எரிமலை விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை
மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவின் அருகில் அமைந்துள்ள நாடு கௌதமாலா (Guatemala). இதன் தலைநகரும் கௌதமாலாதான். இந்நகரிலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில், 'ஃப்யூகோ' (Fuego) எனும் எரிமலை உள்ளது. கடந்த, 3ஆம் தேதி, இந்த எரிமலை வெடித்துச் சிதறி, நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் வாரியிறைத்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மிக அதிக அளவாகும்.பொதுவாக எரிமலை நெருப்புக்குழம்பு மெதுவாகவே பரவும். அப்படி மெதுவாகப் பரவிய நெருப்புக்குழம்பை வேடிக்கை பார்க்க மக்கள் பெருமளவில் திரண்டனர். சாலையில் ஓடி வந்த நெருப்புக் குழம்பைப் பலர் படம் பிடித்துக் கொண்டும், வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், மக்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. கௌதமாலாவின் சாலைகள், மரங்கள் வீடுகள் என்று எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவந்த நெருப்புக்குழம்பிலிருந்து, அதிக புகையும் சாம்பலும் வெளியானது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நெருப்புக்குழம்பினால் ஏற்பட்ட தீவிபத்துகளிலும் மக்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தொடக்கத்தில் 25 பேர் வரை இறந்துபோயிருக்கலாம் என்று நம்பப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் மேலும் பல உடல்கள் கிடைத்தன. இதுவரை சுமார் 110 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் வரையில் தேடப்பட்டு வருகிறார்கள். எனவே பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.அந்நாட்டின் பேரிடர் மீட்புத் துறையின் தகவல்களின்படி 17 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றும், 12 ஆயிரம் மக்கள் வரை அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்கள் உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. நிறைய தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, உடை போன்ற அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றனர்.