வெங்கியை கேளுங்க
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிவீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டே இருந்தால், நிலத்தடி நீர் குறையுமா, ஊறுமா?அமுதன், 8ம் வகுப்பு, மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி, மதுரை.சந்தேகமே வேண்டாம் நிச்சயமாகக் குறையும். மழைநீரே நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீர் அளவை உயர்த்துகிறது. கிணறு, ஊற்று, ஆழ்துளை கிணறு போன்றவை மூலம் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது. வெளியேறும் நீரின் அளவைவிட உள்ளே செல்லும் நீரின் அளவு கூடுதலாக இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால், ஆழ்துளைக் கிணறு மூலமாக நீரை இறைத்தால் வெளியேறும் நீரின் அளவு, உள்ளே செல்லும் நீரின் அளவைவிட அதிகமாகும். இதனால், நிலத்தடி நீர் குறையும். தருமபுரி மாவட்டம் தளி பகுதியில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் 15 - 20 அடிக்குக் கீழே நிலத்தடி நீர் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது 1,200 அடி வரை துளை போட்டால்தான் நீர் கிடைக்கும் என்கிற அளவுக்கு, நிலத்தடி நீர் குறைந்துள்ளது. 2002 முதல் 2012 வரை நடத்தப்பட ஓர் ஆய்வு, 'நிலத்திற்குள் செல்லும் நீரின் அளவு, ஆண்டுக்கு வெறும் 19.81 km3 எனும்போது, ஆண்டுக்கு 21.4 km3 நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது' என எச்சரிக்கை செய்கிறது. அதாவது, வரவை விட செலவு 8% கூடுதல். இதே நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் குறைந்து வற்றிவிடும் அபாயம் உண்டு.மழை பெய்வதற்கு மரம் வளர்த்தால் போதும் என்கிறார்களே, மழையை வரவழைக்காதமரம் ஏதும் இருக்கிறதா?ரா.சுரேஷ், அரசு நடுநிலைப் பள்ளி, விருகாவூர்.இடி விழுவதால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, கட்டடம் பாதிப்பு அடையாமல் இருக்க இடிதாங்கியைப் பயன்படுத்துவர். அதுபோல, எங்கோ செல்லும் மழை மேகத்தைப் பிடித்து இழுத்து வந்து, மழையை மரம் பொழிய செய்கிறது எனக் கருதுவது பிழை. தாவரங்கள் உட்பட எல்லா மரங்களும் நிலத்திலிருந்து நீரை எடுத்து, அதன் இலைகள் மூலம் ஆவியாக்கி, வளிமண்டத்தில் வெளியிடுகின்றன. நன்கு வளர்ந்த மரம் ஒரு நாளைக்கு சுமார் 1,000 லிட்டர் நீராவியை வெளியிடும். நிலத்து நீரை வானத்துக்கு எடுத்துச் செல்லும் மரங்களின் இயக்கத்தை, 'உயிரி பம்பு' (biotic pump) என்பார்கள். அடர்ந்த அமேசான் காடு மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 2,000 கோடி டன் நீராவியை வெளியிடும். அமேசான் நதி தினமும் கடலில் சேர்க்கும் நீரைவிட இது கூடுதல் அளவு. இந்த நீராவி வானத்தில் மழை மேகங்களாக உருவாகும். வெப்பமான நீராவி உயரே செல்லும்போது, அங்கே காற்றழுத்தத் தாழ்வுமண்டலத்தை உருவாக்கும். தாழ்வான காற்றழுத்தப் பகுதிக்கு கடல் பகுதியிலிருந்து நீர்ப்பசை கொண்ட காற்று கூடுதலாக வந்து சேரும்.மேலும், இயற்கையில் மரங்கள் உமிழும் வேதிப்பொருட்கள் மேகத்தில் நீர்த்துளி உருவாகக் காரணமாகி, மழை உருவாக உதவுகிறது. இவற்றின் தொடர்ச்சியாக நல்ல மழை பொழியும். காட்டுப் பகுதியில் இந்த மேகங்கள் உருவானாலும், காற்றில் அடித்து செல்லப்பட்டு, பல இடங்களில் மழை பொழியும். காட்டை வெட்டினால், இந்த இயக்கம் செயலிழந்து போகும்; காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை ஏற்படுத்த முடியாது; கடலிலிருந்து ஈரப்பசை கொண்ட காற்றைக் கவர்ந்து இழுக்க முடியாது. இவ்வாறு காடுகள் அழிந்த பகுதியில், மழை வரத்து குறைந்து, காலபோக்கில் அங்கே நிலம் தரிசாக மாறிவிடும்; சிலசமயம் பாலை நிலமாகக் கூட மாறலாம்.கடலில் அலைகள் உருவாகக் காரணம் என்ன? அவை அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வேகமாக இருப்பது ஏன்?சௌஜன்யா.பி, 7ம் வகுப்பு, பாரதிய வித்யா பவன், கோவை.கடலில் அலைகளை ஏற்படுத்த, தரைப்பகுதியில் அடிக்கும் காற்றே காரணம். சாதாரணமாக உருவாகும் அலைகளுக்கும், பௌர்ணமி, அமாவாசை அன்று ஏற்படும் கடலேற்ற, கடலிறக்க நிகழ்வுகளுக்கும் வேறுபாடு உண்டு.கடலேற்ற அலைகள் என்பவை, சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடல்மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே. கடலேற்ற அலைகளுக்குக் கீழே நீங்கள் 'டைவ்' அடித்துப் பார்த்தால், ஆழமாகச் செல்லச்செல்ல, அதன் வேகம் குறைவதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழே தண்ணீரில் எந்தவித சலசலப்பும் இருக்காது.அமாவாசை அன்று, ஒரே திசையில் வானத்தில் கடலின்மேலே நிலைகொள்ளும் சூரிய, சந்திரனின் ஈர்ப்பு விசைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பிடித்து இழுக்கும்போது, கடலின் உயரம் கூடும். சூரியனும் சந்திரனும் பக்கவாட்டில் உள்ளபோது, கடலின் மீது அவற்றின் தாக்கம் சற்றே குறையும். இதுவே கடலிறக்கம்.பூமியில் நீர் எப்படித் தோன்றியது?மா.சந்தோஷ், மின்னஞ்சல்.இன்று பூமியில் இருக்கும் நீரை, குட்டி வால் நட்சத்திரங்கள் கொண்டுவந்தன என, பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தினமும் ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒருமுறை என்ற விகிதத்தில், சுமார் 20 முதல் 40 டன் எடை உடைய நீர்ச் செறிவான குட்டி வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதுகின்றன.இந்த நீர்தான் பூமியில் வந்து சேர்கிறது. இந்த விகிதத்தில் 20,000 ஆண்டுகளில் ஓர் அங்குலம் நீர் பூமியில் கூடும். துளித்துளியாக சிறுகச் சிறுக சேர்ந்த நீரே, இப்போது கடலாக, ஏரியாக, பூமியை நீர் நிரம்பிய கோளாக மாற்றியுள்ளது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.