உள்ளூர் செய்திகள்

ஜலதரங்கம் இசைப்போம்

இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும் வித்வான்களும் இருந்தார்கள். சரி, அது இருக்கட்டும். இப்போது நாமே ஒரு ஜலதரங்கம் கருவியை எந்த செலவும் இல்லாமல் செய்து, இசை ஒலிகளை எழுப்பிப் பார்க்கப் போகிறோம். அந்த ஒலிகளில், நம்மால் இசைக்கு அடிப்படையான ஸ்வரங்களைப் பிரித்து உணர முடிந்தால், ஒரு பாட்டைக் கூட வாசிக்கலாம். மிக மிக எளிமையாக இதைச் செய்து பார்க்கப் போகிறோம். முதலில் ஒரே அளவுள்ள எட்டு செம்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். செம்பு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. டம்ளர்கள் நிச்சயம் நம் வீட்டில் இருக்கும். அவற்றை எடுத்துக்கொள்ளலாம். எட்டு டம்ளர்கள். நீங்கள் வசதியாகத் தரையில் அமர்ந்துகொண்டு, உங்களைச் சுற்றி அரை வட்ட வடிவத்தில், இந்த டம்ளர்களை சீரான இடைவெளியில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா டம்ளர்களும் உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.இப்போது, ஒரு பென்சில் அல்லது குடைக்கம்பி, அல்லது பின்னல் கம்பி போன்ற கெட்டியான, நீளமான ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் கம்பியால் டம்ளர்களை வரிசையாகத் தட்டுங்கள். என்ன கேட்கிறது?ஒரே மாதிரியான ஓசை கேட்கிறதா? இசையை உருவாக்க, வெவ்வேறு ஸ்ருதிகளில் ஒலி தேவைப்படுமே… என்ன செய்வது? கவலை வேண்டாம்.அந்த டம்ளர்களில் சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றுங்கள். முதல் டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் என்றால் அடுத்ததில் கொஞ்சம் கூடுதல் தண்ணீர். அதற்கும் அடுத்ததில் இன்னும் கூடுதல்… இப்படி ஊற்ற வேண்டும். ஆயிற்றா?இப்போது கம்பியால் ஒவ்வொரு டம்ளரையும் தட்டுங்கள். ஆஹா… ஒவ்வொரு டம்ளரில் இருந்தும் வெவ்வேறு ஸ்ருதியில் ஓசை எழும்புகிறதா?அவ்வளவுதான் முடிந்தது! டம்ளர்களை மாற்றி மாற்றி, கம்பியால் தட்டிப் பாருங்கள். விதவிதமான சத்தங்கள், வித்தியாசமான இசை!இது எப்படி நடக்கிறது?காலி டம்ளரில் தண்ணீர் நிரப்பாத வெற்றிடம் இருக்கிறதே, அதுதான் இந்த ஒலி வேறுபாட்டுக்குக் காரணம். காற்று எவ்வளவு உயரத்துக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏற்ப, ஒலியின் ஸ்ருதி இருக்கும். ஜலதரங்கம் என்பதற்கு, தமிழில், 'நீரலை இசை' அல்லது 'நீர்க்கிண்ண இசை' என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !