வெங்கியை கேளுங்க!
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. மழையின் போது இடி, மின்னல் ஏற்பட்டால் மழை குறைவதுபோல் தோன்றுவது எதனால்?க. காவ்யா, மின்னணுவியல் மூன்றாம் ஆண்டு, வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, கரூர்.இரண்டு வகை மின்னல்கள் உண்டு.1. மேகத்துக்கும் மேகத்துக்கும் இடையே பாய்வது2. மேகத்திலிருந்து பூமிக்குப் பாய்வது முதல் வகை மின்னல் பாயும்போது, அந்தப் பகுதி மேகத்தில் இருந்து திடீரென கூடுதல் மழைப் பொழிவு ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். மின்னலின் ஊடே ஏற்படும் மின்னோட்டத்தின் காரணமாக, மேகத்தில் உள்ள துகள்களின் அளவு மாற்றம் அடைகிறது என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. மின்னல் ஏற்பட்ட 30 நொடிகளில் நிலைமின்சார விளைவின் காரணமாக, துகள்களின் நிறை சுமார் நூறு மடங்கு வரை பெரிதாகிறது. இதன் காரணமாக நீர்த் திவலைகள் திரண்டு மழை வீரியம் அடைகிறது. இரண்டாவது வகை மின்னல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர். நிலப்பரப்பை இருபத்தி ஐந்து சதுர கி.மீ. பரப்பளவுப் பகுதிகளாக்கி, அந்த ஒவ்வொரு பகுதியிலும் விழுந்த மின்னல் எண்ணிக்கை, மழை அளவு இரண்டையும் அளவீடு செய்தனர். பின்னர் இரண்டு தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மின்னல் கூடக்கூட மழைப் பொழிவு அளவு கூடியது. எந்தப் பகுதியில் மின்னல் கூடுதலாக விழுகிறதோ, அந்தப் பகுதியில் மழை அளவு கூடுதல் எனவும் கண்டுபிடித்துள்ளனர். 2. இரண்டு கண்கள் இருந்தாலும் பார்க்கிற காட்சி ஒன்றாகத் தெரிவது ஏன்?ரா.ம. ஸ்ரீராம்குமார், 8ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.இது மூளையின் விளையாட்டு! கண் என்பது ஒரு லென்ஸ்; அதில் விழும் ஒளிக்கற்றைகளைக் குவித்து விழித்திரையில் விழச் செய்கிறது. அவ்வாறு திரையில் விழும் பிம்பம் தலைகீழாக இருக்கும் என, அறிவியல் வகுப்பில் படித்து இருப்பீர்கள். விழித்திரையில் விழும் பிம்பத்தை மூளை நேர் செய்து மனக்கண் முன் கட்டுகிறது. பரிசோதனை: வலது கையால் மூக்குக்கு நேராக ஒரு பென்சிலை அசைக்காமல் பிடிக்கவும். இப்போது இடது கண்ணை மூடி பென்சில் எங்கே காட்சி தருகிறது என பார்க்கவும். பின்னர் வலது கண்ணை மூடிப் பார்க்கும்போது, பென்சில் இடம் மாறியுள்ளது போலத் தெரியும். அதாவது வலது கண் காணும் காட்சியை அதே போல் இடது கண் காண்பது இல்லை.விழித்திரையில் தலைகீழாகத் தெரியும் பிம்பத்தை எவ்வாறு நேர் செய்கிறதோ அதே போல இரண்டு கண்களில் காணும் காட்சியையும் ஒன்றாகப் பிணைத்துச் சரிசெய்து ஒரே காட்சியாக (stereopsis) மூளை மாற்றுகிறது. இந்தக் காட்சியே எந்தப் பொருள் அருகே உள்ளது, எந்தப் பொருள் தொலைவில் உள்ளது என்பது குறித்த உணர்வைத் தருகிறது.3. நிலாவுக்கு அருகில் தெரிவது நட்சத்திரமா, கோளா? தெ. சிபிராஜ், நகராட்சி நடுநிலைப் பள்ளி, தேனி.இரவு வானில் வெறும் கண்களாலேயே நிலா மற்றும் ஐந்து கோள்களைக் காணமுடியும். தெளிவான வானத்தில் சுமார் 2,000 விண்மீன்கள் கண்களுக்குத் தெரியும் என்கிறார்கள். வெள்ளி, புதன் ஆகியவை பூமிக்கும் சூரியனுக்கும் உள்ளே சுற்றும் உட்கோள்கள். எனவே, அவை சூரியன் மறைந்த பிறகோ அல்லது உதிக்கும் முன்னரோ தென்படும். செவ்வாய், வியாழன், சனி ஆகியவை இரவு வானில் எந்தக் கோணத்திலும் தென்படலாம். பூமியைச் சுற்றி சுமார் 27.3 நாட்களில் நிலவு செல்லும்போது வானில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு விண்மீன்களின் அருகே தென்படும். உற்றுநோக்கல் வழியாக இதனை அறிந்த பழங்குடியினர் நட்சத்திரக் கூட்டங்களை இனம் கண்டு, 27 நட்சத்திரங்கள் எனும் கருத்தை உருவாக்கினார்கள். எனவே, நிலவுக்கு அருகே மூலம், திருவாதிரை, சித்திரை போன்ற பிரகாசமான விண்மீன்களைக் காணலாம். சில சமயம் சனி, வியாழன், செவ்வாய் கோளையும் காணலாம். விண்மீன்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் நமக்கு மிக அருகே உள்ள கோள்களில் மினுமினுப்பு இருக்காது. வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள் ஒளிப்புள்ளி போல அமைவதால் அதில் மினுமினுப்பு இருக்கும். இதைக்கொண்டு கோள்களையும் பிரகாசமான விண்மீன்களையும் வேறுபடுத்திக் காணலாம்.4. இந்த நோய்க்கு இந்த மூலிகை என்பதை யார் மீது பரிசோதித்து நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்?மாணிக்கம், 9ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.மூலிகை மருந்துகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என ஆயுர்வேத நூல்களில் குறிப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, 'சரகஸம்ஹிதை' நூலில் 'ஓஸதீர் நாமரூபாயம் ஜனதே ஹையஜபாவனே; ஆவிபாஷ்சைவா கோபஷ்ச யே சான்யே வனவாஸினஹா' என்கிறது. அதாவது காட்டில் வசிக்கும் வனவாசிகளிடம் இருந்தும், ஆடு மாடுகளை மேய்க்கும் இடையர்களிடமிருந்தும் மூலிகைகள் குறித்த அறிவைப் பெறுகிறோம் என்பது விளக்கம். காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் தங்களுக்கு உடல் நலக்கோளாறு வந்தால், 'இந்த இலைச்சாறு உதவும்; அந்தத் தாவரத்தின் பாகம் பயன் தரும்' என, அனுபவ அறிவில் பெற்றதைத் தொகுத்துச் செறிவாக்கி வளர்ந்ததுதான் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ அறிவு. இது ஏதோ ஒரு நாளில் எங்கிருந்தோ வந்தது அல்ல; பல ஆண்டுகளாகத் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பரிசோதனை செய்து கிடைத்த அறிவின் மூலமாகவே இது வளர்ந்தது.