மனம் குவியும் இசை: ஜாக்ஸோமேனியா
19ஆம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அமெரிக்க இசைக்குழு ஜாக்ஸன் 5. கேரி நகரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த அமெரிக்கக் கறுப்பின இசைக்குழுவை ஜோ ஜாக்ஸன் ஒருங்கிணைத்தார். 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழுவில் அவரது பிள்ளைகளான ஜாக்கி, டிடோ, ஜெர்மைன், மார்லன், மைக்கேல் உள்ளிட்ட ஐந்து சகோதரர்கள் இடம்பெற்றிருந்தனர். மோடவுன் ரெக்கார்ட்ஸ் என்னும் இசைப் பதிவு நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டது ஜாக்ஸன் 5. ஜாக்ஸன் 5-வின் பாடல், விளம்பர உரிமம் இந்த நிறுவனத்திடமே நீண்டகாலம் இருந்தது. அமெரிக்காவின் பல நகரங்களில் மேடைக் கச்சேரிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ ஆல்பங்கள் மூலம் ஜாக்ஸன் குடும்பம் மிகக் குறுகிய காலத்தில் அதிகச் செல்வம் ஈட்டியது. அமெரிக்க இசை வரலாற்றில் ஜாக்ஸன் குடும்பம் 'இசை ஏகாதிபத்தியக் குடும்பம்' எனப் பெயர்பெற்றது. ஜாக்ஸன் 5 குழுவின் குழந்தை நட்சத்திரமான மைக்கேல் ஜாக்ஸன், 80களில் மிகப்பெரிய இசை மேதை, பாடகர், நடனக் கலைஞராக உருவெடுத்தார். பிரபல அமெரிக்க இசை இதழான பில்போர்டின் டாப் 100 பாடல்களில் ஜாக்ஸன் 5இன் 'திஸ் இஸ் இட்' இடம்பெற்றது. இசைக்கான கிராமி விருது, ராக் & ப்ளூஸ் டான்ஸிங் மெஷின் விருது உட்பட 1970களில் பல விருதுகளை அள்ளியது ஜாக்ஸன் 5.இந்தக் குழுவினர் 80-களில் பதின்பருவ விடலைகளாக மாறினர். இவர்களுக்குத் தீவிர ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அமெரிக்க இசைத்துறையில் இந்தக் காலகட்டம் ஜாக்ஸோமேனியா (Jacksonmania) என அழைக்கப்பட்டது.அமெரிக்கச் சினிமா நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக ஜாக்ஸன் 5 குழுவினர் கச்சேரிக்கு டிக்கெட் வாங்கக் கூட்டம் அலைமோதியது. ஒரே கச்சேரி மூலம் வரலாறு காணா வசூலை அள்ளுவது இந்தக் குழுவின் சிறப்பு. மைக்கேல் ஜாக்ஸனை மேடையில் ஏறிக் கட்டியணைக்க ஏங்காத ரசிகர்களே இல்லை. புயல், வெயில், மழையிலும் பல மணிநேரக் கச்சேரியைக் கூட்ட நெரிசலில் நின்று ரசிக்க அமெரிக்கர்கள் அலைமோதினர். 1984ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்ஸன் தனிக்கச்சேரி செய்ய முடிவெடுத்து ஜாக்ஸன் 5-இல் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து மார்லன் ஜாக்ஸனும் விலக, ஜாக்ஸன் 5-இன் வரலாறு முடிவுக்கு வந்தது.