உள்ளூர் செய்திகள்

குரல் வேண்டாம்; களத்தில் இறங்குவோம்...

எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கத் தேவையில்லை; தனிமனிதர்களும் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என சிந்தித்து, அதை வெற்றிகரமாக சாதித்தும் காட்டியிருக்கிறார் ஒரு பெண். அவரின் வெற்றியை வழிகாட்டுதலாகக் கொண்டு, மாநில அரசும், அண்டை நாடுகளும் அவை எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்னைக்குத் தீர்வு கண்டு வருகின்றன. இந்தியாவின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில், பிழைப்புக்காக சட்டவிரோதமாக வேலை தேடி புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பணியிடங்களில் மனித உரிமை மீறல்கள், சுரங்கங்களில் தொழிலாளர்கள் சுரண்டப்படுதல் என ஏராளமான பிரச்னைகளை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொண்டுள்ளன.மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் பகுதியிலும் இந்த பிரச்னைகள் உண்டு. இப்பிரச்னைகளை எதிர்த்து தன் 17 வயதிலிருந்தே போராடி, மாற்றத்தை உருவாக்கியவர் ஹசினா. காஸி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஹசினா, இம்பல்ஸ் (Impulse) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ஹசினா.பெண்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றம், அங்குள்ள சமூக பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வைத் தந்துள்ளன. ஷில்லாங்கில், ஹசினாவின் செயல்பாடுகளால் மனிதக் கடத்தல்(Human trafficking) எனப்படும் வறுமையால் பிழைப்பு தேடி புலம்பெயரும் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதைக் கண்ட அரசு, மாநிலம் முழுவதும் அவரது திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அண்டை நாடுகளான பூடான், நேபாளமும் அவரின் வழிமுறையைப் பின்பற்றி வருகின்றன. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த 'அசோகா' ஃபெல்லோஷிப் விருதால், கௌரவிக்கப்பட்டுள்ளார் ஹசினா.அவரிடம் பேசியதிலிருந்து...பெண்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த எப்படி திட்டமிட்டீர்கள்? இங்கு, வருமானத்துக்காக மக்கள் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போவார்கள். அப்படிச் செல்பவர்களை, சுரங்க வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விடுவார்கள். ஆக, வருமானத்துக்கு என்ன செய்வது என யோசித்தோம்.வடகிழக்கு மாநிலப் பெண்கள், பொதுவாக கைவினைத் திறன் மிக்கவர்கள். அவர்கள் உருவாக்கிய பொருட்களை திட்டமிட்டு சந்தைப்படுத்தினோம். பெண்களை, தொழிலாளர்களாக மாற்றுவதைவிட, தொழில்முனைவோர்களாக மாற்றியதை சாதனையாகப் பார்க்கிறேன். பெண்களுக்கு கிடைத்த வருமானத்தால், மாற்றம் ஏற்படத் தொடங்கியது.அரசு உங்கள் பணியை அங்கீகரித்ததா? நாங்கள் இங்கு செய்த விஷயங்கள் மூலம், பிரச்னைகள் குறைந்து, வருமானம் அதிகரித்தது. இதைப் பார்த்த அரசு, எங்கள் திட்டத்தை பல இடங்களுக்கும் விரிவுபடுத்தியது. அண்டை நாடுகளான பூடான், நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த முயற்சி நல்ல பலனை அளித்தது. தொழில்முனைவோருக்கும், சமூக தொழில்முனைவோர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சமூக பிரச்னைகளுக்கான தீர்வாக சமூக தொழில்முனைவோர் உருவாகின்றனர். பிரச்னைகளுக்கு கிடைக்கும் தீர்வே, இதன் வெற்றியாக அங்கீகரிக்கப்படும். சமூக பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் வேண்டும். பிரச்னைகளுக்காக குரல் மட்டுமே கொடுத்தால் போதாது. அதுமட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒரு குறிக்கோளோடு சமூகப் பிரச்னையை அணுகும்போது, நிச்சயம் மாற்றம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !