பரபரக்கும் ஜவுளி நகரம்!
ஜப்பானின் டோக்கியோவிலுள்ளது நிப்போரி மாவட்டம். இந்நகரம் அதிக விலைமதிப்பு கொண்ட உடைகள், நூல் இழைகளுக்கு புகழ்பெற்றது. இந்த மாவட்டத்திலுள்ள கடைகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம், அதிகரித்து வருகிறது.இந்த நகரில் 90 கடைகளுக்கு மேல் அமைந்துள்ளன. ஒவ்வொரு கடையிலும் குறிப்பிட்ட இழைகளை ஸ்பெஷலாக தயாரித்து விற்கிறார்கள். ஜப்பானிய பாரம்பரிய உடையான கிமோனா, அதற்கான தயாரிப்பு பொருட்கள் இங்கு பிரபலமானவை.“நாங்கள் இங்கு உடைகளுக்கான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டன்களை விற்கிறோம். இவை சாதாரண பிளாஸ்டிக், உலோகம் முதல் முத்து, தந்தம் ஆகியவற்றிலும் செய்யப்பட்டவை உண்டு” என்கிறார் அங்குள்ள கடைக்காரர்களில் ஒருவரான யாஷூனோரி குமாகய். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்த தையல்பொருட்களை இங்கு தவிர வேறெங்கும் பார்த்துவிட முடியாது. பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி அத்தனை பொருட்களும் கொட்டிக் கிடக்கின்றன.ஜப்பான் பொருட்களோடு வெளிநாட்டுப் பொருட்களையும் காட்சிப்படுத்துவதால் இவற்றைப் பார்க்கவே பெருங்கூட்டம் குவிகிறது. அருகில் நார்டியா விமானநிலையம் இருப்பது இந்த ஜவுளி நகரம் புகழ்பெற முக்கியமான காரணம். அதிக விலைமதிப்பு கொண்ட நூல் இழைகள் என்றாலும், தைவான் நாட்டைவிட தரமான இழைகளை குறைவான விலைக்கு இங்கு வாங்க முடியுமாம்.