உள்ளூர் செய்திகள்

எண் கணித மேதை

சுப்பைய சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை). ராமானுஜனுக்குப் பிறகு, கணிதத்தில் சிறந்து விளங்கிய இந்திய மேதைகளில் முக்கியமானவர். பிறந்த தேதி: 5.4.1901.இடம்: தென்காசி அருகே வல்லம் கிராமம். தொடக்கக் கல்வி: குற்றாலம் அருகே இலந்தூர் கிராமம். உயர்நிலைப் பள்ளிக் கல்வி: எஸ்.எம்.எஸ்.எஸ். அரசுப் பள்ளி, செங்கோட்டை.இன்டர்மீடியட் கல்வி: ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, நாகர்கோவில்.இளங்கலைப் படிப்பு: திருவிதாங்கூர் மகாராஜா கல்லூரி.எளிய குடும்பத்தில் பிறந்தவர், எஸ்.எஸ்.பிள்ளை. மிகச்சிறிய வயதிலேயே, தாய் தந்தையை இழந்தார். பள்ளிக் கல்வியை, சாஸ்திரி என்ற ஆசிரியர் உதவியுடனும், பி.ஏ. கணிதப் படிப்பை பிறர் உதவியுடனும் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பி.ஏ. ஹானர்ஸ் படிப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி கட்டாயமாக இருந்தது. பி.ஏ.வில் பிள்ளை இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால், அவரால் ஆய்வுப் படிப்பில் சேர முடியவில்லை. அதற்கு சில ஆண்டுகள் முன்பு, கணிதமேதை ராமானுஜனுக்கு ஆய்வு மேற்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம், விதிகளைத் தளர்த்தி இருந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் சின்னதம்பிப்பிள்ளை, 'சாதாரண மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள விதிகளை, மேதைகளின் மீது திணிக்காதீர்கள்' என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வாதிட்டு, எஸ்.எஸ்.பிள்ளை ஆய்வுப் படிப்பில் சேர வழிவகுத்தார். இங்கிலாந்து கிங்ஸ் கல்லூரியில் ராமானுஜனின் சக ஆய்வு மாணவராக இருந்தவர் ஆனந்த ராவ். அவரிடம் எஸ்.எஸ்.பிள்ளை ஆய்வு மாணவராகச் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் எண்ணியலில் சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டார். எம்.எஸ்சி. முதுகலைப் பட்டம் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு பணியாற்றிய 12 ஆண்டுகளில், கணிதத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். 1941ம் ஆண்டில், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்திலும், 1942ம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சாதனைகள்: 1) எட்வார்ட் வேரிங் என்ற கணித அறிஞர், 1770ல் உருவாக்கிய புதிருக்குத் தீர்வு காண ஐரோப்பாவின் மாபெரும் கணித மேதைகள் முயன்று வந்தார்கள். ஓரளவிற்கே அவர்களால் தீர்வை எட்ட முடிந்தது. எஸ்.எஸ்.பிள்ளை அதற்குப் பொதுத் தீர்வு கண்டு, கணித உலகை பிரமிப்பில் ஆழ்த்தினார். ராமானுஜனுக்குப் பிறகு, உலகின் முக்கிய கணித அறிஞராகக் கருதப்பட்டார். 2) முதன்முதலாக, சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்திற்கும் மேலான D.Sc. (Doctor of Science) எனும் கவுரவத்தை பிள்ளைக்கு வழங்கியது. 3) எண்ணியலில், 76 அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஐன்ஸ்டைன், ஓபன்ஹைமர் உள்ளிட்ட மாமேதைகள், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு புரிய இவருக்கு அழைப்பு விடுத்தனர். சோகம்!அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசக் கணித மாநாட்டில் (ICM) சிறப்புரை ஆற்ற, 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று 'Star of Maryland' என்ற விமானத்தில் கிளம்பினார். அந்த விமானம் மறுநாள் கைரோ நகருக்கு அருகே விபத்துக்குள்ளனது. எஸ்.எஸ்.பிள்ளை உட்பட அதில் பயணித்த அனைவரும் மரணமடைந்தார்கள். இந்தியா, மீண்டும் ஒரு கணித மேதையை இளம் வயதிலேயே இழக்க நேரிட்டது. ராமானுஜன் கணிதக் கழகம் சார்பில், 2009ம் ஆண்டில் எஸ்.எஸ்.பிள்ளையின் கணித ஆய்வுகள், கடிதங்கள் போன்றவற்றை ஆர். பாலசுப்ரமணியன், ஆர். தங்கதுரை ஆகியோர், இரு புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். எஸ்.எஸ்.பிள்ளையின் கணித ஆய்வுகளை நன்கு அறிந்துகொள்ள, இந்தத் தொகுப்புகள் உதவும். - இரா. சிவராமன் நிறுவனர், பை கணித மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !