உள்ளூர் செய்திகள்

கதிரியக்க சிகிச்சை முன்னோடி!

மேரி க்யூரி (1867 - 1934)நாடு : போலந்துதுறை : இயற்பியல், வேதியியல்கண்டுபிடிப்பு : ரேடியம், பொலோனியம்சாதனை : இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு.மேரி க்யூரி, வாழ்நாள் சாதனையாளர். அவரது மேதைமை, அவரது கண்டுபிடிப்புகளில் மட்டுமல்ல; அதை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தியதிலும் அடங்கியிருக்கிறது.நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் யுரேனிய அணுவில் இருந்துதான் கதிர்வீச்சு வெளிவருகிறது என்பதை மேரி க்யூரி கண்டறிந்தார். அணுதான் பிளக்க முடியாத கடைசிப் பொருள் என்று அறிவியலாளர்கள் கருதிக்கொண்டிருந்த நிலையில், இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பிறகு அவர் தனது கணவருடன் இணைந்து, பொலோனியம் மற்றும் ரேடியம் ஆகிய இருபெரும் கதிர்வீச்சுத் தனிமங்களைக் கண்டறிந்தார்.புற்றுநோய் சிகிச்சை முறைகளை நோக்கி...இவ்விரு தனிமங்களும் புதியவைதான் என்று நிறுவும் நோக்கில், அவற்றைத் தனித்துப் பிரித்து, அவற்றின் அணு எடையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். பத்து ஆண்டுகள் கழித்தே ரேடியத்தை அவரால் தனித்துப் பிரிக்க முடிந்தது (1910). இக்காலகட்டத்தில், ரேடியத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் புற்றுநோய் செல்கள் விரைந்து அழிவதை அவர் கண்டறிந்தார். முதல் உலகப்போர் தொடங்கிய நிலையில், இராணுவ மருத்துவர்கள் துணையுடன் கதிரியக்கத்தைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தும் நடமாடும் மருத்துவமனைகளை (Mobile radiological units) உருவாக்கினார். இவை 'குட்டிக் க்யூரிகள்' (Petites Curies) என்று அழைக்கப்பட்டன. அங்கு கதிரியக்கம் கொண்ட ஊசி முனைகள், கதிரியக்க வாயுக்கள் ஆகியன புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காகப் பயன்பட்டன. இவை நோயாளியின் உடலில் பெரும் பின்விளைவுகளை உருவாக்கின என்பதை மறுப்பதற்கில்லை. இன்று துல்லியமான, மிகக் குறைந்த பின்விளைவுகள்கொண்ட கதிரியக்க மருத்துவமுறைகள் வந்துவிட்டன. கதிரியக்க மருத்துவத்துறை இன்று அடைந்துள்ள உயரத்தைத் தொடுவதற்கு மேரி க்யூரியின் இம்முயற்சிகளே தொடக்கப்புள்ளிகளாக இருந்தன என்றால் மிகையல்ல.க்யூரி ஆராய்ச்சி நிறுவனம்பாரிஸ் பல்கலைக்கழகமும், பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ரேடியம் ஆராய்ச்சி நிறுவனத்தை (Institut du Radium) 1909-ஆம் ஆண்டு தொடங்கின. மேரி க்யூரியும், க்ளோட்யூஸ் ரெகோ (Claudius Regaud) என்ற மருத்துவரும் இணைந்து, 1920-ஆம் ஆண்டில் க்யூரி பெளண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை போன்ற தீர்வுகளை முன்வைத்து இந்நிறுவனம் செயற்பட்டு வந்தது. ரேடியம் ஆராய்ச்சி நிறுவனத்தையும், க்யூரி பெளண்டேஷனையும் 1970-ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து, க்யூரி ஆராய்ச்சி நிறுவனம் (Curie Institute) உருவாக்கப்பட்டது. 3000த்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் இந்நிறுவனம், மிக அரிதாகத் தோன்றும் சிலவகைப் புற்றுநோய்கள் உட்பட அனைத்து வகைப் புற்றுநோய்களுக்கும் உலக அளவில் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது.அயோடின்- 131, ஸ்ட்ரோன்டியம்- 89 மற்றும் ரேடியம் -223 உட்பட பல கதிரியக்கத் தனிமங்களைக்கொண்டு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கதிரியக்கச் சிகிச்சையை இன்னும் எப்படி எல்லாம் சிறப்பாக வளர்த்தெடுப்பது என்பது குறித்த ஆய்வுகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது. நாளை மறுநாள் புதன்கிழமை, மேரி க்யூரியின் 151 பிறந்த நாள்.- பா.சரவணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !