உள்ளூர் செய்திகள்

வெறுப்பால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.(FBI), சமீபத்தில் குற்றங்களைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சக மனிதர்கள் மீதான வெறுப்பினால் செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.ஒரு குறிப்பிட்ட மதம், இனம், மொழி போன்ற அடையாளங்களின் மீது ஏற்படும் வெறுப்பால், அந்த அடையாளங்கள் கொண்டவர்களின் மீது ஏவப்படும் குற்றங்களையே வெறுப்புக் குற்றம் என்கின்றனர். கருப்பினத்தவர்கள், யூதர்கள், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் இத்தகைய வெறுப்புதான் என்கிறது எஃப்.பி.ஐ.யின் அறிக்கை. அமெரிக்காவில் கடந்த மூன்றாண்டுகளில் இத்தகைய வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கருப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராகவே இவ்வகைக் குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. 2017ஆம் ஆண்டு, கருப்பினத்தவர்களுக்கு எதிராக 2,013 குற்றங்கள் நடைபெற்றன. யூதர்களுக்கு எதிராக 938 குற்றங்கள் நடந்துள்ளன. 2016இல் 6,121 ஆக இருந்த வெறுப்புக் குற்றங்கள் 2017ஆம் ஆண்டில் 7,175 ஆக, 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மதம் சார்ந்த காரணங்கள் 20.6 சதவீதக் குற்றங்களுக்குக் காரணமாக உள்ளன. பாலியல் சார்நிலை 15.8 சதவீத குற்றங்களுக்கு காரணமாக அமைகின்றன. 'இத்தகைய வெறுப்புக் குற்றங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அரசு இத்தகைய குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மேத்யூ விட்டேகர் உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !