உள்ளூர் செய்திகள்

மியூக்கர் - 11ஆம் வகுப்பு தாவரவியல்

கெட்டுப்போன ரொட்டிகளின் மேல் இளம்பச்சை அல்லது கருப்பு நிறத்தில் ஒட்டடை போலப் படர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அழுகிய பழம், காய்கறிகள் போன்றவற்றிலும் இப்படி இருக்கும். இதற்குப் பூஞ்சை என்று பெயர். பூஞ்சைகள் உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை அழுகச் செய்கின்றன. மட்கிப் போகச் செய்கின்றன. ஆனாலும், இதனால் நமக்கு நன்மையேதான். உணவுப் பொருட்கள், காய்கறிகள் அழுகி மட்குவதால் மண்ணில் கலந்து நிலத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. மண் வளம்பெற இது உதவுகிறது. இப்படி மட்கச் செய்கிற பூஞ்சைகளில் ஒன்று, ரொட்டி, காய்கறிகளின் மேல் படர்ந்திருக்கிற 'மியூக்கர்' (Mucor). இவை தாவரங்கள், உணவுப் பொருட்களிலிருந்து தங்கள் ஊட்டத்தைப் பெறுகிற உயிரிகள். மியூக்கருக்கு 'ஊசிக் காளான்' (Pin Mould - பின் மோல்டு), 'கருப்பு ரொட்டிக் காளான்' என்ற வேறு பெயர்களும் உண்டு.'மியூக்கர்' மென்மையான பஞ்சு போன்ற இழைகளால் ஆனது. இந்த இழைகள் 'மைசீலியம்' (Mycelium) எனப்படும்.ரொட்டிகள் மட்டுமல்ல, ஈரமான காலணிகள், சாணம் போன்றவற்றின் மீது கூட 'மியூக்கர்' பூஞ்சைகளைப் பார்க்கலாம்.அடுத்த முறை நீங்கள் ரொட்டி உண்பதற்கு முன், நிலத்திற்கு வளம் சேர்க்கிற மட்குண்ணி பூஞ்சை மியூக்கர் அதில் இருக்கிறாதா? அது எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !