உள்ளூர் செய்திகள்

வெற்றிக்குப் பரிசு:பல்லக்கு பவனி

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியிலும் வெள்ளிப் பதக்கங்களைத் தட்டி வந்துள்ளது. அணியின் மிக இளம் வயது ஆட்டக்காரரான லால் ரெம்சியாமி (18), மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர். மிசோரம், மூங்கில்கள் அதிகம் விளையும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. மூங்கில்களால் ஆன பல்லக்கு என்பது மிசோரம் மாநிலத்தின் மரபான பெருமைகளுள் ஒன்று. தேசிய அணியில் இடம்பெற்று, வெற்றியில் முக்கிய பங்காற்றிய ரெம்சியாமியை, அவ்வூர் மக்கள் மூங்கில் பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவரைக் கெளரவப்படுத்தியுள்ளனர்.சிறுநகரமான கோலாசிப்பைச் சேர்ந்தவர் ரெம்சியாமி. அவ்வூர் மக்கள் ஜாதி, மத, அரசியல் பிரிவினைகளைத் தாண்டி, ரெம்சியாமியின் வெற்றியைக் கொண்டாடினர். பள்ளி மாணவிகளின் பேண்ட் வாத்தியக்குழு இசை முழங்கியபடி முன்னால் செல்ல, மூங்கில் பல்லக்கில் அவரைச் சுமந்து, ஊர்முழுக்க வலம் வந்து, வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆங்காங்கே கூடி இருந்த மக்கள் மலர்கள் தூவி வாழ்த்தினர்.ரசிகர்களின் அன்பையும், வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட ரெம்சியாமியிடம், ஊர்மக்கள் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் நின்றனர். அவரது தந்தையோ, ஊர்மக்கள் ஒற்றுமையாக, தனது மகளுக்கு அளித்த கெளரவத்தை நினைத்து நெகிழ்ந்து நின்றார். இதற்கு முன்னர் மிசோ ஐடல் போட்டியின் வெற்றியாளரான கிரேஸ் லால்சன்ஹிமிக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொண்டாட் டத்தைப் பற்றி, ரெம்சியாமி கூறும்போது, “நான் கனவிலும் எதிர்பார்த்திராத கெளரவத்தை என் மக்கள் எனக்கு வழங்கி யிருக்கின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !