வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. பாலில் ஆடை படர்வது எதனால்? அதற்கும் பொங்குவதற்கும் என்ன தொடர்பு?மாணிக்கம், 10ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருட்கள் கொண்ட ஒரு கூழ்மப் பொருள்தான் பால். பாலைக் கொதிக்க வைக்கும்போது கொழுப்பு, புரதம் போன்றவை வெப்பத்தால் தனியாகப் பிரிந்து, அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் வந்து சேர்கின்றன. அப்போது இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஆடையாகப் படர்கின்றன. இதற்கிடையில் பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்து, கொதித்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி மேலே எழுகிறது. ஆனால், அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு மேலே எழும்பி வெளியேறும். இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம்.பொங்கும் நிலையில் அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால், நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும். பொங்கும் பாலைக் கரண்டியால் கிளறி விட்டால், மேலே படர்ந்திருக்கும் பாலாடை உடைபட்டுக் கீழே இருக்கும் நீராவி வெளியேறும். இதனால், பால் பொங்குவதும் நின்றுவிடும்.2. பல வண்ணங்களுடன் நவரத்தினக் கற்கள் எவ்வாறு இயற்கையாக உருவாகின்றன?பு.ஹரிணி, 5ஆம் வகுப்பு, பத்மா சுப்ரமணியம் பாலபவன் மெட்ரிக் பள்ளி, மாங்காடு.கற்களில் உள்ள தனிம, தாதுக்கள்தான் வண்ணங்களுக்குக் காரணம். எடுத்துக்காட்டாக, கொரண்டம் (Corundum) எனப்படும் குருந்தக்கல் வேறு எந்தக் கலப்பும் இன்றி தூய நிலையில் இருக்கும்போது, அதற்கு எந்த நிறமும் இல்லை. அதாவது, அது தன் மீது விழும் எல்லா நிறத்தையும் அப்படியே பிரதிபலித்து விடும். ஆனால், அதே கொரண்டத்தில் சிறிதளவு குரோமியம் கலப்பு ஏற்பட்டால், சிவப்பைத் தவிர வேறு நிறங்களை உறிஞ்சிவிடும். அதனால், வெறும் சிவப்பு மட்டுமே பிரதிபலிப்பதால் அந்தக் கல் 'சிவப்பு மாணிக்கம்' என அழைக்கப்படுகிறது. அதே கொரண்டத்தில் டைட்டானியம் கலந்தால் 'நீலக்கல்' உருவாகிறது. பெரில் தாதுப் பொருளில் குரோமியம் கலப்பு ஏற்பட்டால் பச்சை நிற 'மரகதம்' உருவாகும். சில சமயம் அதே பெரில் தாதுப் பொருளில் வனேடியம் கலந்தால் பச்சைக்கல் மரகதம் ஏற்படும். நிறங்களின் வெளிப்பாடு எல்லாம் அந்தக் கற்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் வினைதான். 3. தாயின் வயிற்றில் உள்ள கரு ஆண், பெண் என மாறுவது எப்படி?வி.அஜய், மௌண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.தாயின் வயிற்றில் கரு உருவான பின் அதன் பாலினம் ஆண் அல்லது பெண் என மாற முடியாது. கருத்தரிப்புக்கு முன்னர் தாயின் வயிற்றில் கரு முட்டை இருக்கும். மனித செல்கள் ஜோடி குரோமோசோம் கொண்டது. ஆனால், இந்தக் கருமுட்டையில் எப்போதும் X குரோமோசோம் எனும் இனக்கீற்று மட்டுமே இருக்கும். ஆணின் விந்தில் X அல்லது Y குரோமோசோம் இருக்கும். X குரோமோசோம் கொண்ட ஆண் விந்து சேர்ந்து முட்டை கருவுற்றால் அந்தக் கரு பெண்ணாகப் பிறக்கும். அந்த கருவின் ஒவ்வொரு செல்களிலும் XX என இரண்டு ஜோடி X குரோமோசோம்கள் அமையும். அதே சமயம் ஆணின் விந்தில் Y குரோமோசோம் இருந்து அது கருமுட்டை சென்று கருவுறச் செய்தால் அந்தக் கரு ஆணாகப் பிறக்கும், அந்த ஆணின் ஒவ்வொரு செல்களிலும் XY குரோமோசோம் ஜோடிகள் அமையும். அதாவது நமது செல்களில் XX குரோமோசோம் அமைந்தால் பெண்; XY குரோமோசோம் அமைந்தால் ஆண். எனவே கருத்தரித்த பின் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் மாறாது.4. வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்கிற நிகழ்வு உண்மையா? அதை வெறும் கண்களால் பார்க்கலாமா?எஸ்.ஐஸ்வர்யா, 10ஆம் வகுப்பு, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, இராமநாதபுரம்.வானத்தில் இருந்து கீழே விழும் நட்சத்திரம் அல்லது எரிநட்சத்திரம் என்பது விண்மீன் இல்லை. வானத்தில் அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கும் பாறைகள் சில சமயம் பூமி மீது மோதும். அவ்வாறு மோத வரும்போது பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில்தான் புகும். வேகமாகப் பயணிக்கும் விண்கற்கள் வளிமண்டலக் காற்றில் உராயும்போது வெப்பம் எழும். அந்த வெப்பத்தில் எரியும் கற்களே நமக்கு எரிகற்களாகத் தெரிகின்றன. அந்தக் காலத்தில் இந்த எரிகற்களையே விண்மீன் எனக் கருதி, வானிலிருந்து விழும் நட்சத்திரங்கள் என கற்பனையாகக் கருதினர். ஒவ்வோர் இரவும் வானம் மேகமூட்டங்களின்றித் தெளிவாக இருந்தால், சுமார் இரண்டு அல்லது மூன்று எரிநட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்க்கலாம்.