வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் தி.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. டைனோசர்கள் காலத்தில் இருந்தே முதலைகளும் இருக்கின்றன. அப்படி இருக்க டைனோசர்கள் அழிந்தபோது முதலைகள் ஏன் அழியவில்லை?சி.ஹேஷ்வந்த் பாலாஜி, 11ஆம் வகுப்பு, எம்.எஸ். வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.டைனோசர்ஸ், டெரோசர் (pterosaur), முதலை போன்ற உயிரினங்கள் கிரட்டேசியஸ் அர்கசர்ஸ் (Cretaceous archosaurs) எனும் மூதாதையரிடம் இருந்து பரிணமித்தன. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், யுகடான் தீபகற்பப் (Yucatán Peninsula) பகுதியில், விண்கல் மோதிய பிரளயத்தில் முதலை தவிர, மற்ற உயிரினங்கள் அழிந்துபோயின என கருதுகின்றனர். இந்த மோதலின் விளைவாக, சில நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை பூமியில் சூரியன் தென்படா வண்ணம் தூசு படர்ந்து இருந்தது என்றும், குளிர் மிகுந்தது என்றும், அதன் விளைவாக மேலே சொன்ன உயிரினங்களின் உணவாக இருந்த பல்வேறு தாவரங்கள் அழிந்தன என்றும் கூறுகிறார்கள். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பரிணமித்த முதலைகள் இன்றளவும் சற்று ஏறக்குறைய அதே வடிவில்தான் இருக்கின்றன. தரையைத் தொட்டு அமையும் அவற்றின் உடலமைப்பு பிரளயத்தைச் சந்திக்க உதவியது என்கிறார்கள். அதேபோல யானை முதல் எலி வரையுள்ள விலங்குகளின் மூதாதையர் அந்தக் காலத்தில் சிறு உருவில்தான் இருந்தன. எனவே, குறைவான உணவைக் கொண்டு அவை தப்பிப் பிழைத்தன என்கிறார்கள். நிலத்திலும் நீரிலும் வாழும் தகவமைப்புக் கொண்ட முதலையால், இரண்டிலும் கிடைத்த உணவைக் கொண்டு வாழ முடிந்தது. ஆனால், நிலத்தின் தாவரத்தை மட்டும் நம்பி வாழ்ந்த டைனோசர்களால் பிரளயத்தைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெப்பமான உடல் அமைப்புக் கொண்ட டைனோசர்கள் எப்போதும் உணவு உட்கொண்டால் மட்டுமே அதன் உடலால் வெப்பத்தைச் சமாளிக்க முடிந்தது; ஆனால், வெப்ப உடலமைப்பு இல்லாத முதலைகள் உணவு இல்லை என்றால், பனிக்கால உறக்கத்துக்குச் (hibernation) சென்று சில மாதங்கள் கடந்து மீண்டும் இயங்கின. இதனால், அதிக அளவில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் முதலைகள் ஒன்று, இரண்டாவது பிழைக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும்; ஆனால், குஞ்சு வளர்ந்து பெரிதாகப் பல ஆண்டுகள் எடுக்கும் டைனோசர்களால் தனது சந்ததியைக் காப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் கருதுகோள்கள் மட்டுமே! மெய்யாக முதலைகள் ஏன் தப்பின; டைனோசர்கள் ஏன் அழிந்தன என்பதற்கு அறிவியல்பூர்வமான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2. இலையின் மேற்பரப்பில் அடர்த்தியான பச்சையும், கீழ்ப்பரப்பில் இலேசான பச்சையும் இருக்கக் காரணம் என்ன?பா. பிரவீன் ராகவேந்திரா, 8ஆம் வகுப்பு, ஜெயராஜ் அன்னபாக்யம் மெட்ரிக். பள்ளி, திண்டுக்கல். தாவரத்தில் எப்போதும் இலையின் மேற்புறமே சூரியனை நோக்கி இருக்கும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரத்துக்கு உணவு தயாரிக்க மேற்பகுதி உதவுவதால், குளோரோபில் (Chlorophyll) எனும் பச்சையம் கூடுதலாக இருக்கும். எனவே, இலைகளின் மேலே அடர் பசுமையும், கீழே வெளிர் பசுமையும் காணப்படும். இதே காரணத்தினால்தான், இளம் இலைகள் வெளிர் பசுமையாக இருக்கின்றன. இளம் இலைகளில் பச்சையத்தின் அடர்த்தி குறைவாக இருக்கும். இலை முதிரும்போது, அடர்த்தி கூடி நிறம் மேலும் கரும் பச்சையாக மாறும்.3. கருந்துளைக்குள் (Black hole) என்ன இருக்கிறது? அதன் உள்ளே சென்றால் காலத்தைக் கடக்க முடியுமா?ச.விஸ்வா, 9ஆம் வகுப்பு, அருள்மலர் மேல்நிலைப் பள்ளி, மதுரை.கருந்துளைகளுக்கு நிகழ்வு எல்லை (event horizon) என்ற ஒரு வரம்பு உள்ளது. அதன் உள்ளே கடும் வெப்பமும் அதிக அழுத்தமும் இருக்கும். எனவே, இயல்பில் காணும் அணுக்கள், எலக்ட்ரான், புரோட்டான் போன்ற நிலைகளில் பருப்பொருள் (matter) எதுவும் இருக்காது. இதனால் நிகழ்வு எல்லைக்கு உள்ளே இருந்து ஒளி உட்பட வேறு எதுவும் வெளிவராது. அதற்கு வெளியே உள்ளவை மட்டுமே நமக்குப் புலப்படும். கருந்துளைக்கு அருகே செல்லும்போது, நமது உடல் போன்ற அமைப்புகள் முற்றிலும் சிதைந்து, தனித்தனி அணுக்களாக மாறிவிடும். சில கருந்துளைகளால் அண்டவெளிப் புழுத்துளை (wormhole) என்ற ஒன்றை உருவாக்கிவிட முடியும் என்றும், இதன் காரணமாக மிகத் தொலைவில் உள்ள பிரபஞ்சப் பகுதிக்கு குறுக்குவழி கிடைக்கும் எனவும் இயற்பியலாளர்கள் கோட்பாடு ரீதியாகக் கூறுகிறார்கள். கருந்துளைகள் உள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன; ஆனால் காலப் பயணம், புழுத்துளை போன்றவை இன்றுவரை வெறும் கோட்பாடு மட்டுமே.4. ஒரு நாட்டின் சீதோஷ்ண நிலைக்கும், அந்த நாட்டுக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டா?இரா. உமாராணி, தலைமை ஆசிரியர், இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கர்பட்டி.இதுபோன்ற ஒரு கருத்து நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தது. அதன்படி ஜெர்மனி, ஐஸ்லாந்து போன்ற ஐரோப்பிய குளிர்ப் பகுதி நாடுகளில் இருப்பவர்கள் அறிவு நிறைந்தவர்களாகவும், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இருப்பவர்கள் அறிவு குறைவாகவும் இருப்பதாகக் கூறினார்கள். இது வெறும் கருத்து மட்டுமே. இந்தப் பூமியில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். அவர்கள் புத்திசாலியாக இருப்பதற்கும் புத்திக் குறைவுடன் இருப்பதற்கும் படிக்கும் வசதி, போதிய உணவு, வன்முறையற்ற வளர்ப்புச் சூழல் இவைதான் காரணமாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ இவையெல்லாம்தான், ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியைத் தூண்டுகிறது.