பொறுப்பான இளைஞர்
தெற்காசிய நாடான தாய்லாந்தில் அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மன்னராட்சி நடைபெறுகிறது. சக்ரி (Chakri) என்ற வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், பரம்பரையாக தாய்லாந்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார்கள். இந்த வம்சம் 1782ம் ஆண்டில் இருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து வருகிறது. இதன் முதல் மன்னர், முதலாம் ராமா என்று அழைக்கப்பட்டார். தற்போது பத்தாம் ராமாவின் ஆட்சி நடந்து வருகிறது. 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம்வரை, தாய்லாந்தில் பரிபூரண முடியாட்சி முறை நடந்து வந்தது. அரசியல் அமைப்புச் சட்டம் இல்லாத பிற்போக்குத்தனமான ஆட்சி தங்கள் நாட்டில் நடப்பதை விரும்பாத இளைஞர்கள், ராணுவத்தின் உதவியோடு, ரத்தம் சிந்தாமல் ஒரு சிறிய புரட்சியை நடத்தினார்கள். இதன் விளைவாக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான மன்னராட்சி முறைக்கு மாற, சக்ரி வம்சம் ஒத்துக்கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும், அவரது அமைச்சரவையும், மன்னரின் தலைமைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தும் அமைப்பு உருவானது. என்றாலும், 1932ல் தொடங்கி இன்றுவரை, தாய்லாந்தில் ராணுவத் தளபதிகளின் கைகள் அவ்வப்போது ஓங்குவதும், விளைவாக பிரதமர்கள் தூக்கியெறியப்பட்டு, தளபதிகளே பிரதமராவதும் தொடர்கதை. தற்போதுகூட தாய்லாந்தின் பிரதமர் பொறுப்பை, ராணுவத் தளபதியாக இருந்த பிராயுத் சன்நோச்சா என்ற நபர்தான் வகித்து வருகிறார். மன்னராட்சியும், ராணுவமும் ஒருங்கிணைந்த நாட்டில், மக்களின் தனியுரிமைகள் எப்படி இருக்கும்? கஷ்டம்தான்!தாய்லாந்தின் மிகப் பழமையான, பெருமைமிக்க பல்கலைக்கழகம் சுலலோங்கார்ன் (Chulalongkorn) பல்கலைக்கழகம். தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சக்ரி வம்சத்தின் ஆறாம் அரசரான, மன்னர் ஆறாம் ராமா நிறுவினார். அவரது வெண்கலச் சிலை பல்கலைக்கழகத் திடலில் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்க நாளிலும், மாணவர்கள் பல்கலைக்கழகத் திடலில் அணிவகுத்து நின்று, மன்னர் ஆறாம் ராமாவின் உருவச்சிலை முன்பு மண்டியிட்டு வணங்குவது மரபு. அப்போது மாணவர்கள், 'பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காப்போம் என்றும்; தெற்காசியாவின் முக்கிய சக்தியாக விளங்கக்கூடிய, பேரந்தஸ்தும், செல்வச் செழிப்பும் மிக்க அரச குடும்பத்திற்கும், அதைப் போற்றிப் பாதுகாக்கும் ராணுவத்திற்கும் கீழ்ப்படிந்து நடப்போம்' என்றும் உறுதி ஏற்பார்கள். சென்ற ஆண்டு, இரண்டு மாணவர்கள் மண்டியிட்டு வணங்க மறுத்ததுடன், உறுதி ஏற்க மறுத்தார்கள். அந்த மாணவர்களில் ஒருவர் பெயர், நெட்டிவிட் சோட்டிஃபட்பைசல் (Netiwit Chotiphatphaisal). அரசியல் அறிவியல் படிப்பில் சேர்வதற்கு சில காலம் முன்னர், நெட்டிவிட், 'மன்னர் ஆறாம் ராமா, குடிமக்களைத் தன் முன்னால் மண்டியிட நிர்பந்திப்பது, கொடூரமான, சுயமரியாதைக்கு எதிரான செயல் எனக் கருதினார்' என்றும், 'அதனால் மண்டியிடும் முறையை ஒழித்தார்' என்றும் ஒரு நூலில் படித்தார். அரச கட்டளையையும் மீறி, அந்த வழக்கம் இன்றைக்கும் தொடர்வதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்று சிந்தித்தார் நெட்டிவிட்.அடக்குமுறையை ஏவக்கூடிய, தனிஉரிமையை சற்றும் மதிக்காத, இத்தகைய மரபுகளைக் காப்பாற்றுவதில், அரச குடும்பத்துக்கு நிகராக ராணுவ அமைப்புக்கும் கணிசமான பங்கு இருப்பதாக நெட்டிவிட் கருதினார். சக மாணவர் ஒருவருக்கு இந்த விவரங்களைப் புரியவைத்து, தனது புறக்கணிப்பு நடவடிக்கையில் கூட்டு சேர்த்துக்கொண்டார். நெட்டிவிட் தனது ஓய்வுநேரத்தில், சுலக் சிவரக்சா (Sulak Sivaraksa) என்ற புகழ்பெற்ற பௌத்த சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர்களுக்காக நிறுவிய நூல் வாசிப்பு நிலையத்தில், நூலகராகப் பணியாற்றுகிறார். பள்ளி நாட்களில், தனது சக மாணவர்களுடன் இணைந்து, மனப்பாடம் செய்யும் வழக்கத்துக்கு எதிரான ஓர் இயக்கத்தை நடத்தினார். அந்த இயக்கம் இன்றைக்கு, 'சையாமின் விடுதலைக்கான கல்வி' என்ற முக்கிய மாணவர் இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2014ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, ராணுவத் தளபதி பிராயுத் சன்நோச்சா தூக்கியெறிந்து பிரதமராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டபோது, ராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் இவரது குழுவினர் பங்கேற்றார்கள். நாட்டில் ஜனநாயகம் மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் போராட்டத்தை 2015ல் ஒருங்கிணைத்தார். இன்றைக்கு சுலலோங்கார்ன் பல்கலைக்கழக மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நெட்டிவிட். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் பிராயுத், 'தீவிர சிந்தனைகள் நல்லதல்ல' என்றும் நெட்டிவிட்டின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது நடவடிக்கைகளை 'நிறுவனத்துக்கு அவப்பெயர்' என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 'யார் நாட்டுக்கு அவமானச் சின்னம்? மூன்று ஆண்டுகளாக நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் பிரதமரா அல்லது நானா?' என சமூக வலைதளங்களில் தனது ஆயிரக்கணக்கான நண்பர்களிடம் தள்ளிவிட்டார். பொறுப்பான இளைஞர்!