல் போல ஏதோ தெரிந்தது. ஷீலு கண்களைக் கூர்மையாக்கிப் பார்த்தாள். பயத்தில் அவளுக்குக் குரலே எழும்பவில்லை. தடுமாறி ஜோ மேல் விழுந்தாள். அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். அங்கே உருண்டைக் கல் போலத் தெரிந்தது… ஒரு தலை! மனிதத் தலை!ஜோவும் ஷீலுவின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். “பயப்படாதே ஷீலு… அண்ணன் இருக்கேன்…” என்றான். “யாரோ செத்துக் கிடக்காங்க. வா நாம போயிடலாம்…” என்றான்.அப்போது, அந்தத் தலையில் இருந்த இரண்டு கண்களும் அகலத் திறந்தன.ஷீலு, அந்தக் காடே அதிரும் வண்ணம் அலறினாள்.“என்னப்பா, யாரும் பேசக்கூட மாட்டேங்கிறீங்க?” என்றான் கண்ணன்.அவனும், ரவி, ராகினி, குமார், ஆகியோரும் காருக்குள் பம்மி உட்கார்ந்து இருந்தார்கள். டிரைவர், தன் சீட்டில் சாய்ந்திருந்தார். “விடிஞ்சு, யாராவது வந்து ரோடை க்ளியர் பண்றவரை என்ன செய்யறது?” என்று ராகினி முனகினாள்.“போன்ல கேம்ஸ் ஆடலாம்” என்றான் குமார்.“ஒரு நாள் ட்ரிப்னு பிளான். ஆனா, இப்பிடி ஆயிடுச்சு. என்னோட போன்ல மட்டும்தான் பேட்டரி சார்ஜ் இருக்கு. நான் விளையாடுவேன், நீங்க எல்லாம் வேடிக்கை பாருங்க” என்று பெருமையாகச் சொன்னான் கண்ணன். “கொண்டு வந்த பண்டத்தைப் பூரா தின்னு தீத்துட்டீங்க… யாருக்குமே பசிக்கலையா?” முன் சீட்டில் இருந்து டிரைவர் கேட்டார். “பசிக்குது, பசிக்குது… ஏதாச்சும் மிச்சம் இருக்கான்னு பாருங்களேன்…” என்று பாவமாகச் சொன்னாள் ராகினி. எல்லாரது பைகளும் அலசப்பட்டன. எல்லாம் காலி. காரின் பின்புறம் உட்கார்ந்திருந்த ராகினியின் கையில் சீட்டுக்கு அடியில் இருந்த ஒரு பெரிய பொட்டலம் சிக்கியது. உற்சாகமாகக் கூவினாள். “ஹைய்… இங்கே என்னமோ இருக்கு.”அந்தப் பொட்டலத்தைப் பறித்து அவசரமாக, ஆசைtயாகப் பிரித்தான் கண்ணன். உள்ளே…மிளகாய் வற்றல் இருந்தது. நல்ல சிவப்பான மிளகாய்! காரநெடி காரை நிரப்பியது. ஆத்திரத்தோடு அந்தப் பொட்டலத்தை காரின் பின்பக்கம் வீசினான் கண்ணன்.டிரைவர், “அட, அது நான் வீட்டுக்குக் கொண்டு போக வாங்கி வச்சதுப்பா'' என்றார் அதைத் திங்க முடியுமா?”கண்ணனின் போனில் கேம்ஸ் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஒவ்வொருவராகக் கண்கள் மயங்கித் தூங்க ஆரம்பித்தார்கள். டிக்கி பக்கத்து சீட்டில் ராகினி ஏற்கெனவே தூங்கியிருந்தாள்.நள்ளிரவு கடந்திருக்கும்.கண்ணன், புரண்டு படுத்தான். வண்டி அசைந்தது. “டேய், வண்டியை ஆட்டாதடா…” என்றான் ரவி. கண்ணனிடம் அசைவே இல்லை.வண்டி அசைந்தது.“டேய், சும்மா இருடான்னா…” என்ற ரவி கண்ணைக் கசக்கியபடி வெளியே பார்த்தான். இருட்டுக்குள் ஓர் உருவம் அசைந்தது! ஒற்றை யானை! முறம் போன்ற காதுகளை ஆட்டியபடி ஒரு யானை!யானை, காரை உரசியது. மேல்புறத்தில் துதிக்கையால் தட்டியது. பள்ளத்தில் தள்ளிவிட ஆரம்பித்தது. அவன் பயத்தில் அதிர்ந்தான். (தொடரும்)