வேற்றுமைத் தொடர்களில் வலி மிகுமா?
ஒரு சொற்றொடரில் அமைந்துள்ள பெயர்ச்சொல், ஒரு வேற்றுமை உருபினை ஏற்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டு, தான் வழங்கும் பொருளில் சற்றே வேறுபட்டு நிற்கும். இதுவே வேற்றுமைத் தொடர் ஆகும்.'தண்ணீர் கிடைக்கிறது'. இந்தச் சொற்றொடரில் தண்ணீர் என்ற பெயர்ச்சொல் எழுவாய். இது எழுவாய்த் தொடர்.'தண்ணீரைக் குடிக்கிறது' என்பதில், தண்ணீர் என்ற பெயர்ச்சொல், ஐ என்ற வேற்றுமை உருபை ஏற்கிறது. அதனால், இது வேற்றுமைத் தொடர் எனப்படும்.வேற்றுமை உருபுகளுக்கு எண் வரிசை கொடுக்கப்பட்டு, அந்த எண்களாலேயே அழைக்கப்படுகின்றன. வேற்றுமை உருபுகளில் முதன்மையானவை ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை. இவை இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமை உருபுகளில் வருகின்றன. வேற்றுமைத் தொடர்களில் எங்கெங்கு வலி மிகும்? எங்கெங்கு வலி மிகுவதில்லை?வள்ளி சிரித்தாள் - இதுதான் முதலாம் வேற்றுமைத் தொடர். (இதற்கு எழுவாய்த் தொடர் என்ற பெயரும் உண்டு). முதலாம் வேற்றுமைத் தொடரில் வலி மிகாது.தண்ணீரைக் குடித்தான் - ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது இரண்டாம் வேற்றுமைத் தொடர். இதற்குக் கட்டாயம் வலி மிகும்.உளியால் செதுக்கினான் - ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது மூன்றாம் வேற்றுமைத் தொடர். இங்கே வலி மிகவில்லை.பாட்டுக்குப் பொருள் - கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது நான்காம் வேற்றுமைத் தொடர் - இதற்குக் கட்டாயம் வலி மிகும்.ஊரின் கிழக்கே - இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது ஐந்தாம் வேற்றுமைத் தொடர் - இங்கேயும் வலி மிகாது.எனது புத்தகம் - அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது ஆறாம் வேற்றுமைத் தொடர். - ஆறாம் வேற்றுமை உருபினை அடுத்து வலி மிகுதல் இல்லை.மலைக்கண் தோன்றியது - கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது ஏழாம் வேற்றுமைத் தொடர். இங்கே வலி மிகும் நிலைமை இல்லை.கண்ணா கேள் - ஒன்றினை விளித்துக் கூறுவதால், இதனை விளி வேற்றுமை என்பர். இதற்கு எட்டாம் வேற்றுமைத் தொடர் என்றும் பெயர். விளித் தொடரும் இதுதான். இங்கும் வலி மிகுதல் இல்லை. எட்டு வேற்றுமைகளில் ஐ, கு உருபுகள் பயிலும் இரண்டாம், நான்காம் வேற்றுமைத் தொடர்களில் கட்டாயம் வலி மிகும். பிற வேற்றுமைத் தொடர்களுக்கு வலி மிகுதல் இல்லை. -- மகுடேசுவரன்