இளஞ்சிவப்பு நகரம்
இந்தியாவின் அழகு நகரமான ஜெய்ப்பூர். இதற்கு, 'இளஞ்சிவப்பு நகரம்' என்று ஒரு பெயர் உண்டு! ஜெய்ப்பூர் என்ற சொல்லின் பொருள், 'வெற்றியின் நகரம்'!ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான இதை மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் 1727ல் நிர்மாணித்தார். வங்காள தேசத்தைச் சேர்ந்த வித்யாதர் பட்டாச்சார்யா எனும் கட்டடக் கலை வல்லுநர் உதவியாக இருந்துள்ளார். இதுதான் 'வாஸ்து சாஸ்த்ரா' எனும் இந்தியக் கட்டடக் கலை விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம்!மகாராஜா ராம்சிங் ஆட்சியின்போது, 1876ல் ஜெய்ப்பூர் நகரைப் பார்வையிட பிரிட்டனில் இருந்து வேல்ஸ் இளவரசரும் விக்டோரியா மகாராணியும் வந்திருந்தார்கள். அப்போது, அவர்களை வரவேற்க, நகரம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. அரசாங்கக் கட்டடங்கள், பழைய அரண்மனைகள், புதிய கட்டடங்கள், உணவகங்கள் என எல்லாமே இளஞ்சிவப்பு! அப்போதிருந்து இது 'இளஞ்சிவப்பு நகரம்' ஆயிற்று!திருவிழாக்களுக்குப் பெயர் பெற்ற ஊர், ஜெய்ப்பூர். ஹோலிப் பண்டிகை நாளில் நடைபெறும் யானைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 'கண்கௌர் பூஜா' எனும் பண்டிகையும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர, சந்தைத் திருவிழா, தீஜ் போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் 'ஜெய்ப்பூர் வின்டேஜ் கார் ராலி' மிக முக்கியமானது. மேலும், இங்கு பலவிதமான பழைமைப் பொருட்கள், ஆபரணங்கள், தரை விரிப்புகள், மண்பாண்டங்கள், ரத்தினக் கற்கள் போன்றவற்றை விற்கும் பகுதிகளும் உள்ளன.ஜெய்ப்பூர் நகரத்தில் ஆமர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஜெய்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல், ஜந்தர் மந்தர், ஜல் மஹால் போன்ற புகழ்பெற்ற இடங்கள் இருக்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் சுற்றுப்பயணி ஆகி ஜெய்ப்பூரை ஒரு ரவுண்டு வரலாம்.ஹவா மகால்: அடுக்கடுக்காக ஐந்து நிலை சாளரங்கள் உள்ள அரண்மனைக் கட்டடம். இதனைக் காற்றின் அரண்மனை (Palace of Winds) என்று கூறுகிறார்கள்.ஜந்தர் - மந்தர்: இது ஒரு வானிலை ஆராய்ச்சி மையம். இங்குள்ள ஒரு கட்டட அமைப்பின் மூலம் சூரிய வெளிச்சத்தை வைத்து நேரத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம்.