உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க....

ஸ்ரீராம், திண்டுக்கல்: பால் எதனால் பொங்குகிறது?பால் என்பது, நீரைப் போன்ற தனி திரவம் இல்லை. கொழுப்பு, கார்போஹைட்ரேட் (Carbohydrate), புரதம், பற்பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. வேதியியல் பார்வையில் பால் ஒரு கூழ்மம் (Colloid). கூடுதல் லாபத்திற்காக பால்காரர் தண்ணீரைக் கலந்துவிடுகிறார் என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், இயல்பாகவே பாலில் நீர் இருக்கும்!தண்ணீரின் கொதிநிலை 1000 செல்ஷியஸ். ஆனால், பாலில் உள்ள கொழுப்பு சுமார் 50 டிகிரியிலேயே உருக ஆரம்பித்துவிடும். எனவே, பாலைக் காய்ச்சும்போது தண்ணீர் கொதிக்கும் முன்னரே பாலில் உள்ள கொழுப்பு உருகிவிடும். நீரின் அடர்த்தியை விட கொழுப்பின் அடர்த்தி குறைவு. எனவே, கூழ்மத்திலிருந்து பிரியும் 'அடர்த்தி குறைவான' கொழுப்பு மேலே உயரும். இதுவும், சில புரதம் முதலியனவும் சேர்ந்து மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படிந்துவிடும். மேலும், பால் சூடாகும்போது அதிலுள்ள நீர், தனது கொதிநிலையை அடைந்ததும், ஆவியாகி வெளியேறும். நீராவியாக மாறிய நீர், பாலின் மேல்புறம் வந்து அங்கே சின்னச் சின்னக் குமிழ்களாக மாறி வெடிக்கும். முதலில் படலம் முழுமையாகப் பரவாமல் இருக்கும்போதும், மிக மெலிதாக உள்ளபோதும் நீராவி வெளியேறிவிடுகிறது. ஆனால், படலம் நன்கு முழுவதுமாகப் பரவிய நிலை வரும்போது நீராவி வெளியேற முடியாது. இப்போது மேற்புறத்தில் உள்ள பாலாடை இந்த நீராவியை வெளியேற விடாமல் தடுக்கும். இதனால் நீராவி விரிவடைந்து, பாலாடையைத் தள்ளிக் கொண்டு மேலே எழும்பும். இதைத்தான் நாம் 'பால் பொங்குது' என்கிறோம். உள்ளபடியே, மேற்புறத்தில் படிகிற ஆடையை நீக்கி, நீராவி செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தால், பால் பொங்காது. அதேபோல ஒரு கரண்டியால் பாலைத் தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டே இருந்தால் பால் பொங்கி வழியாது, கொழுப்பு படிவதும் தடுக்கப்படுகிறது. தோன்றும் நீராவிக் குமிழ்கள் உடனுக்குடன் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கும் வாய்ப்பு ஏற்படாது. ரா.பால சூர்யா. சென்னை: பசிக்கும்போது காது அடைப்பது போல இருப்பது ஏன்? 'வயிறுகாய் பெரும் பசி வருத்தும்' நிலையில், ரத்தத்தில் குளுகோஸ் (Glucose) அளவு வெகுவாகக் குறைந்துவிடும். இந்த நிலையை ஹைபோகிளைசீமியா (Hypoglycemia) என்பார்கள். குளுகோஸ் குறைந்த நிலையில் மூளை, மைய நரம்பு மண்டலப் பகுதி போன்றவற்றின் செயல்கள் பழுதுபடும். குளுகோஸ் குறைவதால் நரம்பு செல்களின் இயக்கம் தாறுமாறாகத் தூண்டப்படும். அப்போது பல்வேறு வகையான 'மயக்கங்கள்' ஏற்படும். இதனை வற்றுணர்வு (பாரஸ்தீஸியா - paraesthesia) என்பார்கள்.பசியில் காது அடைத்துக் கொள்வது போலத் தோன்றுவதும் ஒரு வற்றுணர்வுதான். அதே போல தலை சுற்றல், கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குதல், அடி வயிற்றில் மிகுதியாக அமிலம் சுரத்தல் என பல உடல் உபாதைகள் ஏற்படும். ஹைபோகிளைசீமியா நிலையில் ஏற்படும் 'காது அடைப்பு', காற்றழுத்த வேறுபாட்டால் ஏற்படும் மெய்யான அடைப்பு அல்ல. அது ஒரு வகை மயக்க உணர்வு. தீவிர ஹைபோகிளைசீமியா ஏற்பட்டால் கோமா (Coma) நிலைகூட ஏற்படலாம். பல நாட்கள் சரியான உணவு இல்லை என்றால் பசியில் காது அடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு நேரத்துக்கு சாப்பிடா விட்டாலே காது அடைக்கிறது என்றால், மருத்துவரை நாடி அறிவுரை பெறுவது நல்லது. ஸ்ரீநிவாஸ் கணேஷ் (மின் அஞ்சல்): மூளையில் உணரிகள் (Receptors - ரிசெப்டர்ஸ்) இல்லை என்பது உண்மையா? உண்மை எனில், உடலில் வேறெந்தப் பகுதிகளில் உணரிகள் இல்லை?மூளையில் உணரிகள் இல்லை. மூளை செல்களான நியூரான்கள் (Neurons) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள நியுரோட்ரான்ஸ்மிட்டர்ஸ் (Neurotransmitters) எனும் வேதி உணரிகளைக் கொண்டுள்ளன. வலி எப்படி ஏற்படுகிறது? உதாரணமாக காலில் முள் குத்துகிறது. அந்தப் பகுதியில் உள்ள திசு செல்கள் இதனால் பாதிப்பு அடைகின்றன. அந்தத் திசுவில் இருக்கும் நரம்பு இழைகளில் நாசிசெப்டார் (Nociceptors) எனும் சிறப்பு நியூரான் தூண்டப்பட்டு, நரம்பு வழியாக இந்தத் தகவல், தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்லும். இந்தச் செய்தி மூளைக்கு எட்டியதும் வலி என்னும் உணர்வு ஏற்படுகிறது. உடலின் வெளியே தோல், கார்னியா (Cornea) பகுதிகள், உள்ளே குடல் போன்ற பகுதியில் படர்ந்து இருக்கும் ஜவ்வு போன்ற திசு, தசைப் பகுதி, மூட்டுப் பகுதிகள், சிறுநீர்ப் பை, குடல் நாளம், ஜீரணக் குழாய், கர்ப்பப் பை போன்ற பகுதிகளில் இந்த நாசிசெப்டார் உண்டு. இங்கு திசு பாதிப்பு ஏற்பட்டால் வலி இருக்கும். பித்த நீர்ப் பை, ஈரல், மூளை, கணையம், இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளில் நாசிசெப்டார் இல்லை. எனவே இந்த உறுப்புகளால் வலி உணர முடியாது. உடலின் வலியை உணரும் மூளை, தன் வலியை உணரமுடியாது! இது விநோதம்தான், இல்லையா?மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !