சுயமா சிந்திக்கத் தெரிஞ்சுக்கணும்!
அன்று பவளவிழிக்குப் பிறந்தநாள். அழகான மஞ்சள் உடையொன்றை உடுத்திவந்தாள்.அதைப்பார்த்த தோழிகள் வியந்துபோனார்கள். 'பிரமாதமா இருக்கு' என்று பாராட்டினார்கள். ''நீயே தேர்ந்தெடுத்தியா?''''இல்லை, எங்க அண்ணன் தேர்ந்தெடுத்தார் என்ற பவளவிழி, எனக்கு எப்பவும் அவர்தான் உடைகளைத் தேர்ந்தெடுப்பார் '' என்றாள். ''ஏன்? உனக்குத் தற்சிந்தனையே கிடையாதா?'' என்று ஒரு தோழி குறும்பாகக் கேட்டாள். எல்லாரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.அவர்களுடைய கேலியை, பவளவிழி பொருட்படுத்தவில்லை. பேச்சை மாற்றுவதற்காக, ''அதென்ன தற்சிந்தனை?'' என்று கேட்டாள்.'தன் + சிந்தனை = தற்சிந்தனை' என்று விளக்கினாள் ஒருத்தி. ''அதாவது, தானே சொந்தமா சிந்திச்சு தீர்மானங்களை எடுக்கறது.''''எல்லாரும் சொந்தமாத்தானே சிந்திக்கறாங்க?''''இல்லையே, பல பேர் எப்பவும் மத்தவங்களோட பேச்சைக்கேட்டுக் குழம்புவாங்க. இவர் அதைச்சொன்னார், அவர் இதைச்சொன்னார்ன்னு, எல்லாத்தையும் கேட்டுட்டு என்னசெய்யறதுன்னு திகைச்சுப்போவாங்க.''''அதுக்காக, யார் பேச்சையும் கேட்காம இருக்கறதா? அதுவும் தப்புதானே?''''ஆமா, யார் என்ன சொன்னாலும், நான் என் விருப்பப்படிதான் செய்வேன்னு நினைச்சாலும் தப்பு. தற்சிந்தனையே இல்லாம எப்பவும் அடுத்தவங்க பேச்சையே கேட்கிறதும் தப்பு. எல்லாரோட கருத்துகளையும் கேட்டுக்கணும். அப்புறம் நாமே சொந்தமாச் சிந்திச்சு ஒரு தீர்மானமெடுக்கணும். அதுதான் நல்ல தலைவருக்கு அடையாளம்!''''அது சரி, நாமெல்லாம் தலைவருங்க இல்லையே, சாதாரண மாணவர்கள்தானே?''''தலைமைக்குணம்ன்னா பெரிய முதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புகளோட தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய குணமில்லை. அது எல்லாருக்கும் அவசியம். அதுதான் நம்மை வேகமா முன்னேத்தும்.''''அப்படியா? தற்சிந்தனையால என்ன பயன்?''என்றாள் ஒரு தோழி.''சிந்திக்கத் தெரிஞ்ச ஒருத்தரை, யாராலும் ஏமாத்த முடியாது. அதுதான் முக்கியமான பயன்!'' என்று விளக்கினாள் பவளவிழி. ''ஒருவேளை நீ எப்பவும் மத்தவங்களோட பேச்சையே கேட்டுக்கிட்டிருக்கேன்னா, நாளைக்கே ஒரு பிரச்னை வரும்போது, சிலர் உன்னைத் திட்டமிட்டு ஏமாத்தக்கூடும். அதிலேர்ந்து தற்சிந்தனைதான் உன்னைக் காப்பாத்தும்.அதுமட்டுமில்லை; உலகச் சரித்திரத்துல பெரிய அளவுல சாதிச்சவங்க எல்லாருமே தற்சிந்தனையோட வாழ்ந்தவங்கதான். அவங்களோட சொந்தச் சிந்தனைகள்தான், நம்ம சமுதாயத்தை இந்த அளவுக்கு முன்னேத்தியிருக்கு. அதனால, நாம ஒவ்வொருத்தரும் சொந்தமா சிந்திக்கணும். அதுதான் நமக்கும் நல்லது; சமுதாயத்துக்கும் நல்லது.''''அது சரி பவளவிழி, இவ்ளோ தூரம் பேசறே, ஆனா நீ எப்பவும் உங்க அண்ணனையே உனக்கு உடைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்றியே. அது ஏன்? உனக்குத் தற்சிந்தனையே கிடையாதா?''''எனக்குத் தற்சிந்தனை இருக்கறதாலதான், எங்க அண்ணனை உடை தேர்ந்தெடுக்கச் சொல்றேன்'' என்றாள் பவளவிழி.'எப்படி' என்றனர் தோழிகள்.''திருக்குறள் கேள்விப்பட்டதில்லையா? 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்...' எங்க அண்ணனுக்கு உடைகளைத் தேர்ந்தெடுக்கறதுல அருமையான ரசனை. அதனால, நான் தற்சிந்தனையோட சிந்திச்சு, அந்த வேலையை அவர்கிட்டே விட்டிருக்கேன். அவரோட திறமையைப் பயன்படுத்திக்கறேன். அதுதானே புத்திசாலித்தனம்!''- என். சொக்கன்