உள்ளூர் செய்திகள்

பழனவெதிர்

பொங்கலுக்கு கரும்பு வைத்து படையலிடுவது தமிழர் வழக்கம். கரும்பை அதியமான் பரம்பரையினர் வேற்று தேசத்திலிருந்து கொண்டு வந்தனர். 'அரும் பெறல் அமிழ்தம் அன்னகரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே' (புறம் - 392) என்ற ஔவையாரின் பாடல் இதற்குச் சான்று. கரும்பிற்கு இன்னொரு பெயர் பழனவெதிர்.'நெறிமருப்பு எருமை நீல இரும்போத்துவெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப் பிணையலளே!(ஐங்குறுநூறு - -91)என்னும் பாடல்தான், கரும்பை பழனவெதிர் என்று குறிப்பிடுகிறது. பழனம் என்பது கழனி. வெதிர் என்பது மூங்கில். மூங்கிலைப்போல உள்ள கரும்பு கழனியில் விளைகிறது. அந்த கரும்பின் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவள் தலைவி. அந்த ஊரில் ஆம்பல் பூக்கள் நிறைந்த குளத்தில், கொம்பையுடைய ஆண் எருமைகள் நீராடி சிதைக்கின்றன.இந்தப் பாடலின் இன்னொரு பொருள்கரும்பு பூவிற்கு மணம் கிடையாது. அதன் மாலையை அணிந்த தலைவி இன்னும் மணம் ஆகாதவள். அந்த ஊரில் உள்ள ஆண் எருமைகள் மேயத்தகுந்தது,மேயத்தகாதது என்னும் அறிவுகூட இல்லாமல், குளத்திலுள்ள ஆம்பல் மலரைக் கடித்துக் கெடுக்கும். அவ்வெருமைகளைப் போலவே, ஊரில் உள்ள காவலர்களும், ஊர் மக்களும் நல்லது, கெட்டது என்று எதனையும் ஆராயாது செய்து கெடுப்பர். ஆதலால் நீங்கள் (தலைவன்) என்னைப் பார்க்க வந்தால், ஊர் மக்கள் நம் இருவரையும் ஊறுபடுத்தி (தீமை) விடுவர். ஆதலால் இப்போது நீங்கள் இங்கு வரவேண்டாம் என்கிறாள் தலைவி.கரும்பைக் குறிப்பிடும் சங்க இலக்கிய வரிகள்1. கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும் (ஐங்குறுநூறு- - 55)கரும்பு அரைக்கும் ஆலையின் ஒலிபோல், யானையின் பிளிறல் இருந்தது.2. கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலதுஇருஞ்சுவல் வாளை பிறழும் (புறநானூறு- - 322) கரும்பு எந்திரம் கரும்பை அரைக்கும் ஒலியைக் கேட்டதும், பக்கத்து வயலில் இருக்கும் வாளைமீன் புரண்டு ஓடும். 3. விசயம் அடூஉம் புகைசூழ் ஆலைதொறும்கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை 261,-162ஆம் வரிகள்)கரும்புச் சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகைசூழ்ந்த ஆலைகளில், அதன் இனிய சாற்றை விருப்பம் உடையவர் பருகுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !