டெஸ்ட் டியூபில் ஓக் மரம்
உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தாவர இனங்களில் முப்பத்திமூன்று சதவீத மர வகைகள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றன. மருத்துவத்திற்குப் பயன்படும் தாவர இனங்களும் இந்த அழிவுப் பட்டியலில் அடக்கம்.அழியும் நிலையில் இருக்கக்கூடிய மரங்களை, தாவரங்களை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க, இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் சசெக்ஸ் (West Sussex) மாகாணத்தில் இருக்கும் மில்லேனியம் விதைப் பண்ணை, புது உத்தியைக் கண்டறிந்துள்ளது.அழியும் நிலையில் இருக்கக்கூடிய விதைகளை உலரவைத்து, அதைப் பக்குவப்படுத்தி எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமிக்கும் வேலையை இந்த விதை வங்கி செய்கிறது. எல்லா விதைப் பண்ணைகளும் விதைகளை உலரவைத்துத்தானே பாதுகாக்கின்றன? இதில் என்ன பிரமாதம்? உண்மைதான், ஆனால், எல்லா விதமான தாவரங்களின் விதைகளையும் உலரவைத்துப் பாதுகாக்க முடியாது. சில குறிப்பிட்ட இனங்களின் விதைகளை உலரவைத்தால் அவை அழிந்துவிடும்.உதாரணத்திற்கு, ஓக் மரங்களின் விதைகளை உலரவைத்தால் அந்த விதை அழிந்துவிடும். இப்படி உலரவைத்துப் பாதுகாக்க முடியாத தாவர இனங்களின் விதைகளைப் பாதுகாக்க, கிரையோபிரிசர்வேஷன் (cryopreservation) என்கிற புது தொழில்நுட்பத்தை மில்லேனியம் விதை வங்கியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயற்படுகிறது? முதலில், குறிப்பிட்ட விதையின் கரு மட்டும் தனியாகப் பிரிக்கப்படும். பின்னர் அதை மிகமிகக் குறைந்த வெப்பநிலையில், திரவ நைட்ரஜனில் உறைய வைத்துப் பாதுகாக்கப்படும். இந்த விதைகள் வெள்ளம், போர், கதிரியக்கம் போன்ற எவற்றாலும் பாதிக்கப்படாது என்பதுதான், இந்தக் கிரையோபிரிசர்வேஷன் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமே.இந்தத் தொழில்நுட்பம் அழிவின் விளிம்பில் இருக்கும் விதைகளைப் பாதுகாக்க, எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை உலகுக்கு காட்ட நினைத்த ஆராய்ச்சியாளர்கள், கிரையோபிரிசர்வேஷன் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட ஓக் மரத்தின் விதையிலிருந்து, மிகச் சிறிய ஓக் மரத்தை டெஸ்ட் டியூபில் வளர்த்துக் காட்டியிருக்கிறார்கள். பாரம்பரியம் மிக்க ஓக் மரத்தை மட்டுமல்ல; இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காபி, சாக்லேட், அவகாடோ போன்றவற்றின் விதைகளைக்கூட அதன் வீரியத்தன்மை குறையாமல் பாதுகாக்க முடியும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அழியும் நிலையில் இருக்கக்கூடிய தாவரங்களின் 75 சதவீத விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இந்த ஆராய்ச்சியாளர்கள் இறங்கியிருக்கிறார்கள்.- கவிதா பாலாஜி