உள்ளூர் செய்திகள்

கட்டாயம் வலிமிகாத இடங்கள்

சில இடங்களில் வலிமிகுவது எப்படிக் கட்டாயமோ, அவ்வாறே சில இடங்களில் ஒற்று தோன்றாமல் இயல்பாக இருப்பதும் கட்டாயம். ஒற்று வரக்கூடாத இடங்கள் எவை?* அது, இது, எது என்ற சுட்டுச் சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் (க, ச, த, ப) தொடங்கும் சொல் வந்தால், கட்டாயம் வலிமிகாது.எ.கா.: அது கடல் தான், இது பால், எது தெரிந்தது?* பன்மையைச் சுட்டும் இடங்களில் வலிமிகாது.எ.கா.: அவை பறவைகள், இவை கருவிகள், எவை கத்தின?* சுட்டு அன்று, இன்று, என்று என, காலப்பொருளில் வரும்போது வலிமிகாது.எ.கா.: அன்று கிடைத்தது, இன்று பேசினான், என்று தருவாய்?* அத்தனை, இத்தனை, எத்தனை என்று எண்ணளவுப் பொருளில் வந்தாலும் வலிமிகாது.எ.கா.: அத்தனை பாடல்கள், இத்தனை புத்தகங்கள், எத்தனை தருவாய்?* நேரடியாகவே அளவுச் சுட்டாக வரும் சொற்களை அடுத்தும் ஒற்று வராது.எ.கா.: அவ்வளவு கெடுதல், இவ்வளவு சேர்ந்தது, எவ்வளவு கிடைக்கும்?* 'ஆறு' என்பது 'வழி' என்ற பொருளில் வருவது. அதைச் சேர்த்துச் சுட்டும்போது வலி மிகாது.எ.கா.: அவ்வாறு கூறினான், இவ்வாறு செய்தது, எவ்வாறு போகிறாய்? * 'ஆறு' என்பதற்கு மாற்றாக 'படி' என்ற சொல்லும் வரும். அது சுட்டில் வந்தால் வலிமிகும்.எ.கா.: அப்படிச் செய்தான். வினையெச்சச் சொல்லை அடுத்து வந்தால், வலிமிகாது.எ.கா.: சொன்னபடி கேள், உள்ளபடி கூறினான், வாய்க்கு வந்தபடி பேசாதே, கூறியபடி கொடுத்தான்.*பல, சில என்ற சொற்களை அடுத்து வலிமிகாது.எ.கா.: பல பாடல்கள், சில கேள்விகள், பற்பல செய்திகள். * எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்களைத் தவிர, வேறு எந்தப் பெயருக்கும் வலிமிகவேகூடாது.எ.கா.: ஒன்று கேட்டான், இரண்டு கிடைத்தது, மூன்று செலவுகள், நான்கு தூண்கள், ஐந்து காப்பியங்கள், ஆறு புத்தகங்கள், ஏழு படிகள், ஒன்பது கோள்கள்.* எண்ணுப் பெயர்கள் அடுத்த சொல்லோடு சேர்வதற்காக மாறி நிற்கையிலும் வல்லொற்று தோன்றாது.எ.கா.: ஒரு கடை, இரு கைகள், அறுசுவை, எழுபிறப்பு.* நீ என்ற சொல்லை அடுத்து வலிமிகாது.எ.கா.: நீ படித்தவன்.* கட்டளைப் பொருள் தரும் வினைச் சொல்லை அடுத்து ஒற்று தோன்றாது.எ.கா.: ஏறு கிளைமேல்,நகர்த்து சுமையை, விடு கவலையை.* பெயரும் வினையுமாக அமைந்த சொற்றொடர்களில் வலிமிகாது.எ.கா.: பூனை கத்தியது, ஆடு தாண்டியது, கிளி பேசியது.* வினையும் பெயருமாக அமையும் சொற்றொடர்களிலும் ஒற்று மிகாது.எ.கா.: கத்தியது பூனை, நின்றது தேர், பறந்தன பறவைகள்.* எச்சமாக நிற்கும் வினையை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தாலும் ஒற்றிடல் இல்லை.எ.கா.: கொடுத்த பாரி, செய்கின்ற செயல், பாடிய பாட்டு. (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் விதிவிலக்கு - ஓடாக்குதிரை).* இரண்டு பெயர்ச்சொற்கள் உம்மைத் தொகையாக வருகையில், வலிமிகக்கூடாது.எ.கா.: காடுகரை, பட்டிதொட்டி, சேர சோழ பாண்டியர்.* வினைத்தொகையை அடுத்து வலிமிகுதல் இல்லை. எ.கா.: ஊறுகாய், குடிதண்ணீர், வெடிகுண்டு.* ஒடு, ஓடு, அது, இருந்து, நின்று போன்றவை வேற்றுமை உருபுகளாகவும் பயிலும். அவற்றை அடுத்தும் வலிமிகாது.எ.கா.: அன்பொடு பேசினான், ஆற்றோடு போனது, எனது கை, வானிலிருந்து கொட்டியது, ஊரினின்று கிளம்பினான்.* ஆ, ஓ, ஏ போன்ற நெடில்கள் வினா, வியப்பு, விளிப்பு என்று பல பொருள்களில் தோன்றும். அங்கும் வலிமிகுதல் இல்லை.எ.கா.: அவனா சொன்னான்? கள்ளோ காவியமோ? அன்பே பெரிது, கண்ணே தூங்கு.* இரண்டு வினைச்சொற்கள் அடுத்தடுத்து வந்து எச்சமாக இருக்கையில், 'ந்து,' 'ண்டு,' 'ன்று' என்னும் மென் தொடர்க் குற்றியலுகரமாக முடிந்தால் வலிமிகாது.எ.கா.: எழுந்து சென்றான், கண்டுகொண்டான், மென்று தின்றான்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !