உள்ளூர் செய்திகள்

ஞாநி எழுதும் மாலுவின் டைரி - சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

“சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது” என்று பாடிக்கொண்டு வந்தான் பாலு.“சிரிச்சா சிரிப்புதான் வரும். ஓவரா சிரிச்சாதான் கண்ணுல தண்ணி வந்து அழுகை மாதிரி ஆயிடும். எதுக்குச் சிரிக்கறே சொல்லு” என்றேன். “ஒரு ரஜினி - கபாலி ஜோக் கேட்டேன். சிரிப்புத் தாங்கல. இன்னிக்கு 'உலக ஜோக் தினம்' இல்லியா? உனக்கும் அந்த ஜோக் சொல்லலாம்னு வந்தேன்” என்றான் பாலு. “சொல்லு” என்றேன். சொன்னான். கேட்டதும் எனக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. பாலுவும் கூடவே சிரித்தான். அப்புறம் இதை வாலுவுக்கு நிச்சயம் சொல்ல வேண்டும். “என்ன பல் சுளுக்கிக்கற மாதிரி சிரிச்சுகிட்டிருக்கீங்க?” என்று கேட்டபடி வந்தார் ஞாநி மாமா. அவருக்கும் ஜோக் சொன்னோம். அவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனால், வாய்விட்டுச் சிரிக்க மாட்டார். முன்பக்க பல் ஓட்டை தெரிந்துவிடும் என்று கமுக்கமாகத்தான் சிரிப்பார். எல்லா பல்லும் விழுந்தபிறகு வாய்விட்டுச் சிரிப்பாராய் இருக்கும்.“இந்தச் சிரிப்பை யார் கண்டு பிடிச்சது ? முதல் மனுஷன் எதுக்குச் சிரிச்சிருப்பான் ?” என்று மாமாவைக் கேட்டேன்.“முதல் மனுஷன் அவனை அடிக்க வந்த கரடி அவன் விலகினதும் நேரே போய் அருவியில விழுந்ததைப் பார்த்து சிரிச்சிருக்கலாம்.”“அதனாலதான் இன்னிவரைக்கும் யாராவது வாழைப்பழத் தோல்ல வழுக்கி விழற காமெடி பண்ணா சிரிச்சுகிட்டிருக்கமா?”“இன்னொருத்தர் விழறது, அடிபடறது, உடல் ஊனத்தால தப்புத் தப்பா ஏதாவது செய்யறது, இதுக்கெல்லாம் சிரிக்கறது தப்புன்னு நம்ம அறிவு சொல்லுது. ஆனாலும் சிரிச்சுக்கிட்டுதான் இருக்கோம். டாம் அண்ட் ஜெர்ரில மாறி மாறி எவ்வளவு வன்முறை இருக்கு, அதுக்கும் சிரிச்சுகிட்டுதான் இருக்கோம். காரணம் அந்த வலி நமக்கு நேரடியா உறைக்கறது இல்ல.”“என்ன மாமா, சிரிப்பைப் பத்தி சீரியசா பேசிக்கிட்டிருக்கீங்க?” என்றேன். “இன்னும் கூட சிரிப்பைப் பத்தி சீரியசா நிறைய விஷயம் இருக்கு. ஆனா மாலு இன்னிக்கு உலக சிரிப்பு தினம் இல்ல. உலக ஜோக் தினம். சிரிப்பு வேற. ஜோக் வேற. நகைச்சுவை வேற.”“ஜோக்குக்கு தமிழ் என்ன மாமா?”“ஜோக்தான். அது இப்ப தமிழ் வார்த்தையாயிடுச்சு.” என்று ஜோக் அடித்தார் மாமா. “சிரிப்புன்னா லாஃப்டர் (Laughter). நகைச்சுவைன்னா ஹ்யூமர் (humour). ஜோக்ன்னா ஜோக் (joke).” “என்ன வித்யாசம்?”“ஒரு சுட்டிக் குழந்தையைப் பார்த்து நாம அன்பா சிரிக்கலாம். அது ஸ்மைல் - புன்னகை. ஒரு சர்க்கஸ் கோமாளியோட சேட்டையைப் பார்த்து வாய்விட்டு சிரிக்கலாம். அது லாஃப்டர். ஒரு நல்ல கட்டுரையோ, கதையோ படிக்கும்போது அதுல மெல்லிசா ஒரு சிரிப்பை மனசுக்குள்ள வரவழைக்கற வரி இருக்கலாம். அதுதான் ஹ்யூமர்.”“அப்ப எது ஜோக்?” என்று கேட்டான் பாலு.“ஜோக்குக்கு ஒரு ஆரம்பம் ஒரு முடிவு இருக்கும். ஜோக் பெரும்பாலும் வார்த்தை விளையாட்டுதான். வார்த்தைகளைத்தான் நம்பி இருக்கு. ஆரம்பிச்ச இடத்துல இருந்து நேர்மாறா வேற அர்த்தம் வர்ற மாதிரி கடைசில முத்தாய்ப்பா சொல்ற பஞ்ச் லைன்லதான் ஜோக் இருக்கு” என்றார் மாமா. “ஜோக்குக்கு மொழி முக்கியம். ஒரு மொழியில சிரிப்பை ஏற்படுத்தற ஜோக் இன்னொரு மொழியில புஸ்வாணம் ஆயிரும்.”“உங்களுக்குப் பிடிச்ச ஜோக் சொல்லுங்க மாமா” என்றேன்.“பிடிச்ச ஜோக் நிறைய இருக்கு. மறக்கமுடியாத ஜோக் ஒண்ணு இருக்கு. சின்ன வயசுல படிச்சது. அப்ப நானும் ஒரு தடி கண்ணாடி போட்டிருந்தேன். அதனால எனக்கு இந்த ஜோக் மறக்க முடியாத ஜோக் ஆயிருச்சு. இது சொல்ற ஜோக் இல்ல. படிக்கற ஜோக்” என்ற மாமா ஜோக்கை எழுதிக் காட்டினார்.“சொல்ற ஜோக், படிக்கற ஜோக்குனு தனித்தனியா இருக்கா?”“இருக்கு. ஜோக் சொல்லும்போது டைமிங் ரொம்ப முக்கியம். ஒரு வரிக்கு அடுத்த வரியை எவ்வளவு இடைவெளியில அல்லது எவ்வளவு சீக்கிரமா சொல்றோங்கறதைப் பொறுத்துதான் ஜோக் எடுபடும். சினிமா காமெடியன்கள் பெரும்பாலும் இந்த டைமிங் மூலம்தான் நம்மளச் சிரிக்கவைக்கறாங்க. படிக்கற ஜோக் நம்மோட புரிஞ்சுக்கற திறமையைப் பொறுத்த விஷயம்.” மாமா எழுதிய ஜோக் இதுதான். “ராமு: டேய் சோமு , நீ கண்ணாடி போடாம இருந்தாதான்டா அழகா இருக்கே.சோமு: அப்பதான்டா நீ கூட எனக்கு அழகா இருக்கே” பாலுவுக்கு ஜோக் புரியவில்லை. விளக்கினால் எந்த ஜோக்கும் செத்துவிடும் என்று விளக்க மறுத்துவிட்டார் மாமா. “மனிதர்கள் மட்டும்தான் சிரிக்கிறார்களா, விலங்குகள், பறவைகள் கூட சிரிக்கும் இல்லையா. அவற்றுக்கும் அவற்றின் மொழியில் ஜோக் இருக்குமா?” என்று கேட்டான் பாலு.“மனித இனம் தோன்றுவதற்கு முன்னால உருவான பாலூட்டி விலங்குகளிடமே சிரிப்பைத் தூண்டும் உணர்ச்சி இடங்கள் இருந்திருக்கு. சிம்பன்சி போன்ற குரங்குகள், எலிகள், சில பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியின் அடையாளமாக எழுப்பும் ஒலியை நாம் 'சிரிப்பு' என்கிறோம். அவற்றின் மொழி நமக்குத் தெரிந்தால்தான் அதில் ஜோக் இருக்குமா என்று கண்டுபிடிக்கலாம்.”“உலகத்தில் மனிதன் சொன்ன முதல் ஜோக் எது?” என்று கேட்டான் பாலு.“சுமார் 4 ஆயிரம் வருடம் முன்னாலேயே சொல்லப்பட்ட ஜோக்குகள்னு சுமேரியா, எகிப்துல பதிவாகியிருக்கு. ஆனா இதுதான் முதல்ன்னு எதையும் சொல்லமுடியாது. ஜோக்ல மட்டும் இல்ல. இன்னும் நிறைய விஷயத்துல அப்படிதான். இசையை எடுத்துக்க. முதல்ல பதிவு செய்யப்பட்ட இசை 1888 ஜூன் 24ஆம் தேதி அன்னிக்கு ஹேண்டலுடைய இசையை மெழுகுத்தட்டுல பதிவு செய்ததுன்னு ஒரு குறிப்பு சொல்லுது. ஆனா ஒன்பதாவது நூற்றாண்டிலயே இசையை, திரும்ப ஒலிக்கக்கூடிய மெக்கானிகல் கருவிகளை கீ கொடுக்கும் கடிகாரம் போல உருவாக்கியிருக்காங்க.” என்றார் மாமா. “கண்டுபிடிப்புகளை இன்னார்தான் செய்தார்ன்னு பல சமயம் சொல்ல முடியாத மாதிரிதானே” என்றேன்.“ஆமா, 1941 ஜூலையிலதான் பென்சிலின் மருந்தை பெரிய அளவுக்குத் தயார் செய்வதற்கான வழிமுறையே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனா, பென்சிலினை 1928லயே அலெக்சாண்டர் ஃபிளெமிங் கண்டுபிடிச்சுட்டாரு. ஆனா அவரால அதைப் பெரிய அளவுல தயாரிக்கற வழிமுறையை உருவாக்கவே முடியல. ஹோவர்ட் ஃப்ளோரி, போரிஸ் செயின், நார்மன் ஹீட்லீ ஆகியோர்தான் 1941ல அதைச் செஞ்சாங்க.” என்றார் மாமா.“அப்ப ஜோக்கூட இந்த மாதிரி நாலஞ்சு பேர் சேர்ந்து உருவாக்கலாம் இல்ல?” என்று கேட்டது வாலு.“பல ஜோக்குகள் அப்படி உருவானதுதான். கேட்ட ஜோக்கைத் திரும்பச் சொல்லும்போது நம்ம சரக்கை சேர்ப்போம் இல்லியா ? அப்ப நம்ம எல்லாரும் சேர்ந்து இப்ப ஜோக் உருவாக்கலாமா? ஒவ்வொருத்தர் அடுத்தடுத்து ஒவ்வொரு வரி சொல்லணும். முன் வரியை அது ஜோக்கா மாத்திக்கிட்டு போகணும். கடைசி லைன் பஞ்ச் லைன்” என்றார் மாமா.நாலு பேரும் புது விளையாட்டைத் தொடங்கினோம். வாலுபீடியா 1: உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோக் சொல்வதற்கும் ஆழ் மனநிலைக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். தொடர்ந்து உளவியலில் ஜோக் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. வாலுபீடியா 2: ஒரு இனக் குழுவுக்கோ மொழிக் குழுவுக்கோ இன்னொரு குழு மீது இருக்கும் வெறுப்பை விரோதமாக்காமல், வடிகாலாக்க ஜோக்குகள் பயன்படுவதாக இப்போது கருதப்படுகிறது. சர்தார்ஜி ஜோக்குகள் வடக்கே மதராசி ஜோக்குகளாகிவிடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !