குறுக்கி...!
கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு போகப், பேருந்தில் ஏறினார்கள் சூர்யாவும், அவன் தங்கையும். அவர்களுடன் பெற்றோரும் இருந்தார்கள்..பேருந்தில் மூவர் இருக்கை மட்டுமே காலியாக இருக்க, நால்வர் எப்படி அமர்வது என்று யோசித்தனர். சூர்யாவின் தந்தை, எல்லாரும் கொஞ்சம் 'குறுக்கி' அமர்ந்தால் இடம் போதும் என்று சொல்ல, நால்வரும் மூவருக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டனர்.''அப்பா, குறுக்கி அமர்ந்துகொள்ளலாம் என்று நீங்கள் சொன்னதும், நேற்று எனக்கு தமிழாசிரியர் நடத்திய பாடம்தான் நினைவுக்கு வருகிறது,'' என்றான் சூர்யா.''என்ன சொல்லு?'' என்றார் தந்தை .''ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம்,'' என்று பதிலளித்தான் சூர்யா.''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு, நான் படித்து ரொம்ப நாளாச்சு,'' என்றார் தந்தை.''ஆ, ஈ, ஊ, ஏ, ஓ... போன்ற நெடில் எழுத்துகளுக்கு இரண்டு மாத்திரை. அது போலவே 'ஐ, ஒள' - ஆகிய எழுத்துகளுக்கும் இரண்டு மாத்திரைதான்,'' என பதிலளிக்க தொடங்கினான்.''சரி, இதில் குறுக்கம் எங்கே வருகிறது?'' வினவினார் தந்தை.''வாத்தியார் சொன்னதை அப்படியே சொல்றேன், என்றவன், சொல்லத் தொடங்கினான்,'ஆடு, ஈசல், ஊஞ்சல், ஏற்றம், ஓடம் என்ற சொற்களின் உச்சரிப்பில் உள்ள ஆ, ஈ, ஊ, ஏ, ஓ எழுத்துகள் இரண்டு மாத்திரை அளவிலேயே ஒலிக்கும். ஆனால், ஐ, ஒள ஆகிய எழுத்துகள் சொற்களோடு ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரையளவு ஒலிக்காமல், குறுகி ஒரு மாத்திரையளவிலேயே ஒலிக்கும். இதற்குப் பெயர்தான் ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம். இதுதான் தமிழாசிரியர் எனக்குச் சொன்னது,'' என்றான்''ஏதேனும் உதாரணம் சொன்னாரா'' என்றார் தந்தை ஆர்வமாய்.'' 'ஐயம், வலை, ஐம்பது, ஒளவையார், கௌதாரி'' இவற்றிலெல்லாம் ஐ மற்றும் ஒள ஒரு மாத்திரையளவே ஒலிக்கின்றன,'' என்றார்பா.''நான் ஒன்று சொல்லட்டா'' என்றார் தந்தை.இந்த 'ஐ' மற்றும் 'ஒள' வரிசை எழுத்துகளே வேண்டாம். அவற்றை 'அய்' என்றும் 'அவ்' என்றும் எழுதிக்கொள்ளலாம் என்று சில தமிழ் ஆர்வலர்கள் சொல்கின்றனர்'' என்றார் சூர்யாவின் தந்தை.''அப்படியென்றால், 'பூனையை - பூனய் என்றும், மழையை - மழய் என்றும்' எழுத வேண்டியிருக்குமே'' என்றான் சூர்யா, சிரித்தபடி.''சரி... சரி... பேருந்து கொஞ்சம் காலியாகிவிட்டது. நாம் இப்படிக் குறுக்கி உட்கார அவசியமில்லை. நீயும், அப்பாவும் வேறு இருக்கைக்கு மாறி, தாராளமாக உட்காருங்கள்'' என்றார் சூர்யாவின் அம்மா சிரித்தபடி.