வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஒருவர் எவ்வளவு நேரம் அழுதால், உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படும்?கே.கீர்த்தி, இளநிலை உயிரியல் முதலாண்டு, சென்னை.சராசரி பருமனுடைய மனிதரின் எடை சுமார் 70 கிலோ. இதில் சுமார் 60% நீர்; அதாவது சராசரியாக 42 லிட்டர் நீர் உடலின் பல்வேறு பகுதிகளில் உண்டு. சுமார் ஐந்து முதல் பத்து சதவீதம் நீர்ச்சத்து குறைந்தாலே நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடும். ஆனால், சுமார் பதினைந்து சதவீதம் நீர்ச்சத்து இழந்தால், நாம் இறந்துவிடுவோம். ஐந்து சதவீதம் அதாவது சுமார் 2.1 லிட்டர் நீரை இழந்தால், நீர்ச்சுருக்கம் ஏற்படும்.சராசரியாக கண்களில் இருந்து நிமிடத்துக்கு பத்து கண்ணீர்த் துளிகள் வெளிப்படும். ஒரு மணி நேரத்தில் சுமார் 600 கண்ணீர்த் துளிகள் (10x60). அதாவது, ஒருநாளில் (600x24) சுமார் 14,400 கண்ணீர்த் துளிகள். ஒரு கண்ணீர் துளியின் கனஅளவு சுமார் 0.05 மி.லி. எனவே, நாள் முழுவதும் அழுதால் வெளிப்படும் கண்ணீரின் அளவு 720 மி.லி. நீர்ச்சுருக்கம் ஏற்பட, உடலில் இருந்து சுமார் 2,100 மி.லி. நீர் வெளியேற வேண்டும். எனவே, சுமார் மூன்று நாட்கள் எதுவும் அருந்தாமல், ஓய்வின்றி கண்ணீர் விட்டால் நீர்ச்சுருக்கம் ஏற்படும். ஆனால், நம் உடல் தகவமைப்பின்படி ஓரளவு நீரை இழந்த உடலில் இருந்து கண்ணீர்த் துளிகள் வெளிவராது; தானாக நின்றுவிடும். சிறு குழந்தைகள் கண்ணீர் வராமல் அழுதால், அது நீர்ச்சுருக்க அறிகுறி என கொள்வார்கள்.ஆதி மனிதன் பச்சையாக இறைச்சியை உண்டதுபோல் நம்மால் உண்ண முடியுமா?டி.பிரவின்குமார், 8ஆம் வகுப்பு, கோவை.சுமார் 18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நவீன மனித இனத்தின் மூதாதையர்கள் இறைச்சி போன்றவற்றைச் சமைத்து உண்டனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மனித இனத்துடன் நெருக்கமான கொரில்லா, ஒராங்குட்டான் போன்ற விலங்குகள் சமையல் செய்வதில்லை. பரிணாம வளர்ச்சியில் மனித மூளை விரிந்து, பெரிதாக உதவியதில் நெருப்பில் சமைத்து உண்டதும் ஒரு முக்கிய காரணம். மனிதக் குரங்குகள் விழித்துள்ள காலத்தில் சுமார் 68% நேரத்தை உண்பதில் செலவிடுகின்றன. விழித்து இருக்கும் 16 மணிநேரத்தில் அதிகபட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே நாம் உண்பதற்குச் செலவு செய்கிறோம்.மனித இனம் தோன்றுவதற்கு முன் இருந்த மூதாதையர் இனம், மற்ற விலங்குகளைப் போல இறைச்சியைப் பச்சையாக உண்டு இருக்கலாம். ஆனால், நம் ஆதி மனிதன் பச்சையாக இறைச்சியை உண்டான் என்பதில் உண்மை இல்லை. நவீன மனித இனம் தோன்றும்போதே சமைத்து உண்பது ஒரு பழக்கமாக இருந்தது.ஒரு நாளைக்கு ஓர் அடி என மனிதன் வளர்ந்தால், அவனது வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?சா. அப்துல்ஹமீது, 12ஆம் வகுப்பு, மதுரை.ஒரு நாளைக்கு ஓர் அடி உயரம் என்பதைவிட, ஓராண்டில் ஓர் அடி உயரம் என்பதே சாத்தியமில்லை. பதின்பருவத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்குச் சுமார் நான்கு அங்குலம் (10 செ.மீ.) உடலின் உயரம் அதிகரிக்கிறது. நமது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது, மனித வளர்ச்சி வளரூக்கி (HGH- - Human Growth Hormone) எனும் ஹார்மோன்தான். பதின்பருவம் முதிர்ச்சி அடைந்ததும், உடலின் உயர வளர்ச்சி நின்றுவிடும். போதிய ஊட்டச்சத்து இல்லை என்றால், சராசரியாக நமது உடல் உயர வளர்ச்சி குறையும். அதுவே, சத்தான உணவால் உயரம் வளர்ச்சி அடையும். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், கடந்த 150 ஆண்டுகளில், சுமார் பத்து செ.மீ. சராசரி உயரம் வளர்ச்சி அடைந்துள்ளது.தண்ணீர் அல்லது உணவு பொருட்களைச் சேமித்துவைக்க பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா? வி.கேத்ரின்தெரசா, 10ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.உணவுக்காகப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே உணவு, தண்ணீர் சேமிக்கப் பயன்படுத்த வேண்டும். ஷாம்பூ போன்ற வேதிப்பொருட்களை அடைத்து விற்கப் பயன்படும் பாட்டில்களில் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கக்கூடாது. பிளாஸ்டிக்கில் இருக்கும் BPA (Bisphenol A) எனும் வேதிக் கலவைதான் நச்சுப்பொருள். ஆகவே, உணவுக்காகப் பயன்படுத்தும் பாட்டில்களில் BPA free என்ற லேபிள் ஒட்டப்பட்டு இருக்கிறதா என பார்க்கவும். PETE, HDPE, PP, PS ஆகிய பிளாஸ்டிக் வகைகள் மட்டுமே உணவு சேமிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. V வகை (Polyvinyl Chloride) பிளாஸ்டிக்கை, உணவுப் பொருட்களைச் சேமிக்கப் பயன்படுத்தக் கூடாது. 'பயன்படுத்திய பின் நசுக்கி மறுசுழற்சி செய்யவும்' என பல பாட்டில்களில் எழுதி இருப்பார்கள். அவற்றை ஒரு தடவை பயன்படுத்தலாமே தவிர தண்ணீர் அல்லது உணவுப் பொருட்களைச் சேமிப்பது ஆரோக்கியமல்ல; பயோபிளாஸ்டிக் என்றால் ஆபத்து இல்லை.எல்லா பொருட்களும் வேதிப்பொருட்களின் கலவையே. எனவே, ஒரு பொருளில் வேறொரு பொருளை அடைத்து வைத்தால், அவற்றுக்கிடையில் வேதிமாற்றம் நடைபெறும் என்பதே முக்கியச் சிக்கல். பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமித்து வைக்கப்படும் நீரில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் கரையுமா? அதனால் ஆபத்து உண்டா? என்பன போன்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன.