உள்ளூர் செய்திகள்

தை வந்த கதை

இன்றுடன் மார்கழி மாதம் நிறைவுற்று, நாளை தை பிறக்கிறது. அதன் முதல் நாளை நாம் தைப்பொங்கலாகக் கொண்டாடுகிறோம். 'தை' என்ற சொல் எப்படித் தோன்றியது என்று சிந்தித்திருக்கிறீர்களா?இன்று நாம் பயன்படுத்தும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் நட்சத்திரங்களின் பெயர்களில் இருந்து தோன்றியவை. ஒவ்வொரு மாதத்திலும் ஒரு பௌர்ணமி வரும். அது எந்த நட்சத்திரத்தன்று வருகிறதோ அந்த நட்சத்திரப் பெயரே மாதப் பெயராகும். சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் முதல் மாதத்தின் பெயர் சித்திரை. விசாகத்தில் பௌர்ணமி வருவதால் அது வைகாசி. அதாவது விசாகம், வைசாகம்,- வைகாசி- என்று திரிந்துள்ளது.அனுஷம் என்ற நட்சத்திரப் பெயர் ஆனி எனும் மாதப் பெயரானது. பூராடம் என்ற நட்சத்திரத்தின் சரியான பெயர் 'பூர்வ ஆஷாடம்'. இதில் ஆஷாட என்பதே -ஆடி என்றானது. திருவோணத்தை ஸ்ரவணம் என்பர். இதுவே ஸ்ராவணி -- ஆவணி ஆயிற்று! முறையே பூரட்டாதி - புரட்டாசி, அஸ்வினி - ஐப்பசி, கிருத்திகை - கார்த்திகை ஆயின. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம் வடமொழியில் மார்கசீர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே தமிழில் திரிந்து மார்கஷி - மார்கழி ஆனது.பூச நட்சத்திரத்தின் இன்னொரு பெயர் திஷ்யம். இதுவே தைஷ்யம் - தைஷி - தைஇ - தை ஆனது. சங்க இலக்கியத்தில் 'தைஇ' என்றே சொல்லப்பட்டுள்ளது. உதாரணம் 'தைஇத் தண் கயம் போல' (ஐங்குறுநூறு 84). இதே போல் மகம் -- மாக -- மாசி ஆனது!உத்தர பல்குனி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி -- பங்குனி என்று ஆயிற்று. இப்படியாக வடமொழியில் அமைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் திரிந்து தமிழ் மாதப் பெயர்கள் தோன்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !