வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. புயல், நிலத்தில் உருவாகாமல் கடலில் உருவாகக் காரணம் என்ன?சீ.சுசிதாஸ்ரீ, 9ஆம் வகுப்பு, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்.புயல் என்பது நீர்ப்பசை நிரம்பிய வெப்பநிலையில் உள்ள சுழலும் காற்று. கோடைக் காலத்தில் கடலின் மேற்புறம் கூடுதலாக வெப்பமடையும். 29O. செல்சியஸிற்கும் கூடுதலாக கடல் வெப்பம் கூடும்போது, புயல் உருவாக வாய்ப்பு ஏற்படும். அப்போது அந்தப் பகுதியில் கடல்நீர் கூடுதலாக ஆவியாகும்.சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு என்பதால், நீர்த்திவலைகளை ஏந்தி அது மேலே எழும்பும். கடல் மட்டத்தைவிட உயரே செல்லும்போது, காற்றின் அடர்த்தி குறைவு. எனவே, அந்த வெப்பக் காற்றுக்குமிழி விரிவடையும். விரிவடையும் வாயு சுழலும். எனவே, அந்தக் குமிழியும் சுழன்றுகொண்டே மேலே செல்லும். கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச்செல்ல வெப்பநிலை குறையும். எனவேதான், மலைப்பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கின்றன. சூடான காற்று குளிர்கிறது என்றால் அங்கே காற்றழுத்தம் குறையும். எனவே, வேறு பகுதியிலிருந்து காற்று வேகவேகமாகப் பாயும். சுழன்று வீசுவதால் புயல் கடலின் மேலே நகரும்.கடல் மீது காற்று வீசும்போது ஏற்படும் உராய்வு விசையை விட நிலத்தின் மீது உராய்வு விசை கூடுதல். எனவேதான், நிலத்தில் வீரியம் குறைந்து புயல் மறைகிறது. மேலும், நிலத்தின் மீது கடலுக்குச் சமமாக நீர்நிலைகள் இல்லை. எனவே நிலத்தின் மீது புயல் கடந்து சென்றாலும், கடலில் தான் புயல் உருவாகும்.2. பல்லியின் வயிற்றில் உள்ள முட்டை வெளியே தெரிவது எப்படி?த.சூரியகுமார், 9ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏரிக்கரை, சென்னை.ஊர்வன வகை சார்ந்த பல்லியின் வயிற்றுப் பாகத்தின் தோல் மிக மெல்லியது. எனவே, அரைகுறையாக ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.சில வகை மீன்களிலும் முட்டை வெளியே தெரியும். அதன் மேலே உள்ள நார்த் திசுக்களால் ஆன செதில்கள் சற்றே மெலிந்து இருப்பதால், அதில் எனாமல் இருக்காது. எனவே, அவற்றின் ஊடாகவும் ஒளி ஊடுருவிச் செல்லும்.கண்ணாடித் தவளை, கண்ணாடி ஆக்டோபஸ், ஜெல்லி மீன், கண்ணாடிச் சிறகு பட்டாம்பூச்சி என, பல்வேறு உயிரிகளின் உள்ளுறுப்புகள் எளிதில் தெரியும்படி உள்ளன. வேட்டையாடும் உயிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே பல உயிரிகள் இவ்வாறு ஏமாற்றும். சில பட்டாம்பூச்சியின் இறகுகளில் பெரிய கண் போன்ற வடிவம் இருப்பது கண்டு அச்சப்பட்டு உயிரிகள் அவற்றை வேட்டையாடாது. அவ்வாறே பச்சோந்தியும் உருமறைப்பு செய்யும். இத்தகைய கண்ணாடி போன்ற தோல் அமைப்பு எப்படி, எதற்கு, எதனால் பரிணமித்தது என்பது இன்னமும் புதியாத புதிர்தான்!3. இறந்த உடலில் முதலில் செயலிழக்கும் உறுப்பு எது?தி.இலக்கியா, 5ஆம் வகுப்பு, ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி, நீலம்பூர், கோவை.உடலின் ஏதாவது முக்கிய உறுப்பு செயலிழந்து போவதே இறப்பு எனப்படுகிறது. எனினும் ஓர் உயிரி மடியும்போது, அதில் உள்ள எல்லா செல்களும் உடனே மடிந்து விடுவதில்லை. இயற்கைச் சாவு எனும்போது மூச்சு விடுதல் நின்று போகிறது. எனவே ஆக்சிஜன் இல்லாமல், முதலில் மூளை செயலிழக்கும். அதன் பின்னர் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும். தோல், கண், கார்னியா, இதய வால்வுகள் முதலியவை சுமார் ஒரு நாள் சிதையாமல் இருக்கும். வெள்ளை அணுக்கள் சுமார் மூன்று நாட்கள் கடந்த பின்னரே சிதையும்.உறுப்பு சிதையாமல் இருந்தால்தான் உள்ளுறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு சிகிச்சை செய்ய முடியும். இறந்தவர் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து தாழ்வெப்பநிலையில் அதிகபட்சம் 24 மணிநேரம்தான் வைக்கமுடியும். அதேபோல கல்லீரல் 12-15 மணிநேரம், நுரையீரல் அதிகபட்சமாக 8 மணிநேரம், இதயம் 6 மணிநேரம் சிதையாமல் இருக்கும். விரைவாக எடுத்து நோயாளியின் உடலில் பொருத்திவிட வேண்டும்.4. மழைக்காலங்களில் மட்டும் தட்டான், ஈசல் போன்ற பூச்சிகள் அதிகம் காணப்படுவது எதனால்?ம.அ.தனுதர்ஷினி, 8ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.ஒரு சிறப்பு வகைக் கறையான்களே ஈசல்கள்! ஒரு புற்றில் உள்ள கறையான்களை இராணி, ஆண், வாகை (பாதுகாப்பு) மற்றும் பணிக் கறையான் என, நான்கு விதமாகப் பிரிக்கலாம். மழைக்காலத்தில் இவை முட்டைகளை இடும். இதிலிருந்து வெளி வருபவையே புற்றீசல்கள்.இவை பறந்து சற்றே தொலைவான இடத்தை அடைந்து, அங்கே புதிய புற்றைத் தோற்றுவிக்கும். அதன் பயணத்தின் இடையே பாம்பு, பல்லி, கோழி போன்ற விலங்குகளுக்கு உணவாகி விடுகின்றன. தப்பிப் பிழைக்கும் சில ஈசல்கள் வெகுதொலைவு கடந்து இறகுகளை உதிர்க்கும். பின்னர் தனது இணையைக் கண்டுபிடித்து, நிலத்தில் தகுந்த இடத்தைத் தேர்வுசெய்து புதிய புற்றை உருவாக்கும். அந்தத் துளையின் உள்ளே முட்டை இடும். வாகை மற்றும் பணிக் கறையான்கள் உருவாகும். தட்டான்களைப் பொறுத்தமட்டில், நீர்நிலைகளில்தான் முட்டையிடும். போன மழைக்காலத்தில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த லார்வா புழு வளர்ந்து முதிர்ந்து தட்டானாக மாறும். மழைக்காலத்தில் இவை வெளியேவரும் என்பதால், 'தட்டான் தாழப்பறந்தால் மழை வரும்' என்பார்கள்.