வானம் வசப்படுமே...
பெண்கள் விமானம் ஓட்டுவது புதிய செய்தி இல்லை. ஆனால், மிகப்பெரிய 'போயிங் 777' விமானங்களை ஓட்டுவது சவாலான ஒன்று. அதிலும், 30 வயதிலேயே 'போயிங் 777' விமானத்தை ஓட்டும் கமாண்டராக உயர்ந்திருப்பவர் ஆனி திவ்யா. எல்லோராலும் எளிதில் இதைச் சாதித்துவிட முடியாது. பலரின் வெற்றிக் கதைகளைப் போலவே, ஆனி திவ்யாவின் வெற்றிக்கதையும் தடங்கல்கள், இடையூறுகள் நிறைந்தது. அவற்றை முறியடித்தே சாதனை புரிந்திருக்கிறார் ஆனி திவ்யா.சிறு வயதிலிருந்தே, நமக்குப் பல லட்சியக் கனவுகள் இருக்கும். அவ்வப்போது, கனவுகளை மாற்றியும் கொள்வோம். ஒரு சிலர் தம் கனவை விட்டுக் கொடுப்பதில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பலர் குட்டையை குழப்பினாலும், கனவை நனவாக்குவதில் தீவிரம் காட்டுவார்கள். ஆனி திவ்யா அப்படிப்பட்ட ஒருவர்தான். சிறுவயதிலேயே விண்ணில் பறக்க ஆசை. பதான்கோட் பகுதியிலுள்ள ராணுவ முகாமில் அப்பா பணியாற்றியபோதுதான் திவ்யா பிறந்தார். அவர் விருப்ப ஓய்வு பெற்று, விஜயவாடாவிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். திவ்யாவின் படிப்பு அங்கேயுள்ள பள்ளியில் தொடர்ந்தது. அப்போதிலிருந்தே விமானியாக வேண்டும் என்ற ஆசை திவ்யாவுக்கு. பல நண்பர்கள் திவ்யாவின் ஆசையை கிண்டல் செய்து சிரித்தனர். உறவினர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 'பெண் குழந்தைக்கு இது தேவையா' என அறிவுரை வேறு. ஆனால், சுற்றத்தாரின் பேச்சால் திவ்யாவின் பெற்றோர்கள் மனம் மாறவில்லை. மகளின் விருப்பத்துக்கு அவர்கள் மதிப்பளித்தனர். அவளின் கனவை நிறைவேற்றும் வகையில் குடும்பச் சூழ்நிலை இல்லை. ஆனாலும் அவர்கள் பின்வாங்காமல் அவளுடைய கனவுக்கு தோள் கொடுத்தார்கள். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 'இந்திரா காந்தி ராஷ்ட்ரீய ஊரான் அகாடமி'யில் விமானி பயிற்சிக்கு திவ்யாவை அனுப்பி வைத்தனர்.கல்விக்கடன் மூலம்தான், விமானி பயிற்சியில் சேர்ந்தார் ஆனி. பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் படித்திருந்தாலும், அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாது. திவ்யாவின் ஆங்கில உச்சரிப்பைப் பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள். மிகச்சிறிய நகரத்திலிருந்து, பெருநகரத்துக்கு இடம்பெயர்பவர் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் திவ்யாவும் சந்தித்தார். அத்தனை பிரச்னைகளுக்கும் அவர் ஈடுகொடுத்தார்.மொழி ஒரு முக்கியமான தடை என்றாலும், விமானி ஆகும் ஆசை, அவரை சலிப்படைய வைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் கேலி செய்தபோது, பயிற்சி மையத்திலிருந்து ஓடி வந்துவிடலாமா என தோன்றுமாம். ஆனால் கனவு என்னவாவது என்ற கேள்வி முளைத்தவுடன், மீண்டும் மனஉறுதி பெறுவார். அவரின் சிறப்பான செயல்பாட்டால், படிப்பதற்கு ஊக்கத்தொகை கிடைத்தது.விரிந்தது சிறகு19 வயதில் பயிற்சி முடித்தவுடன், ஏர் இந்தியாவில் பணி கிடைத்தது. சிறப்பான செயல்திறனால், முதல்முறையாக வெளிநாட்டில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பயிற்சியில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இந்தியா திரும்பினார். அப்போதே 'போயிங் 737' என்ற விமானத்தை ஓட்டும் வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்.நிதானமாய் விண்ணில் பறக்கத் தயாராகும் விமானம் போல், திவ்யாவின் கனவும் நனவானது. வானம் வசப்பட்டது.லண்டனுக்கு மீண்டும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர், அவருடைய திறனும், தன்னம்பிக்கையும் பலமடங்கு அதிகரித்தது. பலரும் மலைத்துப் பார்க்கும் வண்ணம், 'போயிங் 777' ரக விமானத்தை ஓட்டுவதற்கு உரிமம் கிடைத்தது. தன் லட்சிய மகுடத்தில் மற்றொரு வைரத்தைப் பதித்தார் திவ்யா. லட்சியமும், அதை நோக்கிய இடைவிடா முயற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாய் இருக்கிறார் ஆனி திவ்யா. மொழியும் குடும்பச் சூழலும் அவருடைய முயற்சிகளுக்குத் தடை போடமுடியவில்லை. திவ்யா இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்.