உள்ளூர் செய்திகள்

மழைப் பொழிவை அளக்கலாம் வாங்க

வானிலைச் செய்திகள் கேட்டிருப்பீர்கள். அதில், 'இன்று எட்டு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது' என்று சொல்வதையும் கவனித்திருப்பீர்கள். 'தண்ணீர் என்பது திரவம். அதை லிட்டர் அளவில்தானே குறிப்பிட வேண்டும்? ஏன் மீட்டர் அளவில் சொல்கிறார்கள்?' என்று யோசித்திருக்கிறீர்களா? அப்புறம் 'மழையை எப்படி அளக்கிறார்கள்?' என்கிற சந்தேகமும் உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? வானிலை ஆராய்ச்சி மையங்களில் Rain gauge என்று ஒரு கருவி இருக்கும். நாம் அதை மழைமானி என்று சொல்வோம். அதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். இது கொஞ்சமாகப் பெய்யும் மழையை அளந்து பார்க்க உதவும். பாட்டில் நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்தால் என்ன செய்வது என்று கேட்பீர்களா? அப்படியானால், வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதை, செய்திகளில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.நீங்களே விளையாட்டாக ஒரு மழைமானியைச் செய்து, மழையை அளந்து பார்க்கலாம். 1. ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பாட்டிலின் அடிப்பாக விட்டம் என்ன அளவு என்று பாருங்கள். அதே அளவு விட்டத்தை வாயாகக் கொண்ட புனல் (funnel) ஒன்றை எடுங்கள். புனலை பாட்டிலின் மேலே பொருத்தி வையுங்கள்.2. இதை வெட்டவெளியான ஓரிடத்தில் பெய்யும் மழை நீர் தடை இல்லாமல் விழும்படியாக வையுங்கள். உங்கள் வீட்டு மொட்டை மாடி வசதியாக இருக்கலாம். மழை பெய்யும்போது மழைமானி அசையக் கூடாது. கீழே விழுந்துவிடக் கூடாது. அப்படி வைக்க வேண்டும். 3. 24 மணிநேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி இருக்கட்டும். அதன் பிறகு, அடிக்குச்சியால் (Scale) மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்கவும். எத்தனை மில்லி மீட்டர் இருக்கிறதோ அதுவே அந்தப் பகுதியில் பெய்த மழையின் அளவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !