பணப்பரிவர்த்தனைக்கு இந்தியர்கள் முன்னுரிமை
மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. கறுப்புப்பண ஒழிப்பு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் இம்முடிவை எடுத்ததாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஆன் - லைன் பரிவர்த்தனை, கணிசமாக அதிகரித்தது. எனினும், பணம் எடுப்பது மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, ஆன் - லைன் பரிவர்த்தனையின் அளவு பிப்ரவரியில் குறையத்தொடங்கியது. இந்நிலையில், மார்ச் மாதத்தேோடு ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரலுக்கான ஆன் - லைன் பரிவர்த்தனை 26.78 சதவீதம் குறைந்து கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மறுபுறம், ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்தியர்கள் நேரடிப் பணம் மூலம் பரிவர்த்தனை செய்ய விரும்புவதையே காட்டுவதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் நவம்பருக்கு முந்தைய பணப்புழக்க நிலை திரும்பும் என்றும், ஆன்லைன் பரிவர்த்தனை அளவு பெருமளவில் சரியும் என்றும் கருதப்படுகிறது.