உள்ளூர் செய்திகள்

நெடுநல் மழை

ஒரு மழைக்காட்சியைப் பார்ப்போமா?இன்றைக்கு, நேற்றைக்கு அல்ல; பல நூற்றாண்டுகளுக்குமுன் பெய்த மழை. புரிகிறமாதிரி சொல்வதென்றால், 'சங்க காலத்து மழை!'சங்க இலக்கியத்தின் பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்றான 'நெடுநல்வாடை'யில் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் அன்றைய மழையை விவரித்திருக்கிறார். அதைப் படிக்கும்போதே குளிரெடுக்கும்!மழை பெய்கிறது, உலகெல்லாம் குளிர்கிறது!மழையால் எல்லோரும் மகிழ்கிறார்கள். மாடு மேய்ப்பவர்களுக்கு மட்டும் மழையைப் பிடிப்பதில்லை.ஏனெனில், அவர்களுடைய வேலை, வெட்டவெளியில் மாடுகளை மேய்ப்பது. திடீரென்று மழை வந்துவிட்டதால் அவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.மழை நன்றாகப் பெய்வதால், அவர்களால் தங்களுடைய வீட்டுக்கும் செல்ல முடியவில்லை. அவர்கள் செங்காந்தள் மலர்களைக் கோத்து மாலையாக அணிந்திருக்கிறார்கள். அவற்றில் மழைத்துளிகள் விழுகின்றன. அந்த மலர்களும் நனைகின்றன. குளிரில் அவர்களுடைய கன்னங்களெல்லாம் புடைத்துப்போகின்றன.கதகதப்புக்காக அவர்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். அதில் கைகளைக் காட்டிக் குளிர்காய்கிறார்கள்.மனிதர்கள் நெருப்பு மூட்டிக் குளிர் காய்வார்கள், மிருகங்கள் என்ன செய்யும்?விலங்குகள் புல் மேயாமல் நிற்கின்றன. குரங்குகள் குளிரில் நடுங்கி உட்கார்ந்து விடுகின்றன. பறவைகள் பறக்க இயலாமல் தடுமாறுகின்றன. கொக்குகளும் நாரைகளும் மழை நீரை ஆவலுடன் பார்க்கின்றன. அதில் தென்படும் மீன்களைப் பிடித்துத் தின்கின்றன.கொடிகளில் மழைக்காலத்தை வரவேற்று மலர்கள் பூக்கின்றன. வெள்ளை நிறத்தில் முசுண்டை மலர்கள், தங்கநிறத்தில் பீர்க்கம்பூக்கள்.மழையால் வயல்களில் நெல் செழித்து வளர்கிறது. அதன் கதிர்கள் அனைவரையும் வணங்குவதுபோல் நிற்கின்றன.அருகில் பாக்கு மரம் செழித்து நிற்கிறது. சோலையில் குருந்த மரத்தின் குருத்துகளிலிருந்து மழைத்துளி இன்னும் சொட்டிக் கொண்டிருக்கிறது.இன்னும் சற்று நெருங்கினால் ஊர் தெரிகிறது. அங்கு பெரிய கட்டடங்கள், மாடங்கள், நீண்ட தெருக்கள், மக்கள் மழையை ரசித்தபடி அங்குமிங்கும் சென்று வருகிறார்கள்.அவர்களுடைய வீட்டில் உள்ள பெண்கள், மாலைநேரத்தில் தெய்வத்தை வழிபடுகிறவர்கள். மாலைநேரம் வந்துவிட்டதைத் தெரிந்துகொள்ள அவர்கள் ஓர் இயற்கைக் கடிகாரம் வைத்திருக்கிறார்கள்.அந்தக் கடிகாரம்: ஒரு தட்டுநிறைய பிச்சி அரும்புகள். மாலைநேரமானதும் அவை மலர்ந்து மணம்வீசும். அந்த வாசனையை வைத்து 'மாலைநேரமாகிவிட்டது' என்று இவர்கள் தெரிந்துகொள்வார்கள்.அன்றைய வழிபாடு எப்படியிருந்தது?இரும்பு விளக்கில் அவர்கள் திரியை இட்டு விளக்கேற்றுகிறார்கள். தெய்வத்துக்கு நெல், மலர்களைத் தூவி வணங்குகிறார்கள்.மழை நேரத்தில் வெளியே செல்ல இயலாதல்லவா? அவர்கள் இனிய பாடல்களைக் கேட்டு, சுவையான நடனங்களைப் பார்த்து மகிழ்கிறார்கள்.ஒருவர் யாழ் வாசிக்கிறார். அந்த யாழின் நரம்பு குளிரில் பிழையாக ஒலிக்கிறது. ஆகவே, அவர் அந்த யாழை எடுத்து அணைத்துக்கொள்கிறார்.யாழை ஏன் அணைக்கவேண்டும்?என்னதான் குளிரடித்தாலும், மனிதர்களுடைய உடலுக்கென்று ஒரு கதகதப்பு உண்டல்லவா? அந்த உடல்சூட்டில் யாழின் குளிர்ந்த நரம்பு ஒழுங்காகிறது, அதில் சரியான இசை ஒலிக்கிறது.சங்ககால மழைக்காட்சி எப்படியிருந்தது? உங்கள் ஊரில் அடுத்தமுறை மழை பெய்யும்போது சுற்றியுள்ள காட்சிகளைக் கவனியுங்கள், சாலையில், தோட்டத்தில், வீட்டுக்குள் என்னென்ன நடக்கிறது என்று பாருங்கள். நெடுநல்வாடையின் மழைக்காட்சிகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்!- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !