உள்ளூர் செய்திகள்

இங்க பாரு கங்காரு

ஜேம்ஸ் குக் (James Cook), சர் ஜோசப் பேங்க்ஸ் (Sir Joseph Banks) என்ற இயற்கை ஆராய்ச்சியாளர்கள் இருவர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர். அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரிடம் கங்காருவைக் காட்டி 'என்ன மிருகம்' என்று கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் 'கங்காரு'. அந்தப் பழங்குடி மொழியில் கங்காரு என்றால் 'எனக்குத் தெரியாது' என்று பொருள். அதுவே அதன் பெயராக நிலைத்து விட்டது என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. கங்காருவின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. அந்த நாட்டின் தேசிய விலங்காகவும் உள்ளது. டாஸ்மேனியா நாட்டிலும் பரவலாகக் காணப்படுகிறது. சில வகை கங்காருகள் பப்புவா நியூ கினி ( Papua New Guinea) சுற்றி உள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. கங்காருவில் நான்கைந்து வகைகள் உள்ளன. இவை புல், தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன.வறண்ட பகுதிகளில் வாழும். உயிர் வாழக் குறைந்த அளவு நீரே போதுமானது. நீண்ட நாட்கள் வரை நீர் இல்லாமல் வாழும். ஆண், பெண் என குழுவாக வாழும் இயல்பு கொண்டது. வயதில் மூத்த ஆண் கங்காரு தலைமை வகிக்கும். கங்காருவின் முன்னங்கால்களை விட பின்னங்கால்கள் மிகவும் உறுதியானவை. வாலும் கால்களைப் போன்றே வலுவானது. துள்ளி ஓடும்பொழுது, வாலே இதன் உடலை சமநிலைப்படுத்துகிறது. ஆனால் மிக மெதுவாக நடக்கும். வளர்ந்த கங்காரு ஒரே தாவலில் 7 மீட்டர் அளவு வரை தாண்டக்கூடியது. கங்காருவால் பின்நோக்கி நகர இயலாது. வளர்ந்த ஆண் கங்காரு பக் ( buck), பெண் கங்காரு டோ (doe), இளம் கங்காரு ஜோயி(joey) என்றும் அழைக்கப்படுகின்றன. பிறக்கும் பொழுது ஒரு சின்ன புழுவின் (இரண்டு செ.மீ.) அளவிலேயே பிறந்து, முன்புறம் உள்ள பையுடன் இணைக்கப்பட்டு வளர்கிறது. பையை விட்டு வெளியே வர சுமாராக 9 மாத காலம் ஆகும். தாய்ப்பால் 12 மாதங்கள் வரை அருந்தும். பெண் கங்காரு ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளை பராமரிக்கிறது. முதல் குட்டி அவ்வப்பொழுது வந்து பால் குடித்துச் செல்லும். இரண்டாவது பையில் இருக்கும். மூன்றாவது கருவில். இதனால் பெண் கங்காரு எப்பொழுதும் நிரந்தர கர்ப்பிணியாகவே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !